இனி எல்லாம் e-wallet தான்... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! | Things to know about E-wallet

வெளியிடப்பட்ட நேரம்: 12:58 (02/12/2016)

கடைசி தொடர்பு:13:14 (02/12/2016)

இனி எல்லாம் e-wallet தான்... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

e-wallet

கார்டில் சம்பாதித்தாலும் கைநிறைய சம்பாதிக்கிறான் என சொல்வதுதான் நம்ம ஊரு ஸ்டைலு. இனி, அது கொஞ்சம் கஷ்டம் தான். பணத்தின் வாசனையை நுகர்வது குறைந்துதான் ஆக வேண்டும். கேஷ்லெஸ் இந்தியா தான் இனி இலக்கு என அரசு முடிவு செய்தபின் அதை பற்றி நாமும் தெரிந்து கொள்ளதான் வேண்டும். அதில் முக்கியமானது E- Wallet

21-ம் நூற்றாண்டின் சமீபத்தைய வங்கிப் பரிவர்த்தனைகளில் சாதனை என்றால் அது e-wallet தான். அதிலும் பேடிஎம் (Paytm) அசாதாரணமான சேவைகளை வழங்கி முன்னிலை வகிக்கின்றன. ஒரு இ-வேலட்டுக்கு, நம் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை அனுப்பிக் கொள்ள வேண்டும். அதன் பின் ரீசார்ஜ் செய்ய, பொருட்களை வாங்க, மின்சார கட்டணங்கள் செலுத்த, பயண டிக்கெட்டுகள் புக் செய்ய,  நம் நண்பர்களுக்கு ரீசார்ஜ் செய்ய என்று அனைத்தையும் ஒரு சில க்ளிக்குகளில் செய்து விடலாம்.

e-wallet 3 வகை இருக்கின்றன. 

1 .க்ளோஸ்டு வேலட்டுக்கள் :
ஒரு நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக தன்னுடைய பொருட்களை மட்டுமே வாங்க ஒரு e-wallet பயன்படுத்தி வந்தால் அதற்கு பெயர் குளோஸ்ட் வாலட். இந்த e-wallet களில் வங்கிக் கணக்குகள் மூலம் பணத்தை செலுத்தினால் அந்த நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் சேவைகளை மட்டுமே பயன்படுத்த முடியும். உதாரணமாக ஜபாங், ஃப்ளிப்கார்ட் மற்றும் மேக் மை ட்ரிப் போன்றவைகளை சொல்லலாம். இந்த வகை வேலட்டுகளில் ஒரு முறை பணத்தை செலுத்திவிட்டால் அந்த நிறுவனத்தின் சேவைகளாகவோ அல்லது பொருளாகவோ தான், நம் காசை செலவழிக்க வேண்டி இருக்கும். பணத்தை திரும்ப எடுக்க முடியாது.  

2. செமி குளோஸ்டு இ வேலட்டுக்கள் :
இந்த இ-வேலட்டுக்களில் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி பணத்தை ஏற்றிய பிறகு, பணம் செலுத்திய e-wallet நிறுவனம் எந்த நிறுவனங்களோடு எல்லாம் ஒப்பந்தம் செய்திருக்கிறதோ அந்த நிறுவனங்களில் எல்லாம் நம் e-wallet பணத்தை செலுத்தி பொருட்களை வாங்கலாம் அல்லது சேவைகளை பெறலாம். அப்படி செலவு செய்ய முடியவில்லை என்றால் தாராளமாக நம் வங்கிக் கணக்குகளுக்கே பணத்தை திரும்ப அனுப்பிக் கொள்ளலாம். உதாரணமாக : பேடிஎம், எஸ்.பி.ஐ பட்டி, மொபிக்விக் போன்ற நிறுவனங்களைச் சொல்லலாம்.

இந்த வகையான வேலட்டுகளில் கூடுதல் வசதி என்னவென்றால்  நாம் வேலட்டில் இருக்கும் பணத்தை யாருக்கு வேண்டுமானாலும் எந்த வங்கிக் கணக்கிற்கு வேண்டுமானாலும் சரியான வங்கிக் கணக்கு மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி கோட்களை அளித்தால் பரிமாற்றம் செய்துவிடலாம். இதில் ஒவ்வொரு வேலட்டுகளும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை கமிஷனாக எடுத்துக் கொள்கிறது. 

