வெளியிடப்பட்ட நேரம்: 08:26 (17/11/2016)

கடைசி தொடர்பு:10:48 (17/11/2016)

உலகின் விலை மலிவான கார் - நானோவின் எதிர்காலம் ...?!

நானோ

டாடா நானோ காரைப் பற்றி மூன்று வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்த சூப்பர்ஹிட் ஹாலிவுட் படத்தின் பெயரான "Good, Bad, Ugly'' பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. மக்களிடையே அப்படிப்பட்ட வரவேற்பைப் (!) பெற்றுள்ள இந்த காரால், டாடா நிறுவனத்தில் எரிமலையே வெடித்திருக்கிறது. அதன் உச்சகட்டமாக டாடா சன்ஸ் குழும நிறுவனத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்த்ரி பணிநீக்கம் செய்யப்பட்டு, இடைக்கால தலைவராக ரத்தன் டாடா நியமிக்கப்படும் அளவுக்கு பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், நானோ காரால் டாடா மோட்டார்ஸுக்கு ஏற்பட்ட இழப்பே இதற்கு முக்கிய காரணம். 

டாடா சன்ஸ் குழும நிறுவனத்தின் இயக்குநர் குழுவுக்கு, சைரஸ் மிஸ்திரி கைப்பட எழுதிய கடிதத்தில், பல விஷயங்களை காரசாரமாக விவரித்துள்ளார். ''நானோ காரை வடிவமைக்கும்போது, அதன் அடிப்படை விலை ஒரு லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஆரம்பம் முதலே காரின் விலை அதிகமாகவே இருந்துவந்திருக்கிறது. மேலும் இந்த காரால் ஏற்பட்ட நஷ்டம், ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. லாபத்துக்கான அறிகுறியே தென்படாத நிலையில், நானோவை விற்பனை செய்வதில் அர்த்தம் இல்லை என எனக்குத் தோன்றியது. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு உணர்வுபூர்வமான தயாரிப்பாக இது இருந்துவந்ததாலேயே இந்த முடிவை எடுக்கத் தயங்கினோம்'' எனக் காட்டமாகப் பேசியுள்ளார்.

ஒரு எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் நிறுவனத்தில், ரத்தன் டாடா பங்குதாரராக முதலீடு செய்துள்ளார். அதற்கு நானோ காரின் பாடி வழங்கப்பட்டு வருவதாலேயே, அந்த காரின் உற்பத்தியை நிறுத்துவதற்கு டாடா மோட்டார்ஸ் விரும்பவில்லை எனவும் சொல்லப்படுகிறது. எனவே மஹிந்திரா e2O காருடன் போட்டியிடும் விதமாக, நானோவை அடிப்படையாகக் கொண்டு, ஒரு எலெக்ட்ரிக் காரை டாடா அறிமுகப்படுத்தும் நாள், வெகு தொலைவில் இல்லை எனலாம். ஆனால் எப்படிப் பார்த்தாலும், டாடாவுக்கு அதிக நஷ்டத்தை ஏற்படுத்தித் தந்திருக்கும் நானோவில் இனி முதலீடு செய்வதற்கு சைரஸ் மிஸ்திரி தயங்கியதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

விலை குறைவான காராக அறியப்படும் டாடா நானோ காரின் வருடாந்திர உற்பத்தி எண்ணிக்கை வெறும் 2.5 லட்சம்தான். ஆனால் இந்த காரின் வருடாந்திர விற்பனையே அதில் பத்து சதவிதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை (அக்டோபர் 2015 தொடங்கி செப்டம்பர் 2016 வரையிலான காலகட்டத்தில் விற்பனையான நானோ கார்களின் எண்ணிக்கை - 14,150). மேலும் நானோ விற்பனையில் இருக்கும் 2009-ம் ஆண்டில் இருந்துபார்த்தால், ஜூன் 2016 மாதம் மிகமோசமானதாக இருந்திருக்கிறது. ஏனெனில் இந்த மாதத்தில் விற்பனையான நானோ கார்களின் எண்ணிக்கை வெறும் 481தான்!  கார் தயாரிக்கத் தேவைப்படும் உலோகங்கள் & உதிரிபாகங்களின் விலை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், காரின் விலையை ஏற்றியதும் போதுமான பலனைத் தரவில்லை. ''இந்த காரைத் தயாரிப்பதற்கான முதலீடு அதிகரித்துக்கொண்டே வருவதால், எத்தனை நானோ கார்களை விற்பனை செய்கிறோமோ, அவ்வுளவு நஷ்டம் அடைகிறோம் என அர்த்தம்'' எனப் பெயர் சொல்ல விரும்பாத டாடா நிறுவன ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.

ரத்தன் டாடாவின் கனவு காராகத் திகழும் நானோ, பைக் - ஸ்கூட்டர் போன்றவற்றில் குடும்பமாகப் பயணிக்கும் நடுத்தர வர்க்க மக்களை மனதில்வைத்து வடிவமைக்கப்பட்ட காராகும். உலகெங்கும் உள்ள ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் பாராட்டையும், விருதுகளையும் ஒருசேரக் குவித்த இந்த கார், ரத்தன் டாடாவுக்கு உணர்வுரிதியாக நெருக்கமான காராக இருந்ததில் தவறேதும் இல்லை. ஆனால் இந்த காரின் தயாரிப்பு துவங்கிய நாள் முதலே சர்ச்சைதான். சிங்கூரில் இருந்து சனந்த்துக்கு நானோ காரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இடம் மாறியது தொடங்கி, ஆங்காங்கே நானோ கார்கள் சாலையில் தீப்பற்றி எரிந்தது வரை, இந்த கார் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்துள்ளது. மேலும் இந்திய கார் சந்தையில் பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட் பிரபலமாகத் தொடங்கியிருந்த நேரத்தில், உலகின் விலை மலிவான கார் என்ற பிம்பத்தைக் கொண்டிருந்த நானோவின் உரிமையாளராக இருக்க, மக்கள் முழுமனதுடன் சம்மதிக்கவில்லை. 

சைரஸ் மிஸ்திரி டாடாவின் தலைவராக இருந்தபோது, நானோ காரின் விற்பனையை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும். கடந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டில் வெளிவந்த நானோ ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் வாயிலாக, இதனை இளைய தலைமுறையினருக்கான காராக வழிமொழிந்தது டாடா. அதற்காக மேம்படுத்தப்பட்ட கேபின், கூடுதல் சிறப்பம்சங்கள், AMT கியர்பாக்ஸ், மாடர்ன் டிஸைன் எனக் கார் முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டது. தற்போது க்விட் காருடன் போட்டியிடும் விதமாக, Pelican என்ற புனைப் பெயரில் திறன்மிக்க 3 சிலிண்டர் இன்ஜின், பெரிய சக்கரங்கள், புத்தம்புதிய கேபின் எனப் பெரிய சைஸ் நானோ காரைத் தயாரிக்கும் எண்ணத்தில் இருக்கிறது. 

ஆனால் இந்த காரை நானோ சிரிஸில் களமிறக்குவது, சரியான முடிவாக இருக்காது. ஏனெனில், நானோ என்றாலே குறைவான விலை என்ற கருத்து மக்களின் ஆழ்மனதில் பதிந்துவிட்டதால், இப்போது விற்பனையில் இருக்கும் நானோ காரைவிடச் சற்று கூடுதல் விலையில் வரப்போகும் இந்த காரை, மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே. சைரஸ் மிஸ்திரியால் முடியாததை, ரத்தன் டாடா சாதித்துவிடுவாரா என்பது போகப் போகத் தெரியும்! 

- ராகுல் சிவகுரு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்