இந்திய விவசாயத்தை நேசித்த ஃபிடல் காஸ்ட்ரோ..! | Fidel castro was fond of indian agriculture

வெளியிடப்பட்ட நேரம்: 10:14 (27/11/2016)

கடைசி தொடர்பு:10:11 (27/11/2016)

இந்திய விவசாயத்தை நேசித்த ஃபிடல் காஸ்ட்ரோ..!

ஃபிடல்

மது ஊரில் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாடும் முருங்கை மரமும் இருந்தால் போதும், அந்தக் குடும்பம் வாழ்க்கையில் முன்னேறிவிடும் என சொல்வது வழக்கம். ‘‘முருங்கை இந்தியாவின் நாட்டுப் பயிர். இதன் இலைகளில் ஏராளமான சத்துக்களும், மருத்துவக் குணங்களும் உள்ளன. கியூபா மக்கள் முருங்கையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என இதே அறிவுரையை சில ஆண்டுகளுக்கு முன்னால் கியூபா நாட்டின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ தன் மக்களுக்கும் சொல்லியிருக்கிறார். உலக வல்லரசு என மார்தட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்தான், கியூபா மாவீரன் ஃபிடல் காஸ்ட்ரோ. கம்யூனிசம் பற்றி தெரிந்திருக்கும் அளவிற்கு விவசாயத்தை பற்றியும் நன்கு அறிந்து வைத்திருந்தார்.

உலக அளவில் இயற்கை விவசாயத்தில் கியூபாதான் முன்னிலை வகிக்கிறது. இன்று நாம் அமைக்கும் வீட்டுத்தோட்டத்திற்கும் அவர்கள்தான் முன்னோடி. ஆனால், சில நாட்களுக்கு முன்னால் வீட்டுக்கு ஒரு முருங்கை மரத்தை வளர்க்க சொல்லி கியூபா அரசே அறிவித்தது. முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ ஹவான்னாவில் உள்ள தன்னுடைய வீட்டுத்தோட்டத்தில் முருங்கை மரத்தை சாகுபடி செய்திருக்கிறார். தினமும் முருங்கை மரத்தை பராமரிக்கிற வேலையையும் காஸ்ட்ரோதான் செய்து வந்தார். அவர் நேசித்த முருங்கைக்கு பின்னால் முக்கியமான சம்பவம் காரணமாக இருகிறது.

கியூபாவிற்குப் பக்கத்து நாடான, ஹைட்டி தீவில் 2010-ம் வருடம் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இதனால் லட்சக்கனக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். பக்கத்து நாட்டில் நடந்த, இந்தத் தகவலைக் கேட்டவுடன் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவில் உள்ள மருத்துவர்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் அனுப்பி உதவி செய்தார். உதவி செய்யச் சென்றவர்கள், உடனே ஒரு செய்தியை அனுப்பினார்கள். அந்த செய்தியில் " இங்கே பூகம்பம் ஏற்பட்டு அதிகமான மக்கள் இறந்துவிட்டனர். கூடவே காலரா நோய் வேகமாக பரவிக் கொண்டுள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவில் உள்ள மருத்துவத்தலைவரையும், முக்கியமான அதிகாரிகளையும் அழைத்துப் பேசியுள்ளார். ஹைட்டி தீவு மக்கள், காலரா நோயிலிருந்து மீண்டு வர என்ன செய்யலாம். இந்த நோய்க்கு என்ன தீர்வு, என்ன மருந்து கொடுக்கலாம் என அந்த கூட்டத்தில் விவாதித்தார். அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட பின்லே இன்ஸ்ட்டியூட் (Finlay Institute) மருத்துவ ஆராய்ச்சி மைய டாக்டர் கெம்பா ஹெர்கோ (Dr.Campa Huergo) ‘ஹைட்டி தீவு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடிய பொருள் இருக்கிறது' என சொல்லியிருக்கிறார்.

"அந்த மருந்துப் பொருள் எங்கே இருக்கிறது, எப்படி வாங்கலாம் சொல்லுங்கள்" என கேட்டார் ஃபிடல். "இந்தியாவில் உள்ள முருங்கை இலைக்குத்தான், நோய் எதிர்ப்புச் சக்தியும், விரைவான ஆற்றல் கொடுக்கின்ற திறனும் இருக்கிறது" என்றார், டாக்டர் கெம்பா ஹெர்கோ. இந்தியா என பெயரை கேட்டவுடனே காஸ்ட்ரோவோட புருவங்கள் விரிய ஆரம்பித்தன. ஏனெனில் அவருக்கு இந்தியா மேல் எப்போதுமே தனிப் பாசம் உண்டு. டாக்டர் கெம்பா ஹெர்கோவுக்கும் கூட இந்திய முருங்கை மேல் ஆர்வம் ஏற்பட்டது. காரணம் பல வருஷமாக யோகா செய்து பலன் அடைந்திருந்தார்கள். இதனால், இந்தியா மேல், இவர்களுக்கு கூடுதல் அன்பு இருந்தது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவோட அதிபர் கிடையாது. அதிகாரம் இல்லாமல் இருந்தால் என்ன? உதவி செய்ய மனசு போதுமே. உடனே, டாக்டர் கெம்பா ஹெர்கோவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார் காஸ்ட்ரோ.

இந்த டாக்டர் முதலில் வந்தது தமிழ்நாட்டிற்குத்தான். முருங்கை சாகுபடி, மருத்துவப் பயன்பாடு என அதிகமான தகவல்களை சேகரித்தார். அதற்கடுத்து ஆந்திரா, கேரளாவிற்கும் சுற்றுப்பயணம் செய்து முருங்கை பற்றிய தகவல்களை திரட்டினார். கியூபாவிற்குப் போகும்போது இந்திய முருங்கைச் செடிகளையும் மறக்காமல் எடுத்துக்கொண்டு சென்றார். ஹைட்டி தீவு மக்களுக்கு, நோய் தாக்கிய மக்களுக்கு முருங்கைக் கீரைகளை இறக்குமதி செய்தும் கொடுத்திருக்கிறார். காலரா நோயும் கட்டுக்குள் வந்தது. இந்தத் தீவு மக்களுக்கும் இந்திய முருங்கை மரங்களை வளர்த்து, கீரை சாப்பிடச் சொல்லியிருக்கிறார்.

அந்த டாக்டர் எடுத்துக்கொண்டு சென்ற முருங்கைச் செடிகள்தான், காஸ்ட்ரோ வீட்டுத்தோட்டம் தொடங்கி, கியூபா முழுக்க வளர்ந்து நிற்கிறது. ‘‘என்னுடைய ஆரோக்கியத்திற்கும், சுறுசுறுப்புக்கும் இந்திய முருங்கைக் கீரைதான் காரணம்’’என வாய் நிறையப் புகழ்ந்து சொல்லிக் கொண்டிருந்தவர், 90 வயது இளைஞர் ஃபிடல் காஸ்ட்ரோ. கம்யூனிச புரட்சியாளரான கியூபா நாட்டு நாயகன் காஸ்ட்ரோ உடல்நலக்குறைவால் நேற்று(26.11.2016) காலமானார். கம்யூனிசம் தவிர்த்து, விவசாயத்தின் பக்கமும் தன் நாட்டத்தை செலுத்தியவர் என்பது நம்மில் பெரும்பாலோனோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்