Published:Updated:

சோ: ஒற்றை எழுத்தல்ல! -ஆர். முத்துக்குமார்

சோ: ஒற்றை எழுத்தல்ல! -ஆர். முத்துக்குமார்
சோ: ஒற்றை எழுத்தல்ல! -ஆர். முத்துக்குமார்

ன்றைய அரசியல் பற்றி சோ பேசுவார்!

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்துக்குச் சில நாள்களுக்கு முன்பு இப்படியொரு அறிவிப்பு வெளியாகும். ஆங்காங்கே விளம்பரத் தட்டிகள் காட்சியளிக்கும். அவ்வளவுதான். அதற்குமேல் வேறெந்த விளம்பரமும் இருக்காது. ஆனால், அவர் பேசவிருக்கும் மியூசிக் அகாடமி (பெரும்பாலும்) மதியம் முதலே ஜனத் திரளால் மூச்சுத் திணற ஆரம்பித்து விடும். ஆறு மணிக்குப் பேசப்போகிறார் என்றாலும், நான்கு மணிக்கெல்லாம் கட்சி வித்தியாசங்களை எல்லாம் தகர்த்து எறிந்து விட்டு, அரங்கில் குழுமி விடுவார்கள். 

தொண்டையைச் செருமியபடி, அவர் பேசத் தொடங்கினால், வந்து விழும் ஒவ்வொரு வார்த்தையும் அதிரடிதான். எள்ளல், பகடி, ஏகடியம், நக்கல், நையாண்டி ஆகியவற்றைக் கலந்து அவர் வெளிப்படுத்தும் கூர்மையான, வெளிப்படையான விமர்சனங்களுக்கு அரசியல் அரங்கில் முக்கியத்துவம் அதிகம். அவர் என்ன சொல்கிறார் என்பதை மாநிலத் தலைவர்கள் தொடங்கி இந்தியத் தலைவர்கள் வரை பலரும் உன்னிப்பாகக் கவனித்து, உரிய முக்கியத்துவத்தைக் கொடுப்பது வழக்கம்.

மேடையில் மட்டுமல்ல, தன்னுடைய துக்ளக் பத்திரிகையின் வழியாக நடப்பு அரசியலை நறுக்கென்று விமர்சிப்பது சோவின் பாணி. ஒரு வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய சோவுக்கு மேடை நாடகத்தில்தான் நாட்டம் அதிகம். அங்கும் அரசியல்தான். நறுக் சுறுக் வசனங்களால் நிரம்பிய அந்த நாடகங்கள், அரசியல் அரங்கில் பலத்த வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக, சம்பவாமி யுகே யுகே நாடகத்தைச் சொல்லவேண்டும்.

எங்கு பார்த்தாலும் ஊழல். ஊழலை ஒழிக்க இறைவனே அவதாரம் எடுத்து வந்தாலும்கூட, அவன் திரும்பிப் போக வேண்டியதுதான் என்பதுதான் அந்த நாடகத்தின் உள்ளடக்கம். அப்போது ஆட்சியில் இருந்தவர் முதலமைச்சர் பக்தவத்சலம். அவர் நாடகத்துக்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டார். விஷயம் வெளியே கசிந்தது. வழக்கு தொடுத்தார் சோ. பின்னர் நீதிமன்ற அனுமதியோடு வெளியான அந்த நாடகம் சோவைப் பிரபலமாக்கியது. 

எழுபதுகளில் துக்ளக் என்ற பத்திரிகையைத் தொடங்கினார் சோ. அரசியல் விமர்சனத்தையே சுவாசமாகக் கொண்டு வெளியான பத்திரிகை. ஆனாலும் அந்தப் பத்திரிகை பெரிய அளவில் பிரபலமாகவில்லை. அதற்கான வாய்ப்பு எழுபதுகளில் உருவானது. திராவிடர் கழக ஊர்வலம் ஒன்றில் ராமர் படம் தாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அந்தச் சம்பவம் பற்றிய செய்தியைப் படங்களுடன் வெளியிட்டது துக்ளக். 

அதைத் தொடர்ந்து துக்ளக் பத்திரிகைப் பிரதிகளைப் பறிமுதல் செய்தது கருணாநிதி அரசு. அது பெரிய அளவில் செய்தியானது. கருணாநிதி அரசு துக்ளக் பத்திரிகையை பறிமுதல் செய்திருக்காவிட்டால், எனக்கு அகில இந்திய ரீதியில் ஒரு அங்கீகாரமே கிடைத்திருக்காது என்று பின்னாளில் பேசினார் சோ. 'முகமது பின் துக்ளக்' திரைப்படமும் ஆளுங்கட்சியான திமுக உள்ளிட்ட பல கட்சிகளையும் நையாண்டி செய்தது. அதில் திமுக-வின் கொள்கை நிலைப்பாடுகள், பிரசார முறைகள் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகின.

முழுக்க முழுக்க திமுக, திராவிட இயக்க விமர்சகராக விளங்கிய சோவுக்கு ராஜாஜி, காமராஜர் மீது ஈர்ப்பு உண்டு. 1971 தேர்தலின்போது தென் சென்னை மக்களவைத் தொகுதியில் சோவைப் போட்டியிட அழைத்தார் காமராஜர். ஆனால் அதை மறுத்த சோ, அந்தத் தேர்தலில் ராஜாஜி – காமராஜர் கூட்டணிக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரம் செய்தார். அந்தத் தேர்தலில்தான் திமுக பிரம்மாண்ட வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. 

வெறுமனே பத்திரிகையாளராக மட்டும