Published:Updated:

கடவுளின் தேசத்தில் தெறிக்கும் ரத்தம்... கொலைக்களமாகும் கேரளா !

கடவுளின் தேசத்தில் தெறிக்கும் ரத்தம்... கொலைக்களமாகும் கேரளா !
கடவுளின் தேசத்தில் தெறிக்கும் ரத்தம்... கொலைக்களமாகும் கேரளா !

கடவுளின் தேசத்தில் தெறிக்கும் ரத்தம்... கொலைக்களமாகும் கேரளா !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!


கண்ணூர்: கேரள மாநிலத்தில் சமீப காலமாக படுகொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதுவும், அரசியல் சார்பான கொலைகள் அதிகமாக நடக்கத் தொடங்கி இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும்... கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலமாக கருதப்படும்... சமூக பொருளாதார மட்டத்தில் உயர்ந்து நிற்கும்... எளிமையான அரசியல்வாதிகளை கொண்டதாக சொல்லப்படும்... இப்படி நிறைய பெருமைகளை கொண்ட கேரளாவில் தான் அரசியல் கொலைகள் அதிகம் நடக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா?. நம்பித்தான் ஆக வேண்டும். அது தான் உண்மை.

இந்தக் கொலைகளை நடத்துவதாக சொல்லப்படுபவர்கள் இடதுசாரிகளான கம்யூனிஸ்ட் கட்சியினரும், வலதுசாரிகளான இந்து மதக்குழுவினரும் என சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த மோதல் போக்கு நிலவி வருகிறது. இப்போது இது உச்சத்தை எட்டத்துவங்கியிருக்கிறது.
கேரள சட்டமன்றத்தில் இதுவரை பி.ஜே.பி பிரதிநிதித்துவம் எதையும் பெற்றதில்லை. நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அந்த மாநிலத்தில் பி.ஜே.பி வெற்றி பெற்றதில்லை. ஆனால், தற்போது அங்கு காலூன்றும் முயற்சியில் அக்கட்சி இறங்கி உள்ளது. அதனால், மாநிலத்தின் ஆளுங்கட்சியான இடதுசாரி கூட்டமைப்புக்கு எதிராக போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என அதிரடி அரசியலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் பா.ஜ தொண்டர்களுக்கும், கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் இடையே அடிக்கடி நேரடி மோதல்கள் உச்சத்தை எட்டியிருக்கின்றன.

இந்த மோதல்கள் காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் பதற்றம் நிலவத் தொடங்கி உள்ளது. இந்த மோதல்களில் சில சமயம் கைகலப்பு, அடிதடி ஏற்பட்டு வருகின்றன. அதிகப்படியான அரசியல் கொலைகள் நடந்த கண்ணூரில் தான் இப்போதும் கலவரம் வெடித்திருக்கிறது.


கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி கண்ணூர் மாவட்டத்தில் 52 வயதுடைய மார்க்சிஸ்ட் தொண்டரான மோகனன் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். தனது கள்ளுக்கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்த மோகனனை குறிவைத்து முகமூடி அணிந்த நிலையில் வந்த மர்ம நபர்கள், அவரை வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பினர். இந்தச் சம்பவத்தை தடுக்க முயன்ற உள்ளூர் மார்க்சிஸ்ட் நிர்வாகியான அர்ஜுனன் என்பவர் பலத்த வெட்டுக் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த மே மாதத்தில், பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், கேரளாவில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதை வழக்குகள் உறுதிப்படுத்துகின்றன. கண்ணூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 325 அடிதடி வழக்குகள் பதிவு செய்யபட்டு இருப்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் பெரும்பாலானவை அரசியல் சார்ந்த வழக்குகள் என்றும், அடிக்கடி அரசியல் கட்சியினரிடையே மோதல்கள் நடப்பதாகவும் அவர் கவலையுடன் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரமேஷ் சென்னிதாலா இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்தார். இதுபற்றி பேசிய அவர், ‘‘கடந்த மே மாதத்தில் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்த பின்னர், வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. கடந்த சில மாதங்களில் மட்டும் 70 படுகொலைகள் நடந்து இருக்கிறது. இதில், பெரும்பாலானவை அரசியல் காரணத்துக்காக நடந்தவை என்பது ஆளங்கட்சியினருக்கும் தெரியும். ஆனால், இதனை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வலியுறுத்தியதையும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது’’ என்கிறார் ஆற்றாமையுடன்.

மோகனன் படுகொலை செய்யப்பட்ட 48 மணி நேரத்தில் அதற்குப் பழிக்குப் பழியாக ஆர்.எஸ்.எஸ். தொண்டரான ரஜித் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். பெட்ரோல் பங்க்கில் அவர் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கும்பல் அவரை வெட்டியது. இதில் உயிருக்குப் போராடிய அவரை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

ரஜித் படுகொலையானது மோகனனின் கொலைக்கு பழிவாங்க திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவமாகவே காவல்துறையினர் கருதுகின்றனர். முதல்வர் பிரனயி விஜயனின் வீட்டில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இந்தக் கொலைச் சம்பவம் நடந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் போலீஸார் பலத்த பாதுகப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். ரஜித்தின் தந்தை உத்தமன் என்பவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2012-ல் அரசியல் காரணமாக படுகொலை செய்யப்பட்டவர் என்பது கவனத்துக்கு உரியது.

இதனிடையே, இந்தச் சம்பவத்துக்கு மார்க்சிஸ்டுகளே கரணம் என பி.ஜே.பி அறிவித்துள்ளது. அத்துடன், இந்த படுகொலையை கண்டித்து இன்று ஒருநாள் கடையடைப்பும் நடத்தப்பட்டது. கடையடைப்பு காரணமாக கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பெரும் பதற்றம் நிலவியது.

ரஜித் படுகொலையாகி அவரது ரத்தத்தின் சுவடுகள் காய்வதற்கு முன்பாகவே இன்று மற்றொரு படுகொலை நடந்துள்ளது. கண்ணூர் மாவட்டம் பூவலப்பு என்ற இடத்தின் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகியான ஃபாரூக் எனபவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் இந்தச் சம்பவம் நடந்த இடத்தின் அருகில் போலீஸாரும் பொதுமக்களும் நின்றபோதிலும் ஒருவரும் தடுக்க முயற்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஃபாரூக்கை அபுல் ராஃப் என்பவர் படுக்கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டதாக தெரியவந்துள்ளது. இந்தப் படுகொலையின் பின்னணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இருப்பதாக எஸ்.டி.பி.ஐ கட்சி குற்றம் சாட்டி இருக்கிறது. இப்படி அடுத்தடுத்து நிகழும் அரசியல் கொலைகளைத் தடுக்க வழி தெரியாமல் கேரள காவல்துறை விழி பிதுங்கி வருகிறது.

மக்களுக்காக இயங்க வேண்டியதும், மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டியதும் அரசியல் தலைவர்களின் முக்கிய பணி. மக்களின் நலனுக்காக இயங்கா விட்டாலும், மக்களை பாதிக்கும் வகையில் இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடாமலாவது இருக்கலாம்.

- ஆண்டனிராஜ்   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு