Published:Updated:

துக்ளக் பத்திரிகையின் முதல் அட்டைப்படம் பின்னணி! #RIPcho

துக்ளக் பத்திரிகையின் முதல் அட்டைப்படம் பின்னணி! #RIPcho
துக்ளக் பத்திரிகையின் முதல் அட்டைப்படம் பின்னணி! #RIPcho

துக்ளக் பத்திரிகையின் முதல் அட்டைப்படம் பின்னணி! #RIPcho

"எதிர்காலம்பற்றி நான் என்றைக்குமே யோசித்தது இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். அதன் ஓட்டம் முடிந்தால், ஆட்டம் காலி. அவ்வளவுதான்!'' - 

''வழக்கறிஞர், கலைஞர், பத்திரிகையாளர்... சோ அவ்வளவுதானா, இல்லை வேறு ஏதேனும் ரகசியக் கணக்கு வைத்திருக்கிறீர்களா?'' என்ற கேள்விக்குத்தான் இப்படி பதில் சொன்னார் சோ. 

ஆமாம். உண்மையில் அவர் சினிமா நடிகராக வர வேண்டும் என்றோ, பத்திரிகையாளராக வர வேண்டும் என்றோ அவர் யோசித்தது இல்லை. நிகழ்காலத்திலே தன் முழு கவனத்தையும் செலுத்தினார். அதுதான் அவரை அடுத்தடுத்த தளத்துக்கு அழைத்துச் சென்று உச்சத்தில் நிறுத்தியது.

அரசியல், சினிமா, நாடகம், என ஒரே துறையில் உச்சம் தொட்ட பலர் இங்கு உண்டு. ஆனால், பல திறமைகள் கொண்ட பன்முகத் தன்மை கொண்ட சிலரில் ஒருவர் 'சோ' என செல்லமாக அழைக்கப்படும் சோ ராமசாமி. வழுக்கைத் தலை, நெற்றி நீள திருநீறு, குங்குமப் போட்டு, பெரிய கண்ணாடி என யார் பார்த்தாலும் பட்டென மனதில் பதியும் முகம், இன்று இயற்கையோடு கலந்து கரைந்துபோனது.

ஶ்ரீநிவாச ஐயருக்கும், ராஜாம்மாள் தம்பதிக்கும் அக்டோபர் 5-ம் தேதி 1934-ல் மகனாகப் பிறந்தவர். மயிலாப்பூரில் பி.எஸ்.உயர்நிலைப்பள்ளியிலும், லயோலா கல்லூரியிலும் படித்தவர். 1955-ம் ஆண்டில் சென்னை சட்டக்கல்லூரிக்குள் நுழைந்து சட்டத்தைப் பயின்று வழக்கறிஞர் ஆனார்.  

சட்ட ஆலோசகர் பணிக்கு டி.டி.கே நிறுவனத்துக்கு வழக்கறிஞர்கள் தேர்வு செய்கிறார்கள் என்றதும். அவர் அந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டார். "தொழில் துறைகள் சட்டங்கள் பற்றி தெரியுமா?" என்ற கேள்விக்கு, "சுத்தமாகத் தெரியாது. எல்லா சட்டங்களையும் மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அது தேவைப்படும்போது சட்ட புத்தகங்களில் இருந்து படித்துக்கொள்ளலாம்." என்ற உண்மையான பதிலே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது. தங்கள் நிறுவனத்துக்கு சட்ட ஆலோசகராக நியமித்தார்கள். ஐந்து ஆண்டுகாலம் பேர் சொல்லும் அளவுக்கு வழக்கறிஞராக பணியாற்றினார். இங்குதான் அவருக்கு நாடகத்தின் மீது, கவனம் திரும்பியது. நேர்முகத் தேர்விலே நையாண்டி கலந்து பேசி ரசிக்க வைத்தவருக்கு, மேடையில் காமெடி செய்து ரசிகர்களை கவர்செய்ய சொல்லித்தரவா வேண்டும்? உடல்மொழி, உச்சரிப்பு, கண் பார்வை என அசத்தித் தள்ளிவிட்டார். இந்த மேடை நாடகங்களின் மூலம்தான் மறைந்த ஜெயலலிதாவுக்கும், சோவுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. 

சிவாஜியும், பீம்சிங்கும் 'பெற்றால்தான் பிள்ளையா' என்ற நாடகத்தை படமாக்க முடிவு செய்தார்கள். இதில், நடிக்க சோவை அழைத்தார்கள். 'நாடகமே பெரிய சிக்கல். இதுல சினிமாவா? வேண்டவே வேண்டாம்' என்று முடிவெடுத்தவரை, கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார்கள். கிராமத்தில் கூட பெயர் சொல்லும் அளவுக்கு நடிப்பிலும் குட் மார்க் வாங்கினார். தொடர்ந்து படங்கள் நடிக்க வாய்ப்புகள் வரிசைகட்டி நின்றன. நடித்தார். திரையரங்கில் இவரை பார்த்த கடைசி ரசிகன் வரை வயிறுகுலுங்கச் சிரித்தான். இப்போது பார்த்தாலும் நமக்கும் சிரிப்பு தொற்றிக்கொள்ளும்.

சோ மொத்தம், 2,518 முறை நாடகங்கள் போட்டிருக்கிறார். ஒரே நாள்ல நாலு ஷோ போட்ட நாடகங்களும் உண்டு. 28 நாட்களில் 32 நாடகங்கள் போட்டிருக்கிறார். அதில், ஐந்துதான் அரசியல் பற்றியது. 'முகமது பின் துக்ளக்', 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்', 'இன்பக் கனா ஒன்று கண்டேன்', 'சட்டம் தலை குனியட்டும்' 'நேர்மை உறங்கும் நேரம்'. இந்த ஐந்தைத் தவிர, மற்றதெல்லாம் அரசியல் பேசா நாடகங்கள்.

சோவிடம் ஒருமுறை, நீங்கள் நாடகத்தில் நடித்ததில் மறக்க முடியாத பாராட்டு எது என்ற கேள்விக்கு, "எங்க ட்ரூப்புக்கு ராகினி கோபாலகிருஷ்ணன்னு ஒருத்தர் எழுதிக் கொடுத்தார். அதிலே நான் நடிச்சதைப் பார்த்தார். அப்ப ஒரு பாராட்டு கொடுத்தார். 'சோ, படிச்ச ஆள்தானே! ஏன் இப்படிச் செய்றாரு? இதோட நான் நாடகம் எழுதறதையே விட்டுடப் போறேன். போதும் எனக்கு!' அப்படின்னார். அன்னிக்குப் பேனாவைக் கீழே வெச்சவர்தான்... அப்புறம்  இன்று வரைக்கும் எடுக்கவே இல்லை. அந்த அளவுக்கு, அவர் எழுதின நாடகத்தை நான் நடிச்சுக் காண்பிச்சேன். அதிலே ஒரு பியூட்டி என்ன தெரியுமா? எங்களுக்கு ஒரு முறை டிராமா எழுதினா, அதுக்கப்புறம் அவங்க எங்களுக்கு எழுதமாட்டாங்க. இன்னும் சொல்லப்போனா, அதோட டிராமா எழுதறதையே அவங்க நிறுத்திடுவாங்க. அப்படி ஒரு திறமை எங்க ட்ரூப்புக்கு உண்டு." என அவரைப் பற்றிய விமர்சனத்தையும் செம ஜாலியாகச் சொல்லும் மனப்பக்குவம் சோவுக்கு மட்டுமே உண்டு.

பிறகு எப்படி அரசியல் பற்றி எழுதத் தொடங்கினார்? அவர் பேனா பிடித்த காரணமும் வேடிக்கை விநோதமானதுதான்.  அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் பேச வந்த சோவிடம் சினிமா, சட்டம், அரசியல், பொருளாதாரம் என பல கேள்விகளை அடுக்க... அவரது வழக்கமான பாணியில் பதில் சொன்னார். உடன்  வந்தவர், 'நீ ஏன் அரசியல் எல்லாம் பேசுற.' என்று கேட்டபோது, 'சரிப்பா.. இனி பேசலை. எழுதுறேன்.' என பேனா பிடித்தவர், வாழ்வின் பெரும்பகுதியை பத்திரிகையாளராகவே கழித்தார். அவர் எப்படி ஜோவியலாக பேசி ரசிக்க வைப்பாரோ.. பத்திரிகையும் அப்படியே இருந்தது.

'துக்ளக்' பத்திரிகை தொடங்கப்பட்டபோது 'சோ' கொடுத்த சில கேள்வி பதில்களை படித்து பாருங்கள். 

நிருபர்: உங்களுக்கு இந்த ஆசை எப்படி வந்தது?

சோ: அது தமிழ்நாட்டின் தலை விதி!

நிருபர்: உங்கள் பத்திரிகையின் ஆசிரியர் யார்?

சோ: ஒரு சகலகலா வல்லவர்!

நிருபர்: யார் அது?

சோ: நான்தான்.

நிருபர்: பத்திரிகை ஆரம்பிக்கும் நோக்கம்... லட்சியம் என்ன?

சோ: மக்களுக்கு நல்வழி காட்டி ஒரு புதிய பாரதத்தை உண்டாக்க வேண்டும்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக எல்லா மக்களும் தோள் கொடுத்துச் செயலாற்றவேண்டும்; ஒவ்வொரு தமிழனும் தன் கடமையை உணர்ந்து தன்னைப் பெற்ற தாய்க்கும், தான் பிறந்த மண்ணிற்கும் பெருமை தேடித் தர வேண்டும்; இலக்கியம், பண்பாடு, இந்தியக் கலாசாரம் இவை ஓங்கி வளரவேண்டும்... இந்த லட்சியங்களுக்காகத்தான் நான் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன் என்று நீங்கள் எதிர்பார்த்தால், அது என் தவறல்ல! பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியது; ஆரம்பிக்கப் போகிறேன். அவ்வளவுதான்!" என்றார்.

'துக்ளக்' பத்திரிக்கையின் முதல் அட்டைப்படம், இரண்டு கழுதைகள் பேசிக்கொள்வது போல இருக்கும். ஒரு கழுதை " 'சோ'வின் பத்திரிகை வெளிவந்து விட்டதாமே!' " என்ற கேள்விக்கு இன்னோரு கழுதை "அப்படியா? இனிமேல் நமக்கு நல்ல விருந்துதான்!" என்று சொல்லும். இதுதான் சோ.  

ஆனந்த விகடன் அலுவலகத்தில்தான் 'துக்ளக்' பத்திரிகையும் பிறந்தது. பின்னாளில், 'ஆனந்த விகடன்’ குழுமத் தலைவரான எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மறைவுக்குப் பின்னர் சோ... இப்படி குறிப்பிட்டார்.

"ஆனந்த விகடன் அலுவலகத்தில் தான் 'துக்ளக்' பத்திரிகையும் தொடங்கப்பட்டது. "துக்ளக் பத்திரிகை தமிழகத்தில் வாசகர்களிடையே கணிசமான செல்வாக்கைப் பெற்றிருப்பதற்கும், அதற்கு நான் ஆசிரியராக இருப்பதற்கும் 'எம்.டி’ அவர்கள்தான் காரணம். அவர் இல்லையென்றால் துக்ளக் பத்திரிகையும் இல்லை; நான் பத்திரிகையாளனாக ஆகியிருக்கப்போவதும் இல்லை. சொல்லப்போனால், எனக்கு அகில இந்திய அளவிலும் தமிழக அளவிலும் பல்வேறு அரசியல் தொடர்புகள் கிடைப்பதற்கு 'எம்.டி’-தான் காரணம்." 

அவர் சொன்னதுபோலவே இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர், மொரார்ஜி தேசாய் தொடங்கி பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த ஜெயலலிதா என பல முக்கிய தலைவர்களுடனும் நட்பில் இருந்தார். ரஜினிகாந்தின் ஆஸ்தான நண்பர். முக்கிய பல அரசியல் முடிவுகளுக்குப் பின்னால் சோ-வும் இருந்திருக்கிறார். பா.ஜ.க அரசு இவரை மாநிலங்களவை எம்.பி-யாக அமர்த்தியது. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாட்டில் உள்ள பல மக்களுக்கு மோடியை அறிமுகம் செய்து வைத்ததே சோவின் எழுத்துதான். மோடி பிரதமர் ஆக வரவேண்டும். அவருக்கு அடுத்த சாய்ஸ் ஜெயலலிதா தான்... என்று தீர்க்கமாக சொன்னார். 

இந்தக் கட்டுரையின் முதல் வரியை  இப்போது மீண்டும் படியுங்கள்.

- நா.சிபிச்சக்கரவர்த்தி 

அடுத்த கட்டுரைக்கு