Published:Updated:

பெரியாரைப் புரியாத பெரியாரிஸ்ட்டுகளும்... தமிழ் தேசியவாதிகளும்...!

பெரியாரைப் புரியாத பெரியாரிஸ்ட்டுகளும்... தமிழ் தேசியவாதிகளும்...!
பெரியாரைப் புரியாத பெரியாரிஸ்ட்டுகளும்... தமிழ் தேசியவாதிகளும்...!

பெரியாரைப் புரியாத பெரியாரிஸ்ட்டுகளும்... தமிழ் தேசியவாதிகளும்...!

வம்பர் 1 - தமிழ்நாடு உருவான நாள். இதுகுறித்து எழுந்த விவாதங்களில் தந்தை பெரியாரைப் பற்றி இரண்டு விதமான எண்ணங்கள் கிளம்பின. பெரியாரை எல்லைப்போராட்ட வீரராக பெரியாரிஸ்ட்டுகளே குறுக்க முயற்சித்தார்கள். 'தந்தை பெரியாருக்கும் தமிழ்நாடு உருவாக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்று தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் சிதைக்க முயற்சித்தார்கள். இந்த இரண்டு வினைகளுமே தந்தைப் பெரியார் என்ற ஆளுமையை முழுமையாகப் பார்க்காத குறைப்பிரசவங்களே. அரைகுறைகளுக்கு விளக்கம் சொல்வதுதான் நடைமுறை வேலையாகிப்போன காலம் இது!

பெரியார் எல்லைப் போராட்ட வீரரா?

“நான் விஸ்தீரணத்துக்காகப் போராடுபவன் அல்லன். விடுதலைக்காகப் போராடுபவன்” என்று சொன்னவர் தந்தை பெரியார். அவர் கேட்டது இந்திய எல்லைக்கு உட்பட்ட மொழிவாரி மாகாணம் அல்ல. சுதந்திரத் தமிழ்நாடு. 1930-ல் இருந்து இறப்புக்கு முன்னால் பேசிய இறுதிச் சொற்பொழிவு வரைக்கும் இந்த சொல்லாடலை அவர் விடவில்லை.

சேலம் மாநாட்டில் பேசும்போதுதான் (1930), ‘‘இந்தியா ஒரு நாடா?” என்ற கேள்வியை முதன்முதலாகக் கேட்டார். ராஜாஜி ஆட்சியில் (1938) இந்தி திணிக்கப்பட்டபோது, ‘‘தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தை கையில் எடுத்தார். அடுத்த ஆண்டே இதனை, ‘‘திராவிட நாடு திராவிடருக்கே” என்று மாற்றினார். திருவாரூர் தென்னிந்திய நல உரிமைச்சங்க மாநாட்டில் (1940), ‘‘திராவிடர்களுடைய கலை நாகரீகம், பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றம் அடைந்து பாதுகாக்கப்படுவதற்கு சென்னை மாகாணம் இந்தியா மந்திரியின் மேற்பார்வையின் கீழ் தனிநாடாகப் பிரிக்கப்பட வேண்டும்” என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கிரிப்ஸ் தூதுக்குழுவை சந்தித்த (1942) பெரியார், டபிள்யூ. பி. ஏ. செளந்தரபாண்டியன், எம்.ஏ. முத்தையா குழுவினர் ஆகியோர் திராவிட நாடு அமைவதற்கான கோரிக்கையைக் கொடுத்தார்கள். திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட சேலம் மாநாட்டில், (1944), ‘‘திராவிட நாடு என்ற பெயருடன் சென்னை மாகாணம் பிரிக்கப்பட வேண்டும்” என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. திருச்சி புத்தூர் மாநாட்டில் (1945), ‘‘திராவிட நாடு ( சென்னை மாகாணம்) பூரண சுதந்திரம் கொண்டதாக அமைய வேண்டும்” என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

சுதந்திர தினத்தை துக்க தினம் என்றதும் பிரிவினை கிடைக்காததால்தான்.

இந்திய யூனியன்!

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எதிர்த்தபோதும், இந்திய அரசுக் கொடியை எரிக்க முயற்சித்தபோதும், ‘இழிவு நீங்க பிரிவினையே மாற்று’ என்று சொன்னார்.

தூத்துக்குடி திராவிடர் கழக மாநாட்டில் (1948) ‘திராவிட நாட்டை தனிச் சுதந்திர நாடாக ஆக்குவதே திராவிட மக்களின் முடிவான அரசியல் கோரிக்கை' என்று சொல்லப்பட்டது. அதே ஆண்டில் நடந்த ஈரோடு மாநாட்டில், ‘திராவிட நாடு பிரிவினைத் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும்' என்று சொல்லப்பட்டது. சேலம் மாநாட்டில் (1952) பிரிவினைத் தீர்மானம் போடப்பட்டது. குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட அனைத்து மாநாடுகளிலும் (1954) பிரிவினைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘சாதி ஒழிப்புக்கு ஒரே வழி நாட்டுப் பிரிவினை தான்’ என்று சொல்லி தமிழ்நாடு நீங்கிய தேசப்பட எரிப்பு போராட்டம் ( 1960) நடத்தினார். 1962 தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட மாநாடுகளிலும் பிரிவினைத் தீர்மானம் இருந்தது. தமிழ்நாடு விடுதலை ஸ்தாபனம் (1967) உருவாக்கினார். டில்லி ஆதிக்கக் கண்டன நாள் (1968) கடைப்பிடித்ததன் நோக்கமும் பிரிவினை தான். தி.மு.க. ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் (1972) நடந்த சமூக இழிவு ஒழிப்பு மாநாடுகளில் நாட்டுப் பிரிவினைத் தீர்மானங்கள் இருந்தன. “உண்மையான தமிழ் மக்கள் மானத்தோடு வாழ வேண்டுமானால் இன்றைய இந்திய யூனியன் ஆட்சியின் கீழ் இருந்து விடுபட வேண்டும்” என்று அப்போது பேசினார். ‘‘இந்த சாக்கிலேயே நம்முடைய நாடு நம்முடையது ஆகிவிடாதா?” என்று இறுதிச் சொற்பொழிவில் ஏக்கத்துடன் கேட்டவர் அவர். முதலும் முடிவுமான கோரிக்கையாக தனிநாடுதான் இருந்தது.

வெள்ளையரும் ஆரியரும்!

பிரிட்டிஷ் இந்தியாவில் 1955 வரை நீடித்த சென்னை மாகாணத்தைத்தான் திராவிட நாடு என்று பெரியார் சொன்னார். மொழி வாரியாக

மாகாணங்கள்

‘‘இன்று இருக்கும் நிலை மாற வேண்டுமானால் வெள்ளையர், ஆரியர் ஆகிய இருவரின் உள் உளவு ஒப்பந்த ஆட்சி மாறியே ஆக வேண்டும் என்பது சுதந்திரமும் மனிதத் தன்மையும் விரும்பும் மக்களது முடிவாகும். வெள்ளையர் சம்பந்தமும் ஆரிய ஆட்சி ஆதிக்கமும் இல்லாத இந்தியா அது வேறு எப்படிப்பட்ட இந்தியாவானாலும் அதைக் காண வேண்டியது தங்கள் கடமை என்று திராவிட மக்கள் நினைக்க வேண்டியவர்கள் ஆவார்கள்” என்று (குடியரசு 13.5.1946) எழுதியவர் அவர். தான் விரும்பும் திராவிட நாட்டுக்கு வெள்ளையர், ஆரியர், பனியா, குஜராத்தி, மார்வாடி தொடர்புகள் இருக்கக்கூடாது (1947) என்று தெளிவுபடுத்தினார். அவரைப் பொருத்தவரை திராவிட நாடும் தமிழ் நாடும் ஒன்றுதான். ஒரு பொருள் தரும் இரண்டு சொற்களாகத்தான் நினைத்தார். இந்த பிரிவினை எண்ணத்தைக் கொஞ்ச காலம் பேசாமல் இருந்தார் என்றால் அது காமராஜர் முதலமைச்சராக இருந்தபோதுதான். அதனைப் பெரியாரே (30.3.1967) ஒப்புக்கொண்டார்.

இப்படிப்பட்ட பெரியாரை, மொழிவாரி மாகாணம் கேட்ட எல்லைப் போராட்ட வீரரைப் போல திராவிடர் கழகச் சார்பாளர்கள் சொல்ல ஆரம்பித்திருப்பது பெரியாரின் கொள்கை வாழ்க்கையை உணராத தன்மை.

எல்லை குறைந்தாலும்!

‘‘பூரணவிடுதலை, பிரிவினை வேண்டும் என்று சொல்பவன் நான். எவ்வளவு எல்லையைக் குறைத்துக் கொண்டாலும் கவலை இல்லை. எனக்குச் சென்னை நகரம் முக்கியம் அல்ல. அந்நியன் ஆதிக்கமற்ற அந்நியன் சுரண்டலற்ற பூரண சுயேட்சையுள்ள பிரதேசம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதுதான் தேவை. சென்னையே போனாலும் மீதியுள்ள இடம் சுதந்திரம் ஆனால் போதும்” என்று தெளிவுபடுத்தியவர் அவர். அதிகாரம் பொருந்திய மத்திய அரசுக்கு கீழ் அடங்கிய மாகாணமாக தமிழ்நாடு அமைய வேண்டும் என்பது அவரது சிந்தனை அல்ல!

அதற்காக தமிழ்த் தேசியப் பிதாமகர்கள் சொல்வதைப் போல மொழிவாரி மாகாணப் பிரிவினைக்கு பெரியார் எதிராக இருந்தார் அல்லது அதற்கும் பெரியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொல்வதும் அபத்தம். வரலாற்றின் எந்தப் பக்கத்தையும் பார்க்காதவர்கள் அல்லது பார்க்க மறுப்பவர்கள் கூற்று அது.

மொழிப் போராட்டம்!

மொழிவாரி மாகாணம் அமைவது, தமிழுக்காக நாடு அமைய வேண்டும் என்பதை மொழிப்போராட்டமாகத்தான் 1950-களில் பெரியார் பார்த்தார். ‘‘தமிழ் என்பதும் தமிழர் கழகம் என்பதும் மொழிப்போராட்டத்துக்கு பயன்படுமே தவிர இனப்போராட்டத்துக்கோ கலாச்சாரப் போராட்டத்துக்கோ சிறிதும் பயன்படாது. கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதியே மொழிப்போராட்டம். அதுவே முழுப்போராட்டம் ஆகிவிடாது. எந்த வெற்றியும் இனப்போராட்டத்தால்தான் பெற முடியும் (24.1.1950) என்று சொன்னவர் அவர். அதனால்தான் சுத்த தெலுங்கும் சுத்த மலையாளமும் சுத்த கன்னடமும் தமிழ்தான் என்று நினைத்து அந்தப் பகுதியையும் உள்ளடக்கிய தனி திராவிட நாடு, தனி தமிழ்நாடு கேட்டார். மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிப்பது என்பது காங்கிரசின் சொல்லாடலாகப் பார்த்தார். காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுக்கு தலைவர், செயலாளர் பதவி தருவதற்காக சுயநலத்துடன் உருவாக்கப்பட்ட வார்த்தையாக ( 7.1.1953) நினைத்தார். ஆந்திரா தனிமாநிலம் ஆனபோதுதான் அவர் மொழிவாரி மாகாணப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தந்தார். ‘‘ஆந்திரா தனியாகப் போன பிறகு எனக்கு பிரிவினை மீதான நம்பிக்கையே போய்விட்டது” என்று சொன்னார். ‘‘மொழிவாரி மாகாணம் கேட்டால் அவர்களது மொழியினர் அதிகம் இருக்கும் பகுதிகளைத்தானே கேட்க வேண்டும். அடுத்த மொழியினர் அதிகம் வாழும் பகுதியையும் சேர்த்துக் கேட்பது எப்படி மொழிவாரி மாகாணம் ஆகும்?'' என்றவரும் அவர் தான்.

ஒரே சமையலா?

சென்னையை தங்கள் தலைநகரமாக வைத்துக் கொள்ள ஆந்திராவினர் முயற்சித்தபோது, ‘‘ஒரு  குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பிடிக்காமல் வெளியேறுபவர்கள் அந்த வீட்டின் அடுப்பில் மட்டும் சமையல் செய்துகொள்கிறேன் என்றால் அது கலகத்துக்குத்தான் வசதி செய்வதாகுமே தவிர வாழ்க்கைக்கு வசதியாகாது” என்று பதில் சொன்னவர் அவர். எங்களுக்கு நீதிமன்றம் அமைக்க இடம் வேண்டும், சட்டசபை அமைக்க கட்டடம் வேண்டும் என்று ஆந்திரர்கள் கோரிய போது, ‘‘ஆந்திராவில்தான் ஏராளமான ஜமீன்தார் பங்களா இருக்கிறதே. சினிமா தியேட்டர், கல்யாண மண்டபம் இருக்கிறதே. அதில் நடத்து அலுவலகத்தை” என்று சொன்னார். ஆந்திராவுக்கும் வேண்டாம் தமிழகத்துக்கும் வேண்டாம் சென்னையை தனி மாகாணம் ஆக்குங்கள் என்று ஆந்திரர்கள் கோரிக்கை வைத்தார்கள். ‘‘மடத்தை விட்டு வெளியேறிய ஆண்டிக்கு நந்தவனத்தைப் பற்றி என்ன கவலை? அது தமிழ்நாட்டின் கவலை, சென்னை மக்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம்” என்றதும் பெரியாரே. ( 5.1.1953) ஆந்திரர், கர்நாடகத்தவர், கேரளத்தவர் மூவரும் இன உணர்ச்சி இல்லாதவர்கள் என்று பெரியார் சொன்னார். ‘இதற்குப் பிறகும் இதற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டாமல் சென்னை மாகாணம் என்று சொல்வது அக்கிரமம் ஆகும். இதை எந்தத் தமிழனும் சகிக்க முடியாது. தமிழ், தமிழன் என்கின்ற பெயர்களுக்குக்கூட இந்த நாட்டில் சமுதாயத்தில் இருக்க இடமில்லாத நிலைமை ஏற்பட்டுவிடுமானால் பிறகு என்னுடைய, எனது கழகத்தினுடைய, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடைய வாழ்வு எதற்காக இருக்க வேண்டும்?” ( 25.10.1955) என்று கேட்டவர் அவர்.

உயிர் பிரச்னை இது!
 

இந்தியாவை நான்காகப் பிரிக்க பிரதமர் நேரு முடிவெடுத்தார். தென்னகப் பகுதிகள் அனைத்தும் தட்சிணப் பிரதேசம் ஆக ஆக்க முயற்சித்தார்கள். இதுதான் பெரியார் கேட்ட திராவிட நாடு. ஆனால் பெரியார் இதனைக் கடுமையாக எதிர்த்தார். ‘‘தட்சிணப் பிரதேசம் அமைப்பை தமிழ்நாட்டவர்கள் முழு மூச்சுடன் உயிரைக் கொடுத்து எதிர்ப்பார்கள்'' (1.3.1955) என்ற பெரியார், அன்றைய முதலமைச்சர் காமராஜருக்கு அனுப்பிய தந்தியில், ‘இது உயிர் பிரச்னை. உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இது தற்கொலையானது ஆகும். அருள் கூர்ந்து நம் எல்லோரையும் தமிழ்நாட்டையும் காப்பாற்ற வேண்டுகிறேன்’ என்று (1.2.1956) குறிப்பிட்டார். ‘‘தட்சிணப் பிரதேசம் வந்தால் தமிழ்நாட்டுக்கு ஆபத்து. போலீஸ் வேலை, ரயில்வே கூலி வேலை மட்டும்தான் கிடைக்கும்” என்றவர் அவர். தட்சிணப்பிரதேசம் உருவாக்கி தமிழ்நாட்டின் தமிழர்களின் தமிழின் தனித்தன்மையைக் கெடுக்கும் சூழ்ச்சியைத் தடுத்ததில், அந்த ஆபத்தை காமராசருக்கு உணர்த்தியதில் பெரியாரின் பங்கு முக்கியமானது. இதனைத் தமிழ் தேசியர்கள் மறுதலிப்பது தமிழக வரலாற்றை மறுதலிப்பதற்கு ஒப்பானதாகும்.

பெரியார் எழுத்தாளர் அல்ல. பேச்சாளர் அல்ல. கருத்தாளர். தனக்கு மொழி அபிமானம் இல்லை என்றார். அவருக்கு இருந்தது இன அபிமானம் மட்டும்தான். மொழியை தொடர்பு கருவியாக பார்த்தார். அந்த மொழி மதச்சார்பு அற்றதாக இருக்க வேண்டும் என்றும் சொன்னார். இந்தப் புரிதலோடு பெரியாரைப் பெரியாரின் ஆதரவாளர்களும் எதிரிகளும் பார்க்க வேண்டும்!
   
-ப.திருமாவேலன்

அடுத்த கட்டுரைக்கு