வெளியிடப்பட்ட நேரம்: 12:12 (11/11/2016)

கடைசி தொடர்பு:12:54 (11/11/2016)

அதிபரான ட்ரம்ப்...மிரள்கிறதா சிலிக்கான் வேலி?

சிலிக்கான் வேலி

அமெரிக்க அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காதவாறு  குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஒரு பக்கம் அமெரிக்காவில் ட்ரம்ப் ஆதரவாளர்களின் கொண்டாட்டம், மற்றொரு புறம் அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிராக போராட்டங்கள். இதனை டெக் உலகம் எப்படி அணுகுகிறது என்று பார்த்தால், மொத்த சிலிக்கான் வேலியும் கொஞ்சம் நடுக்கத்தில்தான் உள்ளது என்பதை அந்நிறுவன சி.இ.ஓக்களின் அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

அமெரிக்க தேர்தல் கலாசாரத்தை பொறுத்தவரை அங்குள்ள மிகப் பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள்,  குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதும், அவர்களுக்காக தேர்தல் நிதி திரட்டலில் ஈடுபடுவதும் வழக்கம். அதன்படி இந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ-வான டிம் குக்,  வெளிப்படையாகவே ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலரி கிளிண்டனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். மேலும் ஹிலரி கிளிண்டனின் துணை அதிபருக்கான விருப்பப் பட்டியலில் டிம் குக்கின் பெயரும் இடம் பெற்றிருந்ததாக கூறப்பட்டது. இப்படி நேரடியாக ஆதரவை தெரிவித்த குக், ட்ரம்ப் வெற்றிக்கு பின் தனது அணியினருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அது, அவரது அச்சத்தை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. 

அணியினரே,

அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றி உங்களில் பலர் கருத்துகளை நான் இன்று கேட்டேன். பல்வேறு வேறுபாடுகளை உடைய வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த களத்தில், அவர்கள் சமமான பிரபல வாக்குகளை பெற்றிருந்தாலும், தவிர்க்கமுடியாத அப்போட்டியின் முடிவு உங்களில் பலரை ஆழ்ந்த வருத்தத்தில் விட்டுச் சென்றிருக்கும்.

குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வகைப்பட்ட பணியாளர்களை நாம் கொண்டுள்ளோம். இதில் ஒரு தனிமனிதராக எந்த வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தோம் என்பதை விடுத்து, நாம் முன்னேறி செல்வதற்கான ஒரே வழி ஒருங்கே முன்னேறி செல்வதே ஆகும். இந்த சூழ்நிலையில் கடந்த 50 வருடங்களுக்கு முன்னர் டாக்டர். மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் கூறிய ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்: "உன்னால் பறக்க முடியவில்லையென்றால், ஓடி செல். உன்னால் ஓட முடியவில்லையென்றால், நடந்து செல். உன்னால் நடக்கக்கூட முடியவில்லையென்றால் தவழ்ந்து செல், ஆனால் நீ என்ன செய்தாலும், நீ முன்னோக்கி நகர்ந்து செல்ல வேண்டும்". அனைத்து  காலத்திற்கும் பொருந்தும் அறிவுரை மற்றும் நினைவூட்டலான இதுதான் நாம் நமது சிறந்த வேலையின் மூலம் இந்த உலகத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான வழி.

நாம் முன்னோக்கியுள்ள நிச்சயமற்ற நிலை (தேர்தல் முடிவுகளின் காரணமாக)  குறித்த உரையாடல்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், நிலையாக ஒரே இடத்தில் பிரகாசமான ஒளி அளிக்கும் அந்த வடக்கு நட்சத்திரத்தை போன்று ஆப்பிளின் நிலைப்பாடு மாறாதது என்பதன் மூலம், நீங்கள் நம்பிக்கையாக இருக்கலாம். உலகமெங்கும் உள்ள மக்களை நமது தயாரிப்புகள் ஒன்றிணைக்கும், மேலும் அந்த தயாரிப்புகளின் கருவிகள் நமது  வாடிக்கையாளர்கள் செயற்கரிய செயல்களை செய்யவும் அதன் மூலம் அவர்களின் வாழ்க்கையையும், இந்த உலகத்தையும் பெரிய அளவில் முன்னேற்றவும் உதவும்.  நமது நிறுவனம் அனைவருக்கும் பொதுவானது, நாம் நமது அமெரிக்க மற்றும் உலகமெங்கும் உள்ள நமது அணியினரின் பன்முகத்தன்மையை அவர்கள் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறார்கள், எங்கிருந்து வருகிறார்கள், அவர்கள் எப்படி வழிபடுகிறார்கள் அல்லது அவர்கள் யாரை விரும்புகிறார்கள் என்று எவ்வித வேறுபாடுமின்றி கொண்டாடுகிறோம்.

நான் எப்போதுமே ஆப்பிளை ஒரு மிகப் பெரிய குடும்பமாகவே பார்க்கிறேன், மேலும் உங்களின் சக பணியாளர் ஒருவர் ஏக்கமுடன் காணப்பட்டால் அவரிடம் சென்று உதவுவதற்கு உங்களை ஊக்கப்படுத்த விரும்புகிறேன். 

வாருங்கள் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வோம்!

வாழ்த்துகளுடன்,

டிம்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் டிம் குக்கை தனிப்பட்ட முறையில் ஏமாற்றமடைய செய்திருந்தாலும், அது ஆப்பிள் நிறுவனத்தின் பணியாளர்களிடையே எவ்வித சுணக்கத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி குறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க், " இந்த மேக்ஸ் ஜெனரேஷனுக்கு நோயற்ற சமூகத்தையும், கல்வி வாய்ப்புகளையும் வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதுதான் நமது முக்கியமான வேலையாக இருக்க வேண்டும். இதற்கு யார் ஜனாதிபதி என்பதைவிட,  இந்த வேலைகள் பெரியது. அவற்றை நோக்கி கடினமாக உழைப்போம்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவும், சூசகமாக  அச்சத்தின் வெளிப்பாடாகவே காணப்படுகிறது.

 

 

 

மைக்ரோசாஃப்ட்டின் சத்ய நாதெள்ளாவும்,  அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பை வாழ்த்திவிட்டு, ' இந்த சமூகத்துக்காக நாம் உழைப்பை ஒன்றாக இணைந்து சரியாக வெளிப்படுத்துவோம்' என்றே கூறியுள்ளார். 

எல்லா டெக் நிறுவனங்களும் சூசகமாக,  ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை ஒருவித பயத்துடனேயே அணுகுவதாக தெரிகிறது. இந்த டெக் நிறுவன ஊழியர்களும், சில டெக் நிறுவனங்களும் ஹிலரியை நேரடியாக ஆதரித்ததுதான் இதற்கு காரணமாக தெரிகிறது. ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்பதைத்தான் இந்த பதிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. ட்ரம்பும் இதே மனநிலைக்கு வந்தால், சிலிக்கான் வேலி மிரள வேண்டிய அவசியம் இருக்காது என்பதுதான் தற்போதைய சிலிக்கான் வேலியின் மனநிலையாக உள்ளது. 

ஜெ.சாய்ராம் 
மாணவ பத்திரிகையாளர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்