Published:Updated:

காலிஸ்தான் இயக்கத்தின் எழுச்சியும்.. வீழ்ச்சியும்!

காலிஸ்தான் இயக்கத்தின் எழுச்சியும்.. வீழ்ச்சியும்!
News
காலிஸ்தான் இயக்கத்தின் எழுச்சியும்.. வீழ்ச்சியும்!

காலிஸ்தான் இயக்கத்தின் எழுச்சியும்.. வீழ்ச்சியும்!

Published:Updated:

காலிஸ்தான் இயக்கத்தின் எழுச்சியும்.. வீழ்ச்சியும்!

காலிஸ்தான் இயக்கத்தின் எழுச்சியும்.. வீழ்ச்சியும்!

காலிஸ்தான் இயக்கத்தின் எழுச்சியும்.. வீழ்ச்சியும்!
News
காலிஸ்தான் இயக்கத்தின் எழுச்சியும்.. வீழ்ச்சியும்!

ஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள நாபா சிறைக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று போலீஸ் உடையில் வந்த கும்பல் ஒன்று, அதிரடியாகத் தாக்குதல் நடத்தியது. அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தலைவர் ஹர்மீந்தர் சிங் மிண்டு உள்ளிட்ட 6 தீவிரவாதிகள் தப்பியோடினர். அதனைத்தொடர்ந்து, போலீசார் சுதாரித்துக் கொண்டு, உடனடியாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், காலிஸ்தான் இயக்க தலைவர் ஹர்மீந்தர் சிங் மிண்டு-வை, டெல்லி சுபாஷ் நகரில், உறவினருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலை வைத்து, ரயில் நிலையத்தில் கைது செய்துள்ளனர்.

பாட்டியாலா சிறை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பர்மீந்தர் சிங் என்பவரை உத்தரப்பிரதேச மாநிலம் கைரானா என்ற இடத்தில்

இவரைப் போலீசார் கைது செய்தனர். மேலும் பர்மிந்தர் சிங் கொடுத்த தகவலின்படி, நேபாளத்திற்கு தப்பியோடிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் மற்ற நபரையும் தேடும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். இந்த செய்திதான் இப்போது இந்தியா முழுமைக்கும் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக உள்ளது. யார் இந்த ஹர்மீந்தர் சிங்? எதற்காக ஜெயிலில் இருந்து தப்பித்துச் செல்ல முயற்சித்தார்? காலிஸ்தான் தீவிரவாத இயக்கம் என்றால் என்ன? இளைய தலைமுறையினர் அறிந்திராத இந்த தீவிரவாத இயக்கம் குறித்த தகவல்கள்....

காலிஸ்தான் இயக்கம்:

காலிஸ்தான் இயக்கம் என்பது சீக்கிய மதத்தைச் சேர்ந்த தேசியத்தை வலியுறுத்தும் ஒரு அமைப்பு. ஆரம்ப காலத்தில், அதாவது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே, இன்னும் சரியாகச் சொன்னால் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை பற்றிய பேச்சு வார்த்தை நடந்த காலகட்டத்தில், சீக்கியர்கள் அதிகமாக வாழும் பஞ்சாப் மாநிலத்தையும் மற்றும் பாகிஸ்தானில் சீக்கியர்கள் அதிகமாக வசித்த ஒரு பகுதியையும் இணைத்து சீக்கியர்களுக்கென தனி நாடு அமைக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். 1982-ம் ஆண்டு காலிஸ்தான் என்ற இயக்கம், ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே-வால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கமானது, சீக்கிய மரபுகளைக் காப்பதுடன், விடுதலைக்கான தர்மயுத்தம் என பிந்தரன்வாலே அப்போது குறிப்பிட்டார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, 1940-ம் ஆண்டு, லாகூரில் நடைபெற்ற மாநாட்டில், முஸ்லிம் லீக் கட்சி 'முஸ்லிம்களுக்கென்று தனிநாடு வேண்டும், பாகிஸ்தானை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்' என்று கோரிகை விடுத்தது. அதனால், பாகிஸ்தான் தனி நாடாகி விடும். இந்துக்களுக்கும் தனி நாடு இருக்கும். ஆனால் சீக்கியர்களுக்கென்று தனி நாடு இருக்காது, எனவே, எப்படியாவது சீக்கியர்களுக்காக தனி நாட்டை உருவாக்க வேண்டும் என சீக்கியர்கள் நினைத்தனர். சுதந்திரத்துக்கு முன்பு, 75 ஆண்டுகளுக்கும் மேலாக சீக்கியர்களே பஞ்சாப் மாகாணத்தை ஆண்டு வந்தனர். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின், பாகிஸ்தானில் இருந்து பெரும்பாலான சீக்கியர்கள், இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்துக்கு குடியேறினர். மொழிவாரி மாகாணப் பிரிப்பின்போது, சீக்கியர்களை ஒன்றிணைத்து தனி மாநிலம் வேண்டும் என அகாலி தளம் கட்சியினர் போராடினர். ஆரம்பகாலங்க்களில் மத்திய அரசு இதை நிராகரித்தாலும், அதன்பின் நடந்த வன்முறைகளாலும், தொடர்போராட்டங்களாலும் சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப் மாநிலத்தை பிரித்து சீக்கியர்களுக்காக பஞ்சாப் மாநிலம் மத்திய அரசால் ஒதுக்கி தரப்பட்டது.

ஆனால், "தங்களுக்கான உரிமைகள் சரியான முறையில் கொடுக்கப்படாமல் உள்ளது. எனவே எங்களுக்கு தனி நாடுதான் வேண்டும்" என்ற போராட்டம் வெடிக்கத் தொடங்கியது.

