மிக்கிக்கு மவுசு குறைவதே இல்லை! #HBD_MickeyMouse

மிக்கி மவுஸ்

ஞ்சள் நிற ஷூ, சிவப்பு கால்சட்டை, வெள்ளை க்ளவுஸ் என வண்ணமயமாக வந்து சேட்டை செய்யும் அழகிய ஹீரோ, உலக குட்டீஸ்களின் உள்ளத்தைக் கவர்ந்த சாகச நாயகன் மிக்கி மவுஸ்.

இந்த ஹீரோவுக்கு வயது 88. ஆனால், நிஜத்தில் எப்போதும் குழந்தைதான். சந்தோஷத்தை வாரி வழங்குவதிலும் இணையற்றவர். குழந்தைகளின் உள்ளம் கவர்ந்த மிக்கி மவுஸ் கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கியவர், வால்ட் டிஸ்னி.

கோபக்கார அப்பாவுக்கும் அன்பான அம்மாவுக்கும் மகனாகப் பிறந்தவர் டிஸ்னி. சிறு வயதில் வீடு வீடாக பேப்பர் போடும் வேலை செய்துவந்தார். இவருக்கு படங்கள் வரைவது ரொம்பப் பிடிக்கும்.
அதனால், ஓவியம் கற்றுத் தரும் தனி வகுப்பில் தன்னை சேர்த்துவிடச் சொல்லி அடம்பிடிக்க, அம்மாவும் சேர்த்துவிட்டார். அங்கே, ஓவியத்தோடு, புகைப்படம் எடுக்கவும் கார்ட்டூன்கள் வரையவும்
ஆர்வம் மிகுந்தது. நாளடைவில் கார்ட்டூன் மீது தனி கவனம் குவிந்தது. அவர் வரைந்த புதுமாதிரியான ஓவியங்கள் யாரையும் கவரவில்லை.

அதனால், 'உனக்குச் சரியாகப் படம் வரையத் தெரியவில்லை' என்று பலரும் சொன்னார்கள். 'இனி நான் வரையப்போகும் கார்ட்டூன் கதாபாத்திரம், உலகில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் பிடிக்க வேண்டும்' என மனதில் சபதம் கொண்டார். அதற்காக பலவிதமான உருவங்களை வரைந்தும் மனம் நிறைவுறாமல் அவற்றையெல்லாம் ஓரம்கட்டிவிட்டார்.

அப்போது, தன் அறையில் அங்கும் இங்குமாக தாவித் திரியும் எலி, அவரது கவனத்துக்கு வந்தது. இதற்குமுன் அந்த எலியின் சேட்டைகளைப் பார்த்து ரசித்திருக்கிறார். தான் சாப்பிடும்போதெல்லாம் அதற்கும் கொஞ்சம் கொடுப்பார். அதையே கார்ட்டூனாக வரைந்தார். தனது நண்பர், ஐவர்க்ஸுடன் சேர்ந்து 'மிக்கி மவுஸ்' கேரக்டரை உருவாக்கினார். அதற்குள் மனிதர்களின் குணங்களைப் புகுத்தினார்.
அவர் ஓவியங்களை யாரும் விரும்பாததைப் போலவே, அனிமேஷன் குறும்படங்களும் செல்லுபடியாகவில்லை. எந்த இழப்புகளுக்கும் கஷ்டங்களுக்கும் மனம் தளராத டிஸ்னி, மூன்றாவதாக
 'ஸ்டீம் போட் வில்லீ' என்ற படத்தை உருவாக்கினார். குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் ரசித்து மகிழ்ந்தார்கள். உலகம் எங்கும் வரவேற்கப்பட்டது. படம் வெற்றியடைந்த 1928, நவம்பர் 18-ம் நாளே மிக்கி மவுஸ் பிறந்த நாளானது. உலகமெங்கும் உள்ள கார்ட்டூன் ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகிறார்கள்.

மிக்கி மவுஸ் கேரக்டருக்கு ஆரம்பத்தில் வால்ட் டிஸ்னியே குரல் கொடுத்துவந்தார். படங்களில் மிக்கியின் நண்பர்களாக வந்து ரசிகர்களால் மறக்கமுடியாத இடத்தைப் பிடித்தவர்கள்...
முதல் திரைப்படத்திலிருந்து தோழியாக வந்த மின்னி மவுஸ், கோபக்கார தோழனாக வந்தாலும் ரசிகர்களை சிரிக்கவைக்கும் டொனால்ட் டக், ஒரு வேலையை உருப்படியாய்ச் செய்யாமல்
சொதப்பும் நகைச்சுவைக்காரர் கூஃபி, சுவாரஸ்யமான சேட்டைகள் செய்யும் வளர்ப்பு நாய் புளோட்டோ. வில்லனாக வரும் 'பீட்' என்ற பூனை கதாபாத்திரமும் ரசிகர்களால் மறக்கமுடியாதது.   

படங்களில் வரும் கதாபாத்திரங்களை குழந்தைகள் நிஜம் என்றே நம்பினார்கள். குழந்தைகள் எதிர்பார்த்த விளையாட்டுகளும் சந்தோஷங்களும் நிறைந்த கற்பனையான ஊரை நிஜமாக்க வேண்டும்
என டிஸ்னி விரும்பினார். அப்படித்தான் அமெரிக்காவில் 'டிஸ்னி லேண்ட்' என்ற பிரபல பொழுதுபோக்குப் பூங்கா உருவானது. அதன் தொடர்ச்சியாக உலகின் பல்வேறு நகரங்களிலும் டிஸ்னி தீம் பார்க்குகளாக உருவாகின. அனிமேஷன் படங்கள் மட்டுமல்லாது காமிக்ஸ் புத்தகங்கள், வீடியோ கேம்ஸ் என மிக்கி மவுஸ், பல தலைமுறைகளாகக் குழந்தைகளை மகிழ்வித்துவருகிறது.

மாபெரும் கனவுத் திட்டங்களை நனவாக்கிய நம்பிக்கை நாயகன் வால்ட் டிஸ்னி, ''தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள். நீங்கள் தோல்வி அடையும்போது அதன் அருமை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உங்களைக் கீழே வீழ்த்தும் தோல்விதான், இந்த உலகம் உங்களுக்குத் தரும் மிகச் சிறந்த பரிசு என்பதை பின்னர் நீங்கள் உணர்வீர்கள்.'' என்ற வாழ்க்கை அனுபவத்தைத் தரக் காரணமாக இருந்த மிக்கி மவுஸ் கார்ட்டூன் கதாபாத்திரத்தின் பிறந்தநாளில் வாழ்த்துவோம்!

- கே.ஆர்.ராஜமாணிக்கம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!