இந்தியப் பெண்களுக்கு தற்காப்புக் கலை கற்றுத் தரும் கலிஃபோர்னியா மாணவி! #taekwondo | Pooja Nagpal creates non-profit organisation to teach self-defence for woman!

வெளியிடப்பட்ட நேரம்: 17:11 (17/10/2016)

கடைசி தொடர்பு:18:23 (17/10/2016)

இந்தியப் பெண்களுக்கு தற்காப்புக் கலை கற்றுத் தரும் கலிஃபோர்னியா மாணவி! #taekwondo

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் பற்றி தினமும் செய்திகளில் படிக்கிறோம். ''பெற்றோர்கள், பெண் குழந்தைகளுக்கு சொத்துகள் தராவிட்டாலும் பரவாயில்லை. தன்னம்பிக்கை மற்றும் தற்காப்புக்கலை கற்றுத்தருவதுதான் காலத்தின் அவசியம்'' என்கிறார், 19 வயது பூஜா நாக்பால். அமெரிக்காவில் வசித்துவரும் இவர், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்புக்கலை கற்றுத்தருவதோடு, தக்க சமயத்தில் அதைச் செயல்படுத்தத் தேவையான தைரியம், தன்னம்பிக்கையும் கொடுத்து வருகிறார்.

அமெரிக்கா, மக்களுக்குச் சேவை செய்யும் இளம் ஹீரோக்களைத் தேர்வுசெய்து, 'குளோரியா பேரோன்' என்ற விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான இளம் ஹீரோ விருது பெற்றிருக்கிறார், பூஜா நாக்பால். ''என் மூன்று ஆண்டு சேவைக்கான பலன் இந்த விருது'' என்று பெருமையுடன் கூறும் பூஜா,  கராத்தே, டேக்வாண்டோ தற்காப்புக் கலைகள் கற்று, 15 வயதில் பிளாக் பெல்ட் பெற்றவர்.

பூஜா தான் படிக்கும் பள்ளியில் ஸ்கௌட்டில் சேர்ந்திருந்தார். இதில் 'Girl Scout Gold Award ' புராஜெக்ட்டுக்காக இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சுபாத்து என்ற மலைக் கிராமத்துக்கு வந்தார். இந்தக் கிராமம்தான் பூஜா நாக்பால் அப்பாவின் சொந்த ஊர். இங்கு, சிறு வயதிலேயே திருமணம் செய்துவைப்பது, வேலைக்கு அனுப்பவது மற்றும் பாலியல் வன்முறைகள் என பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களைப் பார்த்து  மிகவும் வேதனை அடைந்தார் பூஜா. அவர்களுக்கு உதவ எண்ணி,  தற்காப்புக் கலை கற்றுத்தர ஆரம்பித்தார். பூஜாவின் இந்த சிந்தனையையும் முயற்சியையும் பாராட்டிய அவர் பள்ளி, அவருக்கு கேர்ள் ஸ்கௌட் கோல்டு அவார்டு வழங்கியது.

ஸ்கௌட்டில் தனக்கு அவார்டு கிடைத்துவிட்டது என்பதுடன் நிறைவடைந்துவிடவில்லை பூஜா.  சுபாத்து கிராமத்துக்கு மீண்டும் வந்தவர், அங்குள்ள  பள்ளி மாணவிகளுக்குத் தற்காப்புக் கலையைத் தொடர்ந்து கற்றுத்தர ஆரம்பித்தார்.  அதோடு தன்னம்பிக்கை, தைரியத்தையும் அவர்கள் மனதில் வளர்த்தார். அடுத்தக் கட்டமாக, 'For a Change, Defend' என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியவர், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் தற்காப்புக் கலை கற்றுத் தர ஆரம்பித்தார்.

தற்போது, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துவரும் பூஜா, ஒவ்வொரு ஆண்டும்  இந்தியாவுக்கு வந்து, இமாச்சல பிரதேசத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் டெல்லி, சண்டிகரில் உள்ள  பள்ளி மாணவிகளுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் தற்காப்பு வகுப்புகள் எடுக்கிறார். கடந்த மூன்று வருடங்களாக இச்சேவையைச் செய்துவரும் பூஜா, இதற்காக ஆண்டுக்கு  சுமார் 10 லட்சம் செலவிடுகிறார். தன் தொண்டு நிறுவனத்துக்கான செலவுகளுக்காக படித்துக்கொண்டே பார்ட் டைம் வேலை செய்து வருகிறார்.

''இந்திய மற்றும் அமெரிக்கப் பெண்களுக்கு தற்காப்புகலை கற்றுத் தருவதற்காக அமெரிக்க அரசாங்கம் வழங்கியுள்ள 'குளோரியா பேரோன்' விருது என்னை உற்சாகப்படுத்துவதாக இருக்கிறது. எந்த தேசமானாலும் சரி... ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண் பிள்ளைகள் தைரியமும் தற்காப்புக்கலையும் தெரிந்தவர்களாக வளரட்டும்!" என்கிறார் பூஜா.

- என்.மல்லிகார்ஜுனா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close