வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (28/11/2016)

கடைசி தொடர்பு:18:03 (28/11/2016)

தாத்தா தோட்டத்துக்குள் ஒரு பசுமைக் கல்யாணம்..! #GreenMarriage

பசுமைக் கல்யாணம்

     போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள், உள்ளூர் டி.வி சேனல்களில் விளம்பரம், பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் டிரீட்டு திருமணங்களும் அதைத் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் பெரிய தொகையை ஒதுக்கி பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். கல்யாணம் என்பது ஒருமுறை நடக்கும் என்பதுதான் இதற்கு பரவலாக சொல்லப்படும் காரணம்தான். இந்த சூழ்நிலையில் ஸ்டாலின் என்பவர் பாண்டிச்சேரியில் வேலை பார்த்துக்கொண்டு திருமணத்தை விருதுநகரிலுள்ள தனது 'தாத்தா தோட்டத்தில்' பசுமைக் கல்யாணம் என்ற பெயரில் நடத்தியிருக்கிறார். இதை கேள்விப்பட்டு ஸ்டாலினின் தாத்தா தோட்டத்துக்குச் சென்றோம்.  

விருதுநகர் மாவட்டம் அழகாபுரிரோட்டில் உள்ள சந்திரகிரிபுரம் கிராமத்திலுள்ள ’’தாத்தா தோட்டத்தில்’’தான் இந்த பசுமைக் கல்யாணம். அழகாபுரி ரோட்டில் இருந்தே தாத்தா தோட்டத்துக்குச் செல்ல கோணிச்சாக்குகளில் எழுதி தொங்கவிடப்பட்டிருந்த வரிகளே நமக்கு பாதைகாட்டும் வழிகாட்டிகளாக இருந்தது. தோட்டத்துக்குள் நுழைந்ததுமே நவதானிய விதைகளால் வரவேற்பு விதைக்கோலம் போடப்பட்டிருந்தது. மண்ணாலான அகல் விளக்கேற்றி அதைச்சுற்றி மண்பானைகளில் நிரப்பிய பாரம்பர்ய வகை நெல் மணிகள் சுற்றிலும் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்து. 

 மேலும் படங்களுக்கு இங்கே கிளிக் செய்க

கல்யாணத்துக்கு வந்திருந்த சிறுவர்கள் பம்பரம் சுற்றியும், கோலிக்குண்டு வைத்தும், சிறுமிகள் செப்பு சாமன் வைத்தும், பெண்கள் பல்லாங்குழியும் விளையாடிக் கொண்டிருந்தனர். கல்யாண வீடா, விளையாட்டு மைதானமா என்று வியக்கும் அளவுக்கு வியப்போடு இருந்தது. நாகஸ்வரம் – தவில் மங்கள இசை ஒலிக்க கல்யாண மாப்பிள்ளை ஸ்டாலினை அவரது நண்பர்களும், மணமகள் தீபிதாவை அவரது தோழிகளும் அழைத்து வர, வேப்பமரத்தடியில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டு, மரத்தால் செய்யப்பட்ட மோதிரத்தை (உட் ரிங்க்) மாற்றி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு தோட்டத்தில் ஸ்டாலின், தீபிதா ஆளுக்கொரு பாரிஜாத பூங்கன்றை நட்டு வைத்து, ஸ்டாலின் நட்ட கன்றுக்கு தீபிதாவும், தீபிதா நட்டுவைத்த கன்றுக்கு ஸ்டாலினும் தண்ணீர் ஊற்றினார்கள். இரு கன்றுகளையும் இருவரும் கைபிடித்தவாறே மூன்று முறை சுற்றி வந்து  கை தட்டல், நாகஸ்வர இசை, விசில்கள் பறக்க இருவரையும், அவரது நண்பர்கள் வேப்பமரத்தின் கீழ் போடப்பட்டுள்ள சிறிய மேடையில் மர சோபாவில் அமர வைத்து மணமக்களை வாழ்த்தி தெம்மாங்குப் பாடல்களைப் பாடினர் அவரது நண்பர்கள். 

