மீண்டு(ம்) வந்த ஜாவா பைக்..! என்ன செய்யப் போகிறது மஹிந்திரா? | Jawa is back to Indian Roads, courtesy Mahindra

வெளியிடப்பட்ட நேரம்: 08:51 (02/11/2016)

கடைசி தொடர்பு:10:51 (02/11/2016)

மீண்டு(ம்) வந்த ஜாவா பைக்..! என்ன செய்யப் போகிறது மஹிந்திரா?

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மஹிந்திரா & மஹிந்திரா, கைனடிக் மோட்டார் கம்பெனி & ரேவா எலெக்ட்ரிக் (இந்தியா), ஸாங்யாங் மோட்டார் கம்பெனி (கொரியா), பெஜோ மோட்டார் சைக்கிள்ஸ் (பிரான்ஸ்), பின்இன்ஃபரினா (இத்தாலி) எனத் தொடர்ந்து ஆட்டோமொபைல் நிறுவனங்களைக் கையகப்படுத்தியது நினைவில் இருக்கலாம். தற்போது அந்த பட்டியலில் பிரிட்டனின் பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் இணைந்துள்ளதுடன், கூடுதலாக செக் குடியரசைச் சேர்ந்த ஜாவா மோட்டோ நிறுவனத்தின் பெயரை இந்தியாவில் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதியையும் மஹிந்திரா ஒரு சேர பெற்றுள்ளது.

1910-ல் பிர்மிங்காம் நகரத்தில் பைக் தயாரிப்பைத் துவங்கிய பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ், 1970-களில் கடும் சரிவைச் சந்தித்தது. பின்பு 1980-களில் இருந்து தற்போதுவரை, டிமாண்டிற்கு ஏற்ப மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்து, அதனை ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா ஆகிய நாடுகளில் விற்பனை செய்கிறது. இதில் இந்தியாவும் இணைய வேண்டும் என்பது பைக் காதலர்களின் கனவாக இருக்கிறது.

1929-ல் செக் குடியரசில் பைக்குகளைத் தயாரித்த ஜாவா நிறுவனம், கடந்த 1960-ம் ஆண்டு இந்தியாவில் கால்பதித்தது. அப்போது மக்களிடையே பிரபலமாகத் தொடங்கியிருந்த ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு இது கடுமையான போட்டியை அளித்தது. எளிய தொழில்நுட்பம், தனித்தன்மையான 2 ஸ்ட்ரோக் இன்ஜின் சத்தம், நீண்ட உழைப்புக்கும் புகழ் பெற்றது. இன்றளவும் இந்திய சாலைகளில் ஜாவா பைக் பயன்பாட்டில் உள்ளதே, இதன் தரத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. 100சிசிக்கும் அதிகமான 2 ஸ்ட்ரோக் பைக்குகளுக்கு எழுந்த பிரச்னை காரணமாக, 1996-ம் ஆண்டில் இந்த 250சிசி பைக்கின் உற்பத்தி முடிவுக்கு வந்தது.

தற்போது நிகழ்காலத்துக்கு வருவோம். கைனடிக், ரேவா நிறுவனங்களின் பெயரை மாற்றிய மஹிந்திரா, பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஜாவா மோட்டோ ஆகிய நிறுவனங்களைத் தனி பிராண்ட்களாகப் பொசிஷன் செய்ய உள்ளது. க்ளாஸிக் பைக்குகளான இவை மீண்டு(ம்) விற்பனைக்கு வரும்போது, ரெட்ரோ டிஸைன் - மாடர்ன் தொழில்நுட்பம் கூட்டணியுடன் களமிறங்கும் எனத் தெரிகிறது. அதற்காக இரண்டு வருடங்களாவது பைக் ஆர்வலர்கள் காத்திருக்க வேண்டும் என்பது நெருடல். மஹிந்திரா தனது பிதாம்பூர் தொழிற்சாலையில் ஜாவா பைக்குகளைத் தயாரிக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே அவை அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையிலேயே களமிறங்கக்கூடும். பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் என்பதுடன், இது பிரிமியம் பைக்காக சந்தைப்படுத்தப்படும்.

யுட்டிலிட்டி வாகன விற்பனையில் சிறந்து விளங்கும் மஹிந்திரா, அந்த வெற்றியை இரு சக்கர வாகனத் தயாரிப்பிலும் பெற முயற்சிக்கிறது. வருங்காலத் தேவையை தெளிவாகப் புரிந்து வைத்திருப்பதுடன், அதற்கான பாதையில் கவனமாக அடியெடுத்து வைக்கிறது. 2017, 2018 ஆகிய இரு ஆண்டுக்கான திட்டத்துக்கு ஏற்ப பணியாற்ற ஆரம்பித்திருக்கும் மஹிந்திரா நிறுவனம், அதிக போட்டி நிலவும் இந்தியாவின் இரு சக்கர வாகன மார்க்கெட்டில் அசத்தும் என நம்பலாம்!

- ராகுல் சிவகுரு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்