Published:Updated:

வீரத்தின் அடையாளமாகத் திகழ்ந்த கட்டபொம்மன்

Vikatan Correspondent
வீரத்தின் அடையாளமாகத் திகழ்ந்த கட்டபொம்மன்
வீரத்தின் அடையாளமாகத் திகழ்ந்த கட்டபொம்மன்
வீரத்தின் அடையாளமாகத் திகழ்ந்த கட்டபொம்மன்

வியாபார நோக்கிலே இந்தியாவிற்குள் காலூன்றி நம்மை ஆள நினைத்த வெள்ளையர்களுக்கு எமனாய் திகழ்ந்த வீரத்தின் விளைநிலம் தான் வீரபாண்டிய கட்டபொம்மன். இன்றைக்கு அவரின் நினைவு நாள். அவரை நினைவு கூறும் இந்நாள் இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படும் நாள்.

பிறப்பு

பொம்மு வம்சாவளியில் வந்த ஜெகவீர கட்டபொம்மனுக்கும், ஆறுமகத்தமாளுக்கும் தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிஞ்சியில்  ஜனவரி மாதம் 3-ம் தேதி, 1760-ம் ஆண்டில் பிறந்தவர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.  இவரது இயற்பெயர் ‘வீரபாண்டியன்’ என்பதாகும்.கெட்டி   பொம்மு என்றும் கூறுவர்.  கட்டபொம்மன் என்பது இவரது வம்சாவழியைக் குறிக்கும் அடைமொழியாகும். பூர்வீகம் ஆந்திரா மாநிலம் (பெல்லாரி). ஆனால் இவர் தமிழனாகவே வாழ்ந்தார்.

வெள்ளயனை எதிர்த்த வீரனாக

தமிழர்களை அடிமைப்படுத்தி தமிழ்நாட்டை ஆட்சிசெய்யலாம் என நினைத்துக்கொண்டு இருந்த வெள்ளையர்களை எதிர்த்து  அவர்களை கதிகலங்க வைத்த வீரன் கட்டபொம்மன். கி.பி. 1797-ல் முதன்முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 - 1798-ல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று தெறித்து ஓடினார். ஜாக்சன் வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார்.
கட்டபொம்மனை அவமானப்படுத்த வேண்டும் என கங்கணம் கட்டிகொண்டு திரிந்தான் ஜாக்சன் துரை. ஆனால் கட்டபொம்மன் அனைத்தையும் பந்தாடினார். வரியை கேட்டு வந்த துரையிடம் மாமனா? மச்சானா? என வீர முழக்கமிட்டார் பொம்மன்.

கட்டபொம்மனின்  தனிப்பட்ட வாழ்க்கை

வீரபாண்டிய கட்டபொம்மன், ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். அவருக்கு ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். கட்டபொம்மன் வீரசக்கம்மாள் என்பவரை மணமுடித்தார். அவருக்கு முப்பது வயதாகும் வரை, அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன் அவர்கள், பாளையக்காரராக இருந்து வந்ததால், தந்தைக்கு உதவியாக இருந்தார், கட்டபொம்மன். பின்னர், பிப்ரவரி 2-ம் தேதி, 1790-ம் ஆண்டில், 47-வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பை ஏற்றார். இவர்களுக்குப் பிள்ளைப்பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

இறக்கும் வரை வீரனாக வாழ்ந்த கட்டபொம்மன்

மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளி என்று பழி சுமத்தினான்  வெள்ளையன். கட்டபொம்மன் தன்  மீது சுமத்தப்பட்ட “குற்றங்களை’  மறுக்கவும் இல்லை. உயிர்ப்பிச்சை கேட்கவும் இல்லை.  கம்பீரத்தோடு “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, வெள்ளைத் தோல்களுக்கு  எதிராக பாளையக்காரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று வீர முழக்கம்  முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

தூக்கு மேடை ஏறியபோதும், அவரது பேச்சில் வீரமும், தைரியமும் நிறைந்திருந்தது. இது சுற்றி நின்ற அனைவரின் உள்ளத்திலும்  பெருமையை  உருவாக்கியது. தூக்குமேடை ஏறியபோது, “இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டு நான்  செத்திருக்கலாம்’ என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார். தூக்குக் கயிற்றுக்கு புன்னகையுடன் முத்தமிட்டார் கட்டபொம்மன்.

