Published:Updated:

'பிரபாகரனின் ஆசை என்ன தெரியுமா?' -வைகோ சொல்லும் ஈழத்து ரகசியம்

'பிரபாகரனின் ஆசை என்ன தெரியுமா?' -வைகோ சொல்லும் ஈழத்து ரகசியம்

'பிரபாகரனின் ஆசை என்ன தெரியுமா?' -வைகோ சொல்லும் ஈழத்து ரகசியம்

'பிரபாகரனின் ஆசை என்ன தெரியுமா?' -வைகோ சொல்லும் ஈழத்து ரகசியம்

'பிரபாகரனின் ஆசை என்ன தெரியுமா?' -வைகோ சொல்லும் ஈழத்து ரகசியம்

Published:Updated:
'பிரபாகரனின் ஆசை என்ன தெரியுமா?' -வைகோ சொல்லும் ஈழத்து ரகசியம்

திருச்சியில், கடந்த செப்டம்பரில் அண்ணா பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார் வைகோ. அதில், '28 ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரன் கருணாநிதிக்கு கடிதம் எழுதிக் கொடுத்தனுப்பிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதோடு, அந்தக் கடிதத்தையும் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார். இந்த நிலையில், பிரபாகரன் பிறந்ததினமான இன்று, அவருடனான தனது நினைவலைகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் வைகோ....
 
உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும், பிற நாடுகளின் உதவி இன்றி, முப்படைகளைத் தாமே உருவாக்கிய வரலாறு எங்குமே கிடையாது. நான் உலக வரலாற்றை ஓரளவுக்குப் படித்து இருக்கின்றேன். அதுவும் போர்க்கள வரலாறுகளை விரிவாகவேப் படித்து இருக்கின்றேன். மாவோவின் போராட்டங்கள், வியட்நாமில் ஹோ சி மின் போராட்டங்கள் அல்லது சியாரா மாஸ்ட்ரா குன்றுகளில் பயிற்சி எடுத்த ஃபிடல் காஸ்ட்ரோ, ஆஸ்துமா நோயாளியாக இருந்தபோதிலும் துப்பாக்கி ஏந்திக் களத்தில் போராடிய சேகுவேரா ஆகியோரது போராட்ட வரலாறுகளை எல்லாம் படித்து இருக்கின்றேன்.
 
சேகுவேரா ஒருமுறை சொன்னார்: 'என் கையில் இருக்கின்ற இந்த நல்ல துப்பாக்கி, போர்வீரனுக்குப் பயன்படட்டும்; நான் ஒரு நோயாளி; எனக்கு ஒரு பழையத் துப்பாக்கி இருந்தால் போதும்' என்று சொன்னார். எதிரிகளிடம் பிடிபட்ட நிலையில், கடைசிக் கட்டத்தில் தன்னைச் சுட வந்தவனிடம் நெஞ்சை நிமிர்த்திக் காட்டி, 'நன்றாகக் குறிபார்த்துச் சுடு' என்று சொன்வர்  சேகுவேரா. உலகம் போற்றுகின்ற அந்த மாவீரர்கள் எல்லோரையும் விடச் சிறந்தவர் பிரபாகரன்.

அல்ஜீரியக் கிளர்ச்சியாக இருக்கட்டும்; பிரெஞ்சுப் புரட்சியாக இருக்கட்டும்; 15 வயது இளைஞனாக இருந்தபோது வீட்டை விட்டு வெளியேறி, ஈழத்தமிழ்த் தாயகத்தின் விடுதலைக்காகக் களத்தில் இறங்கியவர் பிரபாகரன். தந்தை செல்வா காலத்தில் அறவழிப் போராட்டங்கள் எல்லாம் ராணுவத்தால் நசுக்கப்பட்டு, சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகளைக் கொதிக்கின்ற தாரில் தூக்கிப் போட்ட கொடுமையைக் கேட்டுப் பொங்கினார். 'இனி நாம் ஆயுதம் ஏந்திப் போராடினால்தான் தமிழர்களைக் காப்பாற்ற முடியும்' என்ற தீர்க்கமான முடிவில், படை அணிகளை உருவாக்கினார் பிரபாகரன்.

1987-ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை ஈழத்துக்குள் நுழைந்தபோது, வெறும் 28 பேர்களோடு வன்னிக் காட்டுக்கு உள்ளே போனார். அப்போது உடன் இருந்த அன்பு என்கின்ற தம்பி இயக்கத்தின் தமிழ் நாட்டுப் பொறுப்பாளராக வந்தார். அவர் தற்போது உயிருடன் இல்லை; களத்தில் மாண்டுவிட்டார். அவர் அடிக்கடி என் வீட்டுக்கு வருவார். அவர் சொல்வார்: ‘அண்ணா, நாங்கள் 28 பேர்தான் இருந்தோம்; சுற்றிலும் லட்சம் பேர் கொண்ட இந்திய ராணுவம் நிற்கின்றது. அந்த வேளையில் அரிசியோ, சாப்பாடோ கொண்டு வருவதற்குப் பதிலாக, கண்ணி வெடி தயாரிப்பதற்கான பொருட்களைத் தலைச்சுமையாகத் தூக்கிக் கொண்டுதான் நடந்தோம். ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் உப்பு இல்லாத கஞ்சிதான் உணவு. அப்போது யாருக்காவது கொஞ்சம் உப்புக் கஞ்சி கிடைத்தால், அன்றைக்கு அவன்தான் பிரபு. அந்த ஒரு டம்ளர் கஞ்சியைத்தான் தலைவரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது நாங்கள் எல்லாம் எப்படியும் சாகத்தான் போகின்றோம்; நல்லாச் சாப்பிட்டுட்டுச் சாவோமே? எதற்காகத் தலைவர் இப்படிக் கஷ்டப்படுகின்றார்? இந்திய ராணுவத்தை எதிர்ப்பது நடக்குமா? என்றுதான் நினைத்தோம். ஆனால், என்னைப் போன்ற வீரர்களுக்குத் தோன்றாத யோசனைகள் ஒரு படைத்தலைவனுக்குத்தான் தோன்றும். அப்படித்தான் எங்கள் படை 100, 200, 300, 400 என்று பெருகியது. அப்படி உருவானோம்' என்று சொன்னார். அப்படிப்பட்ட தலைவர் பிரபாகரன் வான் படை அமைத்தார்; கடல் படை அமைத்தார்.
 
பிரபாகரனின் விருப்பம் என்ன?

அவரது நோக்கம் என்ன தெரியுமா? நான் அந்த வன்னிக் காட்டுக்குள் அவரோடு 22 நாள்கள் இருந்தபோது மனம் விட்டுப் பேசினேன். அப்போது அவர் சொன்னார்: 'அண்ணே, தனி ஈழம் கிடைத்தால் அதற்கு நான் அதிபர் ஆக வேண்டும் என்ற விருப்பம் எதுவும் கிடையாது. இரண்டே இரண்டு ஆசைகள்தான். ஒன்று, போரில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள், கணவனை இழந்த பெண்கள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்களுக்கு ஆறுதல் கொடுக்கின்ற மறுவாழ்வு அமைப்புக்கு நான் தலைவராக இருப்பேன். இன்னொன்று, ராசேந்திர சோழன் கடற்படையால் தென் கிழக்கு ஆசிய நாடுகளை வென்றானே, அவன் தூக்கிய புலிக்கொடியைத்தான் நாங்கள் எங்கள் கொடியாக ஆக்கி இருக்கின்றோம். அப்படி ஒரு வலிமையான கடற்படை ஈழத்துக்கு அமைய வேண்டும்; அது இந்தியாவுக்கும் பாதுகாப்பாக இருக்கும். இந்த இரண்டும்தான் எனது ஆசைகள் அண்ணா' என்றார். அதேபோலத்தான், தளபதி சூசை தலைமையில் கடற்படை அமைத்தார்.

கூட்டுக் குற்றவாளி இந்தியா

வான் படை, கடல் படை, தரைப்படை அமைத்தார் பிரபாகரன். அந்த விடுதலைப் புலிகளை அழிக்க இந்தியா பணம் கொடுத்தது மட்டும் அல்ல... உலகின் அணு ஆயுத வல்லரசுகளான ஏழு நாடுகள் இலங்கை அரசுக்கு உதவின. இந்தியாவும் பாகிஸ்தானும் பகை நாடுகள். ஆனால் இலங்கைக்கு இந்தியாவில் இருந்தும், பாகிஸ்தானில் இருந்தும் ஆயுதம், சீனாவில் இருந்து ஆயுதம் கொடுத்தார்கள். ஈரானும் இஸ்ரேலும் பிறவிப் பகைவர்கள். ஆனால், இரண்டு நாடுகளும் இலங்கைக்கு உதவின. அமெரிக்காவும் கொடுத்தது, ரஷ்யாவும் கொடுத்தது. இவ்வளவு பேரும் சேர்ந்து கொண்டுதான் அவர்களை அழிக்கின்ற முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.

ஏழு கோடித் தமிழர்கள் வாழ்கின்ற இந்தியா, எங்கள் தொப்புள் கொடி உறவுகளைக் கொன்று குவிக்கின்றபோது, அவர்களுக்கு நாங்கள் உதவாமல் வேறு யார் உதவுவார்கள்? இதே கருத்தைப் பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் வாய்மொழியாகச் சொல்லி இருக்கின்றேன். ஒருமுறை புலிகளுக்கு ஆயுதங்களோ, பொருட்களோ கொண்டு வந்த கப்பலை இந்தியக் கடற்படை மறித்தது என்ற செய்தியைத் தலைவர் பிரபாகரன் அவர்கள் லண்டனில் இருந்த பாலசிங்கத்துக்கு அனுப்பி, அவர் என்னைத் தொடர்புகொண்டார். ‘தம்பி ரொம்ப வருத்தப்படுகின்றார்’ என்று சொன்னார். உடனே பாதுகாப்பு அமைச்சர் பெர்ணான்டசைத் தொடர்பு கொண்டு சொன்னேன். ‘அப்படி எல்லாம் இருக்காது’ என்று சொன்னார். ‘இல்லை, நடந்திருக்கின்றது' என்று சொன்னேன். இனி இந்தியக் கடற்படை இதில் தலையிடாது; இது குறித்து நீங்கள் பிரதமரிடமும் தகவல் தெரிவியுங்கள்’ என்றார்

மறுநாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களைச் சந்தித்துச் சொன்னேன். பன்னாட்டுக் கடல் பரப்பில் போகின்றார்கள். அங்கே சென்று அவர்களது கப்பல்களைத் தடுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை? அவர்கள் கழுத்தை நெரித்துக் கொல்லப் போகின்றீர்களா? என்று கேட்டேன். 'நீங்கள் அவர்களுக்கு ஆயுதங்கள் தரப்போவது இல்லை. அப்படியானால் அவர்கள் வேறு என்ன செய்ய முடியும்?' என்று கேட்டேன். ‘ஜார்ஜிடம் பேசி விட்டீர்களா?’ என்றார். ‘ஆமாம்; நேற்று இரவே பேசிவிட்டேன்’ என்றேன். ‘கவலைப்படாதீர்கள். இனி அப்படி நடக்காது’ என்றார். அதன்பிறகு விடுதலைப்புலிகளுக்கு வந்த எந்தக் கப்பலையும் இந்தியா தடுக்கவில்லை. இந்த எளியவனுடைய வாழ்க்கையில், நான் தமிழ் இனத்துக்கு ஏதாவது உதவி செய்து இருக்கின்றேன் என்றால் அது இதுதான்.
 