 மேலும் படங்களுக்கு இங்கே கிளிக் செய்க

மணமக்கள் ஸ்டாலின் – தீபிதாவுக்கு வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு பசுமைத் திருமணம் பற்றி பேசினோம்...முதலில் பேசத்தொடங்கிய ஸ்டாலின், ‘’பள்ளிக்கூடம் படிக்கிறப்போ இருந்தே மரம் வளர்ப்பு, விவசாயம், பொன்வண்டு வளர்க்குறதுல தொடங்கி ஆடு, மாடு வளர்க்குறது வரைக்கும் எல்லாமே ரொம்ப பிடிக்கும். இந்தப் பாரம்பர்யம் பழமையை விரும்புறதுக்கு முக்கியக்காரணம் என்னோட பாட்டி, பள்ளிக்கூட, கல்லூரி அறிவியல் ஆசிரியர்கள்தான். பாண்டிச்சேரியில எலக்ட்ரானிக் டிசைன் இன்ஜினீயரா வேலைபார்த்துட்டு இருக்கேன். என் பார்வை, சிந்தனை, ஈடுபாடு எல்லாமே பாரம்பர்யம், பழமை சார்ந்துதான் இருக்கும். என்னோட கல்யாணமும் அதே மாதிரி இருக்கணும்னுதான் தோட்டத்துக்குள்ள கல்யாணம் நடத்தனுன்னு நினைச்சேன். இந்த தோட்டத்துல வேப்பமரம், மூலிகைகள், தென்னைமரம், மா, வாழை, நெல்லின்னு கிட்டத்தட்ட 300 மரங்கள் இருக்கு. இந்தத் தோட்டத்துல உள்ள வேப்ப மரங்களையெல்லாம் தோட்டத்துல வேலை செய்த சீனிவாசன் தாத்தாதான் நட்டு வளர்த்தார். அதனாலதான் இந்த தோட்டத்துக்கு ’’தாத்தா தோட்டம்’’னு பேரு வெச்சேன். 

 மேலும் படங்களுக்கு இங்கே கிளிக் செய்க

பொதுவா பொண்ணு பார்த்தா இந்தப் பொண்ணு நல்ல பொண்ணு, நல்ல வேலையில இருக்கா, உனக்கு பொருத்தமா இருப்பான்னு சொல்லித்தான் பொண்ணோட போட்டோ, புரொபைலை பையங்கிட்டக் காட்டுவாங்க. ஆனா, என்னோட அம்மா, ’’பதிமூணு புரொபைல் மேட்சா இருக்கு. ஆனா, ஒன்னை மட்டும் நான் தனியா எடுத்து வச்சிட்டேனு’’ சொன்னதும், வித்தியாசமா சொல்றாங்களேன்னு அந்தப் புரொபைலையும், போட்டோவையும் பார்த்தேன் அதுதான் தீபிதா..! தீபிதாவின் பேஸ்புக் புரொபைலை பார்த்தப்போ, என்னக்கு பிடிச்ச மாதிரியே இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு, ஆர்ட், டிசைன், பழமைன்னு ஜாதகப் பொருத்தம் மாதிரியே என்னோட ஈடுபாடும் அவரோட செயல்பாடும் ஒரே மாதிரி பொருந்துச்சு. உடனே, ஓ.கே சொல்லிட்டேன். தீபிதாவும் டபுள் ஓ.கே சொல்லிட்டாங்க. எங்க நிச்சயதார்த்தம் பூ, பழம், வெற்றிலை, பாக்கு, நிரம்பிய தாம்பூலத்தட்டு மாற்றி நடந்தது அல்ல. எங்க வீட்டுல வாகைமர, செர்ரி பழமர கன்றையும், தீபிதா வீட்டுல பெரு நெல்லி, இமாம்பசன் மாமர கன்றுகள் என இரண்டு வீட்டுலயும் மரக்கன்றுகளை மாற்றித்தான் ’’பசுமை நிச்சயம்’’ செய்துக்கிட்டோம். நிச்சயத்துக்கு ஒருவாரத்துக்கு முன்னால தீபிதாவுக்கு பல் வலியால் 3 பல் நீக்கப்பட்டுச்சு. அந்தப் பல்லை பல் மருத்துவர்ட்ட சொல்லி பக்குவம் செஞ்சு, டாலரா மாற்றி தீபிதா என் கழுத்துல போட்டு விட்டாங்க.’’ என்று ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும்போதே தீபிதா குறுக்கிட்டுப் பேசத் தொடங்கினார். 