இறப்பு

அக்டோபர் 1, 1799-ல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் கோழைத்தனமாக  வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டான்
வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவின்படி, அக்டோபர் 19-ம் தேதி, 1799-ம் ஆண்டில் கயத்தாறு கோட்டையிலே ஒரு ஒரு புளிய மரத்திலே  தூக்கிலிடப்பட்டார்.

கட்டபொம்மனை நினைவுகூறும் சின்னங்களும்,மரியாதையும்.

கயத்தாறில் கட்டபொம்மன் நினைவிடம் உள்ளது.கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு பல்வேறு தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கவிதைகளில் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலேயர்களை இந்திய மண்ணில், ஆரம்ப காலத்திலேயே எதிர்த்த சுதந்திரப் போராளிகளுள் ஒருவராக இன்றளவும் இந்திய அரசாங்கத்தால் கருதப்படுகிறார்.1974-ல், தமிழக அரசு அவரது நினைவாக ஒரு புதிய நினைவுக் கோட்டை கட்டியது. மெமோரியல் ஹால் முழுவதும் அவரது வீரச்செயல்களையும், வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வண்ணமாக, சுவர்களில் அழகான ஓவியங்கள் இடம்பெற்றிருக்கும். பிரிட்டிஷ் சிப்பாய்களின் கல்லறைகூட கோட்டை அருகே காணப்படுகின்றன.அவரது அரண்மனைக் கோட்டையின் எச்சங்கள் இன்றளவும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தால் பாதுகாக்கப்படுகின்றன.அவர் தூக்கிலிடப்பட்ட இடமான திருநெல்வேலிக்கு அருகேயுள்ள கயத்தாறில், அதாவது இன்றைய NH7 சாலையில், கட்டபொம்மனுக்கு மற்றுமொரு நினைவுச்சின்னம் இருக்கிறது. அவரது வீரத்தைப் போற்றும் விதமாகவும், நினைவுகூறும் விதமாகவும் தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டனில் ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. கட்டபொம்மனை கௌரவிக்கும் விதமாக, அவர் தூக்கிலிடப்பட்டு இருநூறாம் ஆண்டு விழாவின் நினைவாக அக்டோபர் 16, 1799-ம் ஆண்டில், இந்திய அரசு ஒரு தபால் முத்திரையை வெளியிட்டது. இந்தியாவின் முதன்மையான தொடர்பு நரம்பு மையமாகக் கருதப்படும் விஜயணாராயனத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படைக்கு ‘ஐஎன்எஸ் கட்டபொம்மன்’ என பெயரிடப்பட்டது.1997 வரை, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்த அரசு போக்குவரத்து பேருந்துகள் அனைத்தும் ‘கட்டபொம்மன் போக்குவரத்து கழகம்’ என்ற பெயராலேயே இயங்கிக் கொண்டிருந்தன.வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் (வீரபாண்டிய கட்டபொம்மன் கலாச்சார சங்கம்), என்ற ஒரு அமைப்பு அவரது நினைவாக பெயரிடப்பட்டு, செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் அவரது ஆண்டுவிழாவை, பாஞ்சாலங்குறிச்சியில் `வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவாக’ கொண்டாடுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த உணர்வுபூர்வமான சுதந்திர போராட்டத்தில் உண்மையான முதல் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவருடைய வீரத்தையும், தியாகத்தையும் யாராலும் மறக்க முடியாது. ஆகவே அவருடைய நினைவை போற்றும் வகையில் பல நினைவுச்சின்னங்களை இந்திய அரசு எழுப்பி வருகிறது.

மாணவ பத்திரிகையாளர்

விஜய் சூர்யா