நேருவின் தலையீடு:

1946-ம் ஆண்டு கல்கத்தா மாநாட்டின்போது, சீக்கியர்களுக்கான உரிமைகளைப் பாதிக்காதவண்ணம், சீக்கிய மக்களே தங்களின் பகுதிக்கு சுயாட்சி அதிகாரம் கொண்டிருப்பார்கள் என நேரு அறிவித்தார். இந்த வாக்குறுதியினால் சீக்கியர்கள், தங்களுக்கு தனி நாடு கிடைத்து விடும். இப்போதைக்கு ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என்று எண்ணி, சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டனர். ஆனால் அதன்பின்னர் ஒருங்கிணைந்த இந்தியாவின் நலன்களை கருத்தில் கொண்டு, முன்பு உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என நேரு அறிவித்தார். இது சீக்கியர்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. இதனால் சீக்கியர்களுக்கான தனி நாடு என்ற முழக்கம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தது.

ஜகஜித் சிங் சௌஹான் என்பவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான 'நியூயார்க் டைம்ஸ்-ல்' தனி காலிஸ்தான் உருவாக்கப் போகிறேன் என 1971-ம் ஆண்டு விளம்பரம் கொடுத்தார். அதனால் வெளிநாடுகளில் வாழ்ந்த சீக்கியர்களிடமிருந்து போராட்டத்துக்கான நிதியுதவி குவியத் தொடங்கியது. இதனால், 1980-ம் ஆண்டு ஜகஜித் சிங் சௌஹான், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசினார். ஆனால் அந்த சந்திப்பைத் தொடர்ந்து, ஏற்பட்ட உடன்படிக்கையில், திருப்தி ஏற்படாததால் காலிஸ்தான் அமைப்பின் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்தது. இதனால் அனந்தப்பூர் சாகிப்பில், காலிஸ்தான் தேசிய கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் தலைவரானார் ஜகஜித் சிங், அதோடு மட்டுமல்லாமல் தங்களுக்கென்று தனி ரூபாய் நோட்டுகளையும், தனி அஞ்சல் தலைகளையும் புழக்கத்துக்கு கொண்டு வந்தார். காலிஸ்தான் என்ற தனி அமைப்பு உருவாகி விட்டதாகவும் அறிவித்தார்.

இந்திராகாந்தி அதிரடி:

தனி நாடு இயக்கத்தில் இருந்த சீக்கியர்கள், வன்முறைச் செயல்களில் ஈடுபட்டும், தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டும் வந்தனர். இதனால், பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்கதையாக இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில்தான், 1984-ம் ஆண்டு 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' என்ற அதிரடித் தாக்குதலை ராணுவத்தைக் கொண்டு அரங்கேற்றினார் அப்போது பிரதமர் பதவியில் இருந்த இந்திரா காந்தி. சீக்கியர்களின் புனித வழிபாட்டுத் தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே-வும், அவரது ஆதரவாளர்களும் பெருமளவில் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களைப் பதுக்கி வைத்துக் கொண்டு, தலைமறைவாக இருந்தனர். அதுவரை இல்லாத நடைமுறையாக இந்திய ராணுவத்தினர், பொற்கோவிலுக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தி பிந்தரன்வாலே மற்றும்  அவரது ஆதரவாளர்களை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் ஏராளமான அப்பாவி பொதுமக்களும்
உயிரிழக்க நேரிட்டது.

காலிஸ்தான் இயக்கத்தினரின் கோபம்:

அமிர்தசரஸ் பொற்கோவிலில், பொதுமக்கள் கூடியிருந்த நேரத்தில், ராணுவத்தினர் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தியதால், இந்திரா காந்தி மீது ஒட்டுமொத்த சீக்கியர்களும் கடுங்கோபம் அடைந்தனர். சீக்கியர்களின் இந்த கோபமே, பின்னர் இந்திரா காந்தியின் படுகொலை செய்யும் அளவுக்குச் சென்றது தனிக்கதை.

மீண்டும் காலிஸ்தான் இயக்கத்தினர்!

தற்போது இந்தியாவில் சீக்கியர்கள் அனைவரும் அமைதியான முறையில், தேசிய ஒருமைப்பாட்டுடன்  வாழ்ந்து வருகிறார்கள், நிலைமை இப்படி இருக்க, சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர், இந்தியாவில் ஊடுருவ எத்தனித்திருப்பதாகவும், அதற்கு முன்னோட்டமாக முடிந்து போன காலிஸ்தான் பிரச்சினையை தூண்டிவிட்டு இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதாகவும் இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. காலிஸ்தான் இயக்கத்தினரை, தங்கள் அமைப்பின் தீவிரவாதிகளாக மாற்றும் வேலையில் ஈடுபடுவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறையில் இருந்து தப்பியோடி, போலீசாரிடம் பிடிபட்ட ஹர்மீந்தர் சிங் மிண்டு மற்றும் அவரது ஆதரவாளர்கள், எங்கிருந்து அனுப்பப்பட்டனர்? அவர்களின் பின்னணியில் இருந்து செயல்படுவது யார்? என்பதைக் கண்டறியும் வேலையில் மத்திய அரசின் உளவுத் துறையினரும், போலீசாரும் தீவிரமாக இறங்கியுள்ளனர். மீண்டும் காலிஸ்தான் இயக்கம் உருவாகாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்கள் அனைவரின் விருப்பம்.

- ஜெ.அன்பரசன்