 மேலும் படங்களுக்கு இங்கே கிளிக் செய்க  

"தங்கத்துல எல்லாருமே தாலிகட்டி, மோதிரம் மாத்தி கல்யாணம் செய்வாங்க. ஆனா, நாங்க பழமைய விரும்புறதுனால, அமெரிக்காவில் உள்ள 'கோகோ போலோ'ங்குற வாட்டர் புரூவ் மரத்திலுள்ள மரப்பட்டையால் கை வேலைப்பாடால் செய்த மோதிரத்தை மாத்திக்கிட்டோம். குதிரைவாலி, சாமை, திணை, வரகு, கம்புனு சிறுதானிய விதைகள் அடங்கிய பையோடுதான் கல்யாணப் பத்திரிகையே கொடுத்தோம். பாலவநத்தம் பக்கத்துல இருக்குற கிராமங்களிலுள்ள இயற்கையா ஊற்றுகளில் ஊறிய தண்ணீரை எடுத்துட்டு வந்து அதுல வெட்டிவேர், சீரகம், துளசி கலந்த தண்ணீரைதான் வந்த எல்லாத்துக்கும் குடிப்பதற்காக வச்சிருக்கோம். இது வெறும் கல்யாண நிகழ்ச்சியா மட்டும் இருந்திடக்கூடாது. ஒரு மகிழ்ச்சி, உற்சாகம் கலந்த நிகழ்ச்சியா நம் பாரம்பர்ய வாழ்வியல் கலை சார்ந்து இருக்கணும்னு நினைச்சுதான் சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள், வயதானவர்கள் என எல்லாருக்குமே மகிழ்ச்சியான அனுபவத்தை கொடுக்கணும் என்பதற்காக பல்லாங்குழி, செப்புசாமான், கோலி, பம்பரம், கயிர் மேல நடத்தல், ஊஞ்சல், சறுக்கு, பானை செய்தல், களிமண்ணில் உருவம் செய்தல், பாரம்பர்ய கலைகள் உணர்த்தும் ஆட்டம்னு கல்யாணத்துக்கு வர்றவங்க ஒவ்வொருத்தரும் எங்க கல்யாணத்தை மறக்கக்கூடாது. அதே சமயம் இனி நடக்குற ஒவ்வொரு திருமணங்களும் பசுமை, பழமை சார்ந்தே நடக்கணும். அதுக்கு எங்க கல்யாணம் ஒரு மாடலா இருக்கும்’’ என்று பேசிக் கொண்டிருக்கும் போதே நாட்டுப்புற கிராமியக் கலைகள் தொடங்கியது. 