சமீபத்தில் குளோஸ்ட் வேலட்டுகளில் இருந்து செமி குளோஸ்டாக மாறிய நிறுவனம் ஓலா மணி. இந்த நிறுவனத்தின் இ-வேலட்டுக்களில் பணம் செலுத்தினால் அது நேரடியாக அவர்களின் டாக்ஸி அல்லது ஆட்டோ சேவைகளை மட்டுமே பயன்படுத்தி கழிக்க முடியும் என இருந்தது. ஆனால் தற்போது நம் போன்களுக்கு ரீசார்ஜ் செய்வது தொடங்கி, டோனினோஸ் பீட்சா, புக் மை ஷோ என்று பல சேவைகளை பயன்படுத்த முடிகிறது. 

3. ஓப்பன் வேலட்டுக்கள் :
ஒரு e-walletல் செலுத்தப்படும் பணத்தை, செமி குளோஸ்ட் வேலட்டுகளைப் போல குறிப்பிட்ட நிறுவனங்களின் சேவைகள் அல்லது பொருட்களை வாங்குவது போலவே இருக்கும். இந்த வகையான வேலட்டுகளை இந்தியாவில் ஆர்பிஐ-ன் அனுமதி பெற்ற வங்கிகள் தான் செய்ய முடியும். உதாரணமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் டெபிட் கார்டுகள். இந்த வகையில் மட்டும் தான் கார்டுகளை பயன்படுத்தி பணத்தை கையில் எடுக்க முடியும்.

டிரெண்ட் :
தற்போதைக்கு செமி குளோஸ்ட் e-wallet தான் டிரெண்டில் இருக்கிறது. வழக்கமாக இது போன்ற அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி மொபைல் ரீசார்ஜ், பள்ளி, கல்லூரி கட்டணங்களை செலுத்துவது, உணவகங்களில் செலவு செய்வது, பஸ், ரயில் & விமான டிக்கேட்டுகளை புக் செய்வது, மாதம் தோறும் செலுத்தும் இன்ஷூரன்ஸ் பிரீமியங்கள், குடிநீர் வாரிய வரி, லேண்ட் லைன் போன் கட்டணங்கள்,  இணையத்திற்கான செலவுகள், டிடிஹெச் ரீசார்ஜ் செய்வது, போன்றவைகள் தான் தற்போதைய டீமானிட்டைசேஷனுக்கு முன் செய்யப்பட்டு வந்தது. இப்போதும் பெரும்பாலான செமி குளோஸ்ட் வேலட்டுகள் மூலம் இவைகளை செய்ய முடிகிறது. டிமானிட்டைசேஷனுக்கு பிறகு பெட்ரோல் பங்குகள் தொடங்கி, பெட்டிக் கடைகள் வரை பேடிஎம் மூலம் பணத்தை பரிமாற்றிக் கொள்வது சகஜமாகி வருகிறது.

கேஷ் பிக்-அப் :
இதில் மொபிக் விக் என்கிற நிறுவனம் ஒரு படி மேலே சென்று கேஷ் பிக் -அப்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சேவை தற்போது டெல்லி, ஜெய்பூர் மற்றும் மும்பை போன்ற இடங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தி இருக்கிறது.  காலை 10 - மாலை 6 மணி வரை கேஷ் பிக் - அப் செய்யப்படுகிறது. ஒரு நபர் நாம் இருக்கும் இடத்திற்கு வந்து பணத்தை வாங்கி கொண்டு செல்கிறார். அவர் வாங்கிய உடனேயே, நம்மிடம் இருந்து வாங்கிய தொகை நம் வேலட்டில் வரவு வைக்கப்படுகிறது. கேஷ் பிக் -அப் செய்ய எந்த கட்டணமும் இல்லை. 

கேஷ் டெபாசிட் :
கிராமப் புறங்களில் இன்று வரை ஒரு பிரபலமான விஷயம் பணத்தை டெபாசிட் செய்வது.  அதையும் மொபிக்விக்  அறிமுகப்படுத்தி இருக்கிறது. கேஷ் டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் அருகில் எந்த இடங்களில் எல்லாம் டெபாசிட் செய்யலாம் என்று ஒரு பட்டியலை காட்டுகிறது. அந்த இடத்திற்குச் சென்று டெபாசிட் செய்து நம் e-wallet பேலன்ஸை அதிகரித்துக் கொள்ளலாம். அதோடு வழக்கம் போல டெபிட் அல்லது க்ரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலமாகவும் பணத்தை வேலட்டில் செலுத்தலாம்.

-  மு.சா.கெளதமன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close