Published:Updated:

'இதே 'ஆயுத' பூஜையை அடுத்த ஆண்டும் செய்வேன்!'  -அர்ஜுன் சம்பத்

'இதே 'ஆயுத' பூஜையை அடுத்த ஆண்டும் செய்வேன்!'  -அர்ஜுன் சம்பத்
'இதே 'ஆயுத' பூஜையை அடுத்த ஆண்டும் செய்வேன்!'  -அர்ஜுன் சம்பத்

'இதே 'ஆயுத' பூஜையை அடுத்த ஆண்டும் செய்வேன்!'  -அர்ஜுன் சம்பத்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என காலரைத் தூக்கிவிட்ட காலம் போய், ' அடுத்து என்ன நடக்குமோ?' என்ற அச்சத்தில் கோவை மக்களை ஆட்படுத்தி வைத்திருக்கிறது மத மோதல் விவகாரங்கள். ஆயுத பூஜை அன்று துப்பாக்கிகளோடு போஸ் கொடுத்த இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவுகளின்கீழ் வழக்குகள் பாய்ந்திருக்கிறது

அர்ஜுன் சம்பத்திடம் பேசினோம். 

ஆயுத பூஜை கொண்டாட்டம் என்பது உங்கள் விருப்பம். ஆனால், துப்பாக்கிகளைக் காட்சிப்படுத்தியது சரிதானா? 

" என்னுடைய வீட்டில் நான் ஆயுத பூஜையைக் கொண்டாடுகிறேன். இதில் அவர்களுக்கு எங்கிருந்து சங்கடம் வந்தது என்று புரியவில்லை. என்னிடம் உள்ள துப்பாக்கி எப்படிப்பட்டது என்றுகூட ஆராயாமல் புகார் கொடுத்திருக்கிறார்கள். என் மகன் ரைபிள் கிளப்பில் இருக்கிறார். அது ஓர் ஏர் கன். அதற்கு லைசென்ஸ் தேவையில்லை. பூஜையில் வைத்த வாளைப் பற்றி பேசுகிறார்கள். அது என்னுடைய தொண்டர்கள் பரிசாக அளித்தது. நான் ஆயுத பூஜையைக் கொண்டாடுவதுதான் அவர்களுக்கு சங்கடத்தைத் தருகிறது. முன்பு அரசுப் பள்ளிகளில் சரஸ்வதி பூஜையும் அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையும் கொண்டாடினார்கள்.

உடனே பெரியார் திராவிடர் கழகம், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சில நக்சல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து, 'ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது' என நீதிமன்றம் வரையில் சென்று உத்தரவு வாங்கி வந்தார்கள். அதையே அரசின் சார்பில் சுற்றரிக்கையாகவும் வெளியிடப்பட்டது. மேட்டூர் காவல்நிலையத்தில் ஆயுத பூஜை கொண்டாடியபோது, அங்கு புகுந்து தாக்குதல் நடத்தினார்கள் பெரியார் திராவிடர் கழகத்தினர். பன்னெடுங்காலமாக தமிழர்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடி வருகின்றனர். அரசின் சுற்றரிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறேன். தொழிலை நேசிக்கும் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும்கூட ஆயுத பூஜையைக் கொண்டாடுகின்றனர்". 

ஆனால், கோவை போன்ற பதற்றம் நிறைந்த மாவட்டத்தில், இதுபோன்று படங்களை வெளியிடுவதை எப்படி ஏற்க முடியும்? 

" என்னுடைய முகநூல் பக்கத்தில் அந்தப் படத்தை வெளியிட்டேன். உடனே, ஆயுதக் கலாச்சாரத்தை நான் ஊக்குவிப்பதாக புகார் கொடுத்துள்ளனர். என்னோடு பழகியவர்களுக்குத் தெரியும். ஆயுதக் கலாச்சாரத்தின் மீது ஒருபோதும் எனக்கு நம்பிக்கை இல்லை. கோவையில் குண்டுவெடிப்பு கைதி ஒசீர் இறந்து போனதற்காக சிறப்பு விமானத்தில் வந்த இஸ்லாமிய தலைவர்கள், அப்துல் கலாம் இறந்தபோது இதுபோன்று சிறப்பு விமானத்தில் வந்தார்களா? ஒசீருக்காக ஊர்வலம் நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

அதேபோல், கோவையை கூடாரமாகப் பயன்படுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை காவல்துறை கண்டுகொள்ளவில்லை. தேசிய புலனாய்வு அதிகாரிகள்தான் வந்து விசாரணை நடத்துகிறார்கள். கைது செய்கிறார்கள். நான் ஆயுதம் வைத்து பூஜை செய்து கலவரத்தை தூண்டுவதாக உள்நோக்கத்துடன் புகார் அளித்துள்ளனர். இதனை காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளக் கூடாது. இதேபோல் பூஜை நடத்தியதாக கார்த்தி சிதம்பரம் மீதும் புகார் கொடுக்க இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்". 

உங்கள் மீதான வழக்குகளில் கைது செய்யப்படலாம் என்கிறார்களே? 

"ஆயுத பூஜை நடத்தியதற்காக அரெஸ்ட் செய்கிறார்கள் என்றால் செய்து கொள்ளட்டும். கைதுக்கெல்லாம் நான் பயப்படுபவன் அல்ல. ராணுவ முகாமில் துப்பாக்கிகளை வைத்து நடந்த பூஜையில் பிரதமர் கலந்து கொண்டார். அதற்காக அவர் மீது வழக்கு போடுவார்களா? ராமலீலா மைதானத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வில் அம்பு பரிசாகக் கொடுத்தார்கள். இதை எப்படிப் பார்க்கிறார்கள். தமிழர்கள் வீட்டில் எதாவது ஓர் ஆயுதத்தை வைத்துத்தான் பூஜை நடத்துவார்கள். இது காலம்காலமாக நடந்து வரும் மரபு. அடுத்த ஆண்டும் இதேபோல் ஆயுதங்களை வைத்து பூஜை செய்வேன். என் மீதான வழக்குகளை சட்டப்படியே சந்திப்பேன்".

-ஆ.விஜயானந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு