மேரி க்யூரிக்கு ஆயிரம் நன்றி | celebration of marie curie's thank to her innoviation

வெளியிடப்பட்ட நேரம்: 12:44 (08/11/2016)

கடைசி தொடர்பு:12:44 (08/11/2016)

மேரி க்யூரிக்கு ஆயிரம் நன்றி

                                                                                              
பெண்களின் வெற்றிப்பாதைகள் ஏராளம் என்றாலும், அதற்காக அவர்காள் கொடுத்த உழைப்பு அதை விட அதிகமாகத்தான் இருக்கும்.

இன்று புற்றுநோயில் இருந்து பலர் மீள, மேரி க்யூரி கண்டறிந்த ரேடியம் வெளிப்படுத்தும் காமாக் கதிர்கள்தான் முக்கியக்காரணம். தன்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ துயரங்களைத் தாண்டி அவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள், பலருடைய வாழ்க்கைக்கான வெளிச்சமாக அமைகின்றன. அத்தகைய அறிவியல் மேதையான மேரி க்யூரி பிறந்த தினமான இன்று, அவரைப் பற்றிய சில தகவல்களை அறிந்து கொள்வோம்.

1867ம் வருடம் நவம்பர் மாதம் 7ம் தேதி, போலந்தின் தலைநகரான வார்சாவில் பிறந்தார் மேரி க்யூரி(Mary Curie). இவருடைய இயர் பெயர்... மரியா ஸ்லொடஸ்கா.

தன்னுடைய பத்தாவது வயதில் ஜே.சிகொர்ச்கா என்னும் உறைவிடப் பள்ளியில் சேர்ந்த மரியா (மேரி க்யூரி),  அப்பள்ளியில் சிறப்பாகக் கல்வி கற்று, தங்கப்பதக்கம் பெற்று பள்ளிப்படிப்பை முடித்தார். மரியாவின் தந்தை இயற்பியல் மற்றும் கணித ஆசிரியர். எனவே, அப்பாடங்களில் சிறந்து விளங்க வேண்டும் என்பது மரியாவின்  விருப்பம். இதனால் இயற்பியல் மற்றும் கணிதத்தில் முதுகலை பட்டம் படிக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன்,  1891ல் பாரிஸுக்குப் பயணமானார்.

தன்னுடைய காந்தம் பற்றிய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளால் ஐரோப்பா முழுவதும் பெருமையாகப் பேசப்பட்டவர்  பியரி க்யூரி (Pierre Curie). இவரை 1895ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார் மரியா. திருமணத்துக்குப் பின் 'மேடம் மேரி க்யூரி' என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

பியரி க்யூரி,மேரி க்யூரி இருவரும் இணைந்து கதிரியக்கச் செயல்பாடுகளைக் கண்டறிய ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள்  இரண்டு புதுவகைத் தனிமங்களைக் கண்டறிந்ததாக 1898ல் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டனர். அந்தத் தனிமங்களுக்கு 'பொலோனியம் (Polonium)', 'ரேடியம் (Radium)' என்று பெயரிட்டனர். மேரி க்யூரி தன் தாய்நாடான போலந்தைக் கௌரவிக்கும் வகையில் 'பொலோனியம்' என்றும், லத்தீன் மொழியில் 'ஒளிக்கதிர்' என்று பொருள் கொண்ட 'ரே(ray)' என்ற சொல்லில் இருந்து ரேடியம் என்றும் பெயரிட்டார்.

 1903ம் ஆண்டு கதிர் இயக்கத்தையும், அதை வெளிப்படுத்தும் பொருட்களையும் கண்டுபிடித்தற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றபோது, அறிவியல் வரலாற்றின் மிக முக்கியமான பக்கத்தில் மேரி க்யூரியின் பெயர் அழுத்தமாகப் பதியப்பட்டது.

1906ம் ஆண்டு பியரி ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார். இது மேரிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. சொர்போன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த பியரியின் பணியை, அவர் இறப்புக்குப் பிறகு அந்தப் பல்கலைக்கழகம் மேரிக்கு வழங்கியது. ஓர் உலகத்தரமான ஆய்வுக்கூடத்தை பியரியின் நினைவாக உருவாக்க வேண்டும் என்ற கனவுடன், மேரி அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டார். மேரி, சோர்போன் பல்கலைகழகத்தின் முதல் பெண் பேராசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.

ரேடியம், பொலோனியம் ஆகிய தனிமங்களைக் கண்டுபிடித்து, ரேடியத்தை தனியே பிரித்தெடுத்து, அதன் பண்புகளை ஆராய்ந்ததுக்கான கௌரவமாக, 1911ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார் மேரி க்யூரி. நோபல் பரிசு பெற்ற முதல் பெண், இயற்பியல், வேதியியல் என இரு வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்றவர், இரண்டு நோபல் பரிசுகளை பெற்ற முதல் நபர் போன்ற சிறப்புகள் மேரிக்குச் சொந்தம்.

மேரியின்  வழிகாட்டுதலின் கீழ், உலகிலேயே முதன்முறையாக, கதிரியக்க ஐசோடோப்புகளை பயன்படுத்தி உடற்கட்டிகளை குணப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 1914ம் ஆண்டில் நடந்த  முதல் உலகப் போரின்போது ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் ரே கருவிகளைப் பொருத்தி மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்தார் மேரி.

பாரிஸ் மற்றும் வார்சா ஆகிய நகரங்களில் 'க்யூரி' என்ற பெயரில் மருத்துவ நிறுவனங்களை உருவாக்கியுள்ளார் மேரி க்யூரி. இவை இன்றும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான முக்கிய மையங்களாகத்  திகழ்கின்றன. கதிர்வீச்சின் வெளிப்பாட்டுக்கு அதிகமாக ஆளாகியிருந்ததால், அப்பிலாஸ்டிக் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்ட மேரி க்யூரி, 1934ல் இறந்தார்.

மனித இனம், மேரி க்யூரிக்கும் அவரின் கண்டுபிடிப்புகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டது!  

 

- சு.சூர்யா கோமதி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்