இதே போலத்தான் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் என்னை 250-வது சாட்சியாகச் சேர்த்தார்கள்.  மல்லிகை இல்லத்தில் என்னை ஐந்து நாட்கள் விசாரித்தார்கள். அப்போது கலைஞர் மிகவும் கவலையாக இருந்தார். நான் சொன்னேன்: ‘அண்ணே நான் ஈழத்துக்குச் சென்றது உங்களுக்குத் தெரியாது. அதுபோலப் புலிகளை என் வீட்டில் வைத்து இருந்ததும் உங்களுக்குத் தெரியாது. எனவே, உங்களைப் பற்றி நான் எதுவும் சொல்லமாட்டேன்’ என்றேன்.
 
நீதிமன்றத்தின் சாட்சிக் கூண்டில் என்னை ஏற்றுவதற்கு முன்பு, அரசு வழக்குரைஞர் கேள்விகளைத் தொடுத்தார். ‘என்ன சொல்லப் போகின்றீர்கள்? வாக்குமூலத்தில் சொல்லி இருப்பதை அப்படியே சொல்லப் போகின்றீர்கள்; ஒரு மணி நேரத்தில் உங்கள் சாட்சியம் முடிந்து விடும்; நீங்கள்  போய்விடலாம்’ என்றார்.

‘மிஸ்டர் டேனியல், நீங்கள் எழுதி வைத்து இருப்பதை நான் அப்படியே சொல்லுவேன் என்று எதிர்பார்க்கின்றீர்களா? பகத்சிங் வழக்கு முடிந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த வழக்கில் அப்ரூவர் ஆக சாட்சி சொன்ன கோபால் மீது நீதிமன்றத்துக்கு உள்ளேயே சுகதேவ் செருப்பைத் தூக்கி வீசி எறிந்தான். அந்த அப்ரூவர் ஒரு துரோகி என்பது, ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மாறாது. அதுபோல, என்னிடம் சாட்சியம் வாங்கி, அதன் மூலம் தலைவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்துவிடலாம் என்று நினைக்கின்றீர்களா? அது நடக்காது’ என்றேன்.

‘உங்களுக்குப் பொட்டு அம்மானைத் தெரியுமா?’ என்று கேட்டார். ‘தெரியாது’ என்றேன். உடனே ஒரு வீடியோவைக் கொண்டு வந்து போட்டார்கள். ஈழத்தில் தலைவரோடு நான் இருந்த வீடியோ அது. தலைவர் பொட்டுவைக் காட்டி, ‘அண்ணே இது யாருன்னு தெரியுதா?’ என்று கேட்கிறார். ‘என்ன தெரியாதா? என் வீட்டுக்கு வந்து இருக்கின்றாரே?’ என்று நான் சொல்லுகிறேன்.
‘பொட்டுன்னு ஏன் பேரு வந்தது தெரியுமா? யாழ்ப்பாணம் தொகுதியில் யோகேஸ்வரன் வெற்றி பெற்றபோது, இவர் தன் விரலைக் கீறி அவருக்குப் பொட்டு வைத்தார். அதனால், பொட்டுன்னு பேரு வந்தது’ என்றேன்.
இப்போது டேனியல், ‘பொட்டுவைத் தெரியாது என்றீர்களே?’ என்று கேட்டார். உடனே நான் சொன்னேன்: ‘நீங்கள் பொட்டு அம்மானைத் தெரியுமா? என்று கேட்டீர்கள். இவர் பொட்டு. எனக்கு இவரைத் தெரியும். ஆனால் பொட்டு அம்மானைத் தெரியாது’ என்றேன். இப்படி மூன்று நாட்கள் என்னை விசாரித்தார்கள்.