 மேலும் படங்களுக்கு இங்கே கிளிக் செய்க

கலைத்தாய் அறக்கட்டளையின் தலைவர் மாதேஸ்வரன், "தமிழன் ஒவ்வொரு கலைகளிலும் விவசாயத்தையும், வாழ்வியலை உள்ளே புகுத்தியிருக்கான். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு கலையை உருவாக்கியிருக்கிறான். குறிஞ்சியில் வாழும் மலைவாழ் மக்கள் மலைகளில் ஒவ்வொரு இடங்களில் இருப்பார்கள். தம் மக்களை ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கவும், பிறப்பு, இறப்பு மற்றும் எச்சரிக்கை என செய்திகளை இசை வடிவில் சொல்ல உருவாக்கியது ’’பறையாட்டம்’’, காடும் காடு சார்ந்த இடமான முல்லையில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் சார்ந்துள்ள ஆட்டம் ’’சாட்டைக்குச்சியாட்டம்’’, விவசாயம் செழிக்கும் வயல் பகுதியான மருதநிலத்தில் உழவு, விதைப்பு, களையெடுப்பு, அறுவடை வரை ஒவ்வொன்றையும் உணர்த்துவது ’’ஒயிலாட்டாம்’’, படகுகளில் நகர்ந்து செல்ல சில வருடங்களுக்கு முன்பு வசதிகளுக்காக வடிவமைக்கப்பட்டதுதான் துடுப்பு. துடுப்பிற்கு முன் மூங்கிலான பெரிய நீளமான கம்புதான் உண்டு. படகில் நின்றவாறே தன் முழு மூச்சில் பெரிய கம்பை கடல் தண்ணீரில் ஊன்றியவாறே நகர்ந்து செல்வதுதான் பழையமுறை. பரிசல் பயணங்களில் இந்த பெரிய கம்பு ஊன்றி நகர்தல் முறை உண்டு. கடல் சார்ந்த இடமான நெய்தல் நிலத்தில் உள்ள ஆட்டம் ’’பெரியகம்பாட்டம்’’, முல்லைநிலமும் குறிஞ்சிநிலமும் இணையும் வறண்ட பகுதிக்குத்தான் ’’பாலை’’ என்று  பெயர். பாலைவனம் வறண்ட பகுதி, வறண்ட பகுதியில் நடந்து செல்லும்போது, நாவில் சுரக்கும் உமிழ்நீரை பேசி வீணாக்கினால் உடல் சோர்வு ஏற்படும். உமிழ்நீரை வீணாக்காமல், ஒருவருக்கொருவர் பேசாமல் கோல் கம்புகளை தட்டி செய்திகளை சொல்வதுதான் ‘’கோலாட்டம்’’, தானிய சேமிப்பு, விதைப்புக்கு முன் விதைநேர்த்தி செய்தலுக்கு ’’கரகாட்டம்’’ விதை வீரியத்தை கண்டறிவதுதான் ’’முளைப்பாரி’’, இறப்பை உறுதி செய்ய முள் குத்தி பார்த்தல், சூடு வைத்தலுக்கு அடுத்தபடியாக தப்பு அடித்து உறுதி செய்வதில் ’’தப்பாட்டம்’’ என இப்படியாக ஒவ்வொரு கலையும் தமிழனின் வாழ்வியல், பாரம்பர்யம், விவசாயம் சார்ந்தே இருந்துள்ளது’’ என ஒவ்வொரு கலைகளைப் பற்றியும் விளக்கிச் சொல்லி கலைக்குழுவினரை ஆட வைத்தார். 

திருமணத்தில் பானை செய்தல், களிமண்ணில் உருவம் செய்தல், பாண்டி ஆடுதல், கயிறு மேல் நடத்தல், பம்பரம் சுற்றுதல் என வந்தவர்களை வரவேற்பதில் ஆரம்பித்து, செட்டிநாடு சமையல் பந்தியைப் பரிமாறுபவர் வரை அனைவருமே பாரம்பர்ய வேட்டி- சேலை கட்டியிருந்தனர். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தாத்தா தோட்டத்தில் நடந்த ஸ்டாலின் – தீபிதா பசுமைக் கல்யாணம், வரவேற்பு நிகழ்ச்சிகளைப் பற்றிதான் அன்று ஊர் முழுக்கப் பேச்சாக இருந்தது. இறுதியாக பறையாட்ட ஓசை முழங்க மணமக்களுடன், குழந்தைகள், பெண்கள் என கல்யாணத்துக்கு வந்திருந்த அனைவரும் கலந்து ஆடிய குத்தாட்டத்துடன் தாத்தா தோட்டமே திருவிழாக்கோலமாக காட்சியளித்தது. 

 - இ.கார்த்திகேயன், 

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்.  
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்