Published:Updated:

தொலைபேசி இணைப்பு முதல் வாட்ஸ்அப் வரை... பத்திரிகையாளர்களின் அப்போலோ அனுபவங்கள்...!

Vikatan Correspondent
தொலைபேசி இணைப்பு முதல் வாட்ஸ்அப் வரை... பத்திரிகையாளர்களின் அப்போலோ அனுபவங்கள்...!
தொலைபேசி இணைப்பு முதல் வாட்ஸ்அப் வரை... பத்திரிகையாளர்களின் அப்போலோ அனுபவங்கள்...!

நாளிதழ்கள், வார இதழ்கள் மற்றும் செய்தித் தொலைக்காட்சி சேனல்களுக்கு இப்போது புதிதாக ஒரு 'பீட்' உருவாகியுள்ளது.

செப்டம்பர் 22-ம் தேதி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் முதல்வருக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று கூறப்பட்டாலும், பின்னர் வெளியிடப்பட்ட அப்போலோ மருத்துவமனையின் அறிக்கைகளில், நுரையீரல் சிறப்பு நிபுணர்கள் சிகிச்சை, நோய்த் தொற்று தடுப்பு சிகிச்சை, பிஸியோதெரபி, மயக்க மருந்து நிபுணர்கள் சிகிச்சை உள்பட அப்போலோ மருத்துவர்கள் மட்டுமல்லாது, லண்டன், சிங்கப்பூர் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்ட நாள் முதலே, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அப்போலோவை புடைசூழத் தொடங்கினர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடங்கி வைத்த, இந்த அப்போலோ விசிட், காங்கிரஸ் துணைத் தலைவர்  ராகுல்காந்தி வந்ததும், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.  அதுவரை அப்போலோ பக்கம் வராமல் இருந்த எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க பொருளாளருமான மு.க. ஸ்டாலின், கட்சித் தலைவர் கருணாநிதி அறிவுறுத்தலின்பேரில் அப்போலோவுக்கு வந்து, முதல்வரின் உடல்நிலை குறித்து அமைச்சர்களிடம் கேட்டறிந்தார்.

டெல்லியில் இருந்து ராகுல் வந்து சென்றது, பா.ஜ.க. தன் பங்குக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, கட்சியின் தேசியத் தலைவர்  அமித் ஷா ஆகியோரை அப்போலோவுக்கு அனுப்பி வைத்து, நாங்களும் தமிழக அரசியல் களத்தில் இருக்கிறோம் என்று பறைசாற்றிக் கொண்டது. எல்லாவற்றுக்கும் மேலாக,  பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவை வந்து பார்க்காதது ஏன்? என்ற கேள்வி ஊடகங்களால் எழுப்பப்பட்டு, அதற்கான பதிலை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் விளக்கமாக தெரிவித்துள்ளனர். எனினும் 'முதல்வர் உடல்நிலை குறித்து கேட்டறிய, பிரதமர் மோடி விரைவில் சென்னை வருகிறார்' என்ற வதந்திகளும் தொடர்ந்து உலவிக்கொண்டுதான் உள்ளன.

முதல்வர் அனுமதிக்கப்பட்டு, ஏறக்குறைய ஒரு மாதமாகியும் அவர், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதற்கான எந்தவொரு அறிவிப்பும் இல்லாததால், அன்றாடம் பத்திரிகையாளர்கள் அப்போலோ மருத்துவமனையை தொடர்ந்து முகாமிட்டவாறே உள்ளனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர், அச்சு ஊடகங்களான நாளிதழ்கள், வார இதழ்கள் மட்டுமே  வெளிவந்து கொண்டிருந்த காலத்தில், தலைமைச் செயலகம், காவல்துறை ஆணையர் அலுவலகம், அரசு மருத்துவமனை, ரயில்வே துறை, மாநகராட்சி, நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முக்கிய அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் போன்றவைதான் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்கும் கேந்திரங்களாக (பீட்) திகழ்ந்தன. 'லேண்ட் லைன்' எனப்படும் தரைவழி தொலைபேசி இணைப்புகளை நம்பியே பத்திரிகையாளர்கள் தங்களது செய்திகளை அளிக்க வேண்டிய நிலை அப்போது இருந்தது. ஒவ்வொரு பீட்களுக்கும் சம்பந்தப்பட்ட பத்திரிகைகளின் சார்பில் பெரும்பாலும் அந்தந்த பீட்-களுக்கு ஒரே நிருபர்கள் செல்வது அப்போதெல்லாம் வாடிக்கையாக இருந்தது.இதே அப்போலோ மருத்துவமனையில், முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க நிறுவனருமான எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அப்போது அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஆர்.எம். வீரப்பன்,. நிருபர்களை அழைத்து, எம்.ஜி.ஆரின் உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிடுவார். அதுவே அப்போது அனைத்து நாளிதழ்களுக்கும் செய்தியாக இருக்கும் என மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்போதெல்லாம், ஆர்.எம். வீரப்பன் கொடுக்கும் எம்.ஜி.ஆர் உடல்நிலை தொடர்பான அறிகையை எடுத்துக் கொண்டு, தொலைபேசி இருக்கும் கடைகளுக்கு பத்திரிகையாளர்கள் ஓடுவார்களாம். அல்லது அந்த அறிக்கையை எடுத்துக் கொண்டு, சைக்கிளில் (அப்போதைய அதிக வசதியான டிரான்ஸ்போர்ட்) தாங்கள் பணிபுரியும் பத்திரிகை அலுவலகங்களுக்கு விரைந்து செல்வோம் என்கிறார் மூத்த நிருபர் ஒருவர்.

னால், செல்பேசிகளின் பயன்பாடு வந்த பின்னர்,  பத்திரிகையாளர்கள் தாங்கள் சார்ந்துள்ள 'பீட்'-களுக்கு நேரடியாகச் செல்லாமல், உட்கார்ந்த இடத்திலிருந்தே செய்திகளை சேகரித்து, செல்பேசி மூலம் அளிக்கும் நிலை மெல்ல அதிகரித்தது. குறிப்பாக, செய்தி தொலைக்காட்சி சேனல்கள் அதிகரித்து விட்ட இக்கால கட்டத்தில் 'பீட்' என்ற நடைமுறையே மெல்ல மெல்லக் குறைந்து விட்டது.

இந்தச் சூழ்நிலையில்தான், அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டு, அவரது உடல்நிலை குறித்து அறிய தினந்தோறும் மருத்துவமனைக்கு அரசியல்வாதிகளின் வருகை, அன்றாட நிகழ்வாக மாறியது. இதனால், அனைத்து பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் சார்பில் அப்போலோ மருத்துவமனை என்ற 'பீட்' புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வரின் உடல்நிலையை மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பது போன்று, அப்போலோ மருத்துவமனைக்கு வரும் அரசியல்வாதிகள் உள்ளிட்டோரை பத்திரிகையாளர்கள் கண்காணித்து வருகின்றனர். 

முதல்வர் ஜெயலலிதா,  மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் வரை பத்திரிகையாளர்களுக்கான  இந்த 'அப்போலோ பீட்' நீடிக்கும் என்பதில் ஐயமில்லை!

- சி. வெங்கட சேது.