‘டெல்லி அசோகா ஓட்டலில் பிரபாகரன் சிறை வைக்கப்பட்டதாகச் சொன்னீர்களே, அப்போது இந்திய அரசு எங்கள் முதுகில் குத்தி விட்டது என்று அவர் உங்களிடம் சொன்னாரா?’ என்று கேட்டார். ‘இல்லை. அவர் சொல்லவில்லை. நான்தான் அப்படிச் சொன்னேன்’ என்றேன். போர் நிறுத்தம் வேண்டும் என்று கேட்டுப் பிரபாகரன், ராஜீவ் காந்திக்கு எட்டுக் கடிதங்கள் எழுதினார். சமாதானமாகப் போவோம் என்று சொன்னார். ஆனால், ஒரு கடிதத்துக்குக் கூட இந்திய அரசு பதில் சொல்லவில்லை. பிரபாகரன் சமாதானத்தை நாடினார் என்று சொல்லி அந்த எட்டுக் கடிதங்களையும் சாட்சியத்தில் பதிவு செய்தேன்.

மறுநாள் நாடாளுமன்ற நடவடிக்கைக் குறிப்பைக் கொண்டு வந்து காட்டினார்கள். ‘முதுகில் குத்தியதாக பிரபாகரன் சொன்னதாகச் சொல்லி இருக்கின்றீர்கள்’ என்றார்கள். அப்போதும் நான் சொன்னேன், ‘முதுகில் குத்தியதாகப் பிரபாகரன் சொல்லவில்லை; நான்தான் சொன்னேன்’ என்றேன்.

வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் பேசினால், அன்று இரவே ஒரு வரி விடாமல் தட்டச்சு செய்து வெள்ளிக்கிழமை காலையில் நமது வீட்டுக்குக் கொண்டு வந்து தருவார்கள். என்னுடைய பேச்சுகளில் பலமுறை வாஜ்பாய் குறுக்கிட்டு இருப்பார். ‘யெஸ்’ என்று ஒரு வார்த்தை சொன்னால், அதுவும் பதிவாகி இருக்கும். அதை நமக்கு அனுப்புவார்கள். அதை நாம் முழுமையாகப் படித்துப் பார்த்துத் திருத்தங்கள் இருந்தால் சொல்ல வேண்டும். கண்டிப்பாகப் பிழைகள் இருக்கும். அதைத் திருத்தி அனுப்ப வேண்டும். அப்படி நாம் திருத்தி அனுப்பா விட்டால், அவர்கள் நமக்கு அனுப்பியதை அப்படியே அச்சில் ஏற்றி விடுவார்கள். அதுபோல வியாழக்கிழமை பேசிவிட்டு நான் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டேன். அதனால், 'அவர்கள் தப்பாக எழுதி இருந்தது அச்சாகி இருக்கின்றது' என்று சொன்னேன்.

பிறழ் சாட்சி :

மறுநாள்தான் பாளையங்கோட்டை வீடியோவைக் காண்பித்தார்கள். நான் இன்றைக்கு விகடனுக்குத்தான் இதைச் சொல்லுகிறேன். இன்னும் எத்தனை நாளைக்கு நான் இருக்கப் போகின்றேன்? கடைசி வரையிலும் வைகோ ஒரு கொள்கைக்காக வாழ்ந்தான் என்றால் போதும், ‘இது நீங்கள் பேசியதுதானா?’ ஆமாம். ‘இதிலும் அப்படிச் சொல்லி இருக்கின்றீர்களே?’ ‘நான் அப்படிச் சொல்லவில்லை; நீங்கள்தான் மிமிக்ரி செய்து அதைப் பதிவு செய்து வைத்து இருக்கின்றீர்கள்’ என்றேன்.
உடனே டேனியல், ‘உங்களுடைய கம்பீரக் குரலை எத்தனையோ மேடைகளில் கேட்டு இருக்கின்றேன். ஆனால் இங்கே நீங்கள் பொய் சொல்லுகின்றீர்கள்’ என்றார். ‘நான் பொய் சொல்லவில்லை’ என்றேன். இப்படியே கேட்டுக் கொண்டு வந்து, எல்லாவற்றையும் நான் மறுத்ததால், என்னைப் 'பிறழ்சாட்சி' என்று அறிவித்து விட்டார்கள்.

