Published:Updated:

போப் ஆண்டவரிடம் அன்புமணி பேசியது என்ன?

போப் ஆண்டவரிடம் அன்புமணி பேசியது என்ன?
போப் ஆண்டவரிடம் அன்புமணி பேசியது என்ன?

போப் ஆண்டவரிடம் அன்புமணி பேசியது என்ன?

டந்த சில நாட்களுக்கு முன்பு பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்தினரோடு ரோம் நகரில் போப் ஆண்டவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றதாக, அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். போப் ஆண்டவரோடு அன்புமணி இருக்கும் நிழற்படங்கள் அந்தப் பக்கத்தில் அலங்கரித்துள்ளன.

20 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட லைக்ஸ், நான்காயிரம் ஷேர்ஸ்,நூற்றுக்கணக்கில் கமெண்ட்ஸ் பதிவிட்டு அன்புமணியை நெட்டிஸன்கள் வரவேற்று ஆன்லைன் ஆரவாரம் செய்துள்ளனர். இன்னொரு பக்கம் அவரின் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களும் பலரால் பதிவிடப்பட்டுள்ளன. இணைய உலகில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அன்புமணி-போப் ஆண்டவர் சந்திப்பு அரசியலில் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.

தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் அரசியலில் கிறிஸ்துவ மிஷினரிகள் முக்கிய பங்காற்றிவருகிறார்கள் என்பது  நூற்றாண்டுகளை கடந்த உண்மை. இங்கிலாந்து,பிரான்ஸ்,பெல்ஜியம்,போர்ச்சுகல், டச்சு என்று மேற்குலக நாடுகளின் கிறிஸ்துவ பாதிரியார்கள் வந்து தங்கி வாழ்ந்து கிருஸ்துவ மதப் பிரசாரம் செய்து பெருமளவு மக்களை மதம் மாற்றினர் என்பது வரலாறு. இந்திய விடுதலைப் போராட்டம் நடந்த காலம் முதல், இன்று வரையிலும் கிறிஸ்துவ மிஷினரிகள் செய்துவரும் அரசியல் பங்களிப்பு பலம் வாய்ந்த ஒன்று. அத்தோடு கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் என்றும் அவர்களின் சேவைகள் தமிழகத்தில் பிரதான பங்கைச் செலுத்துகின்றன என்பது யதார்த்தம்.

இந்த நிலையில், பாமகவின்  27 ஆண்டுகால அரசியல் பயணத்தில், போப் ஆண்டவரை  சந்தித்த ஒரே நபர் அக்கட்சியில் அன்புமணி ஒருவரே. கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால், அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு போப் ஆண்டவர் சந்திப்பு நடத்திய தமிழக அரசியல் தலைவர் அன்புமணிதான் என்கிறார்கள் இன்னொரு தரப்பினர்.
இதில், பாமகவுக்கு  அரசியல் லாபம் உள்ளது என்று கூறும் அரசியல் நோக்கர்கள், உலக அரங்கில் அவர்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் முயற்சி என்றும் தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை சாதிய அடையாளத்தோடு இயங்கிடும் அரசியல் கட்சியாகவே பாமக பார்க்கப்படுகிறது.விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,உளுந்தூர்ப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கணிசமாக வசிக்கும் வன்னிய கிறிஸ்தவர்களுக்கும் தலித் கிறிஸ்தவர்களுக்கும் இடையே கூட சில சமயங்களில் மோதல் வந்துள்ளது என்பதால் மிகக் கவனமாக, பாமக இமேஜை உயர்த்த ராமதாஸ் முயற்சிக்கிறார். அதனால்தான், பாமக சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் நடத்துவது, இஸ்லாமிய பண்டிகைகள் கொண்டாடுவது. இதுபோன்ற அனைத்து மத விழாக்கள் பாமக மீதான சாதிய பார்வை மாறும் அல்லது அதனை எப்படியாவது மாற்றிட வேண்டும் என்று, பாமக பல வகைகளில் போராடுகிறது.

கட்சியில் பிற சமூகத்தவருக்கு  பொறுப்புகள் வழங்குவது, தலித் ஒருவர் முதல்வராக பாமக முன்னுரிமை கொடுக்கும்  என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பல மேடைகளில் முழங்கியிருக்கிறார். மேலும் தங்களது கட்சிக்கு  வட மாவட்டங்களில் மட்டும்தான் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை உணர்ந்த  ராமதாஸ், தென் மாவட்டங்களிலும் அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். அதன் எதிரொலியாக கடந்த 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுக்க பாமக தனித்து  போட்டியிட்டது. ஆனாலும் தென் மாவட்டத்தில், அக்கட்சி இப்போதும் கூட வலுவான இடம் இன்றி  தவிக்கிறது. தேர்தல் பிரசாரத்தின் போது மட்டும் பெயரளவுக்குக் கூட்டம் கூடியதே தவிர அது வாக்குகளாக மாறவில்லை  என்பது உண்மையாகிப் போனது. எதிர்பார்த்த அரசியல் பலன் கிடைக்கவில்லை என்பதால் சோர்ந்துபோகாமல் மீண்டும் அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள்,கட்சிக் கூட்டங்கள் ஆலோசனைகள் என்று பரபரப்பாகவே இயங்கி வருகிறது பாமக.

இந்நிலையில்தான்  இம்மாதம்(அக்டாபர்) முதல் வாரத்தில்  இத்தாலி சென்ற அன்புமணி ரோம் நகரில் போப் ஆண்டவரை சந்தித்துள்ளார். இது குறித்து பாமக வட்டாரத்தில் விசாரித்தோம்.

அவர்கள் கூறுகையில்,"அன்புமணி போப் ஆண்டவரைச் சந்தித்தது திட்டமிடப்படாத ஒன்று. அதில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இதனால் எல்லாம் வன்னிய கிறிஸ்தவர்கள் பாமகவுக்கு ஓட்டளிப்பார்கள் என்று நினைத்துவிட முடியாது. அப்படிப்பட்ட தேவையும் எங்களுக்கு இல்லை. குடும்பத்தோடு வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றார் அன்புமணி ராமதாஸ்.அப்போது போப்பை நேரில் சந்தித்தார்.ஆசிபெற்றார். அந்த நேரத்தில்தான் போப் நீங்க தமிழ்நாட்டில் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அன்புமணி தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் தாம் செய்துள்ள பணிகள் குறித்து விரிவாக விளக்கி, பசுமைத் தாயகம் அமைப்பின் பணிகள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை போப்பிடம் கொடுத்துள்ளார். அவரும் தமது வாழ்த்துகளைப் பாராட்டுக்களை அன்புமணிக்குத்  தெரிவித்துள்ளார். அவ்வளவே."  என்று தெரிவித்தனர்.

            .       

- சி.தேவராஜன்

அடுத்த கட்டுரைக்கு