அதற்குப்பிறகு, ‘நீங்கள் உங்கள் கட்சித் தலைவர் கருணாநிதியை விடுதலைப் புலிகளை வைத்துக் கொலை செய்ய முயற்சித்தீர்கள் என்பதற்காகத்தானே உங்களைக் கட்சியில் இருந்து நீக்கினார்கள்?’ என்று கேட்டார்.  நான் உடனே 'நீதிபதி அவர்களே, இந்த வழக்குக்குச் சற்றும் தொடர்பு இல்லாத வகையில் எனது நன்மதிப்பைச் சீர்குலைக்கின்ற வகையில் இந்தக் கேள்வியைக் கேட்கிறார். இதற்கு என் மனதில் இருக்கின்ற கொந்தளிப்பைப் பதிலாகச் சொல்ல விரும்புகிறேன்’ என்றேன்.


உடனே நீதிபதி, ‘நீங்கள் விளக்கம் தரலாம்’ என்றார். அந்த ஒரு கேள்விக்கு மட்டும் 35 நிமிடங்கள் விளக்கம் கொடுத்து இருக்கின்றேன். அவை அனைத்தும் அந்த வழக்கு ஆவணங்களில் பதிவு ஆகி இருக்கின்றன. என் மீது ஏன் கொலைப்பழி சுமத்தினார்கள்? என்பதற்குக் காரணம் சொல்லி இருக்கின்றேன். கடைசியாகச் சொன்னேன்: ‘இது தலைவர் பிரபாகரன் மீது பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு’ என்றேன். ‘நீங்கள் சத்தியம் செய்து விட்டுத்தான் சாட்சியம் சொல்லுகின்றீர்கள்.’ ‘ஆமாம்.’ ‘ஆனால் நீங்கள் பொய் சொல்லுகின்றீர்கள்’ என்றார். ‘இல்லை’ என்றேன்.

‘மதிப்புக்குரிய நீதிபதி அவர்களே, நான் என் மனசாட்சியை இங்கே பேச வைத்து இருக்கின்றேன். உலகத்துக்கே பொதுமறை தந்தவர் திருவள்ளுவர். இன்றைக்கு உலகில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நீதிநூல் இருக்குமானால், அது திருக்குறள்தான். அந்தத் திருக்குறளின் அடிப்படையில் நான் இங்கே சாட்சி சொல்லி இருக்கின்றேன்’ என்றேன். கொள்கையில் எவ்வளவு உறுதியாக இருக்கிறேன் என்பதற்கு இவை எல்லாம் சான்றுகள்.

இப்போது இலங்கையில் நமது தமிழ் இளைஞர்களைச் சிதைப்பதற்குக் கடுமையாக முயற்சித்துக் கொண்டு இருக்கின்றார்கள். மதுக்கடைகளைத் திறந்து இருக்கின்றார்கள். போதைப் பொருட்களை நடமாட விட்டிருக்கின்றார்கள். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. நினைத்துப் பார்க்க முடியாத கேடுகள் தமிழ்ச் சமூகத்தைச் சூழ்ந்து விட்டன. தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள ராணுவ வீரர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துக் குடி அமர்த்துகின்றார்கள். தமிழர்களிடம் இருந்து பறித்த காணிகளைத் திரும்பத் தரவில்லை. ஏற்கெனவே கிழக்கு மாகாணத்தை அவர்கள் ஆக்கிரமித்து விட்டார்கள். இப்போது வடக்கிலும் அந்த முயற்சிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. அயல்நாடுகளுக்குத் தமிழர்கள் குடிபெயர்ந்ததாலும், போரினாலும் தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகின்றது.

இன்றைக்கு உலகில் தமிழர்கள் மட்டுமே வாழ்கின்ற பகுதி எது என்றால் தமிழ் ஈழம்தான். வடக்கு கிழக்கு மாகாணங்கள்தான். அந்தத் தமிழர் பகுதி என்கின்ற அடையாளத்தைத் துடைத்து எறிவதற்காகக் குறிவைத்து இயங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். காணாமல் போனவர்களின் கதி என்ன என்றே தெரியவில்லை. அப்படிக் காணாமல் போன பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொடூரமாகக் கொன்று விட்டார்கள். பேபி சுப்பிரமணியம், இளங்குமரன், யோகி, கவிஞர் புதுவை ரத்தினதுரை இவர்களின் கதி என்ன ஆயிற்று? இவர்களை எல்லாம் கொன்று விட்டார்கள் என்றே கருதுகிறேன்.

வருங்கால இளைஞர்கள்:

100 ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் லட்சக்கணக்கான அர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டார்களே, அது இனப்படுகொலைதான் என்று ஜெர்மனி நாடாளுமன்றம் இந்த ஆண்டு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது. அதற்காக இரங்கல் நிகழ்ச்சி நடத்தி இருக்கின்றார்கள். எனவே, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்காமல் போகாது. தமிழ்நாட்டில் ஏழரைக் கோடிப் பேர் இருக்கின்றோம். இன்றைக்கு இருப்பது போலவே நிலைமைகள் இருக்காது. நாளைக்கு மாறும். இந்தியாவில் ஏற்படப் போகின்ற பல அரசியல் மாற்றங்களில் இந்திய ஒருமைப்பாடே சிதைந்து போகக் கூடிய ஆபத்து இருக்கின்றது. வருங்கால இளைஞர்கள் நம்மை விட வேகமாகச் சிந்திப்பார்கள். நமது தொப்புள் கொடி உறவுகளின் படுகொலைக்கு நீதி கேட்பார்கள். நீதியை நிலைநாட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஆனால் இனி ஆயுதப் போருக்கு வாய்ப்பு இல்லை. வெவ்வேறு வடிவங்களில் மக்கள் கருத்தை மாற்ற முடியும்; ஆதரவைத் திரட்ட முடியும்.

தமிழ் ஈழம் அமையப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்தை முதன் முதலாகப் பெல்ஜியம் நாட்டின் பிரான்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் கட்டட வளாகத்துக்குள் நடைபெற்ற ஈழப்பிரச்னை குறித்த மாநாட்டில், அந்தக் கருத்தை நான் முன்வைத்தேன். அதற்கு முன்பு எந்தக் காலத்திலும், எவரும் அந்தக் கருத்தைச் சொல்லவில்லை. புலிகள் தரப்பிலும் முன் வைத்தது இல்லை. உலகில் எந்தெந்த நாடுகளில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்கின்றது என்பதைப் பட்டியல் போட்டுச் சொன்னேன். 15,000 பேர்களே வசிக்கின்ற இடங்களில் கூட நடத்தி இருக்கின்றார்கள். அதுபோல தமிழ் ஈழப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை அகற்றி விட்டு,  உலக நாடுகளின் மேற்பார்வையில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அயல்நாடுகளில் வசிக்கின்ற ஈழத்தமிழர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்து வாக்கு அளிக்க முடியாது. எனவே, அவர்கள் வசிக்கின்ற நாடுகளிலேயே வாக்கு அளிக்கின்ற வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று சொன்னேன். இந்தக் கருத்தை அனைத்துத் தரப்பினரும் வரவேற்றார்கள். அதுபோன்ற ஒரு நிலைமை வரும். கண்டிப்பாகப் பொது வாக்கெடுப்பு நடக்கும்’’ என்று அழுத்தமாகச் சொல்லி முடிக்கிறார் வைகோ!

-எஸ்.முத்துகிருஷ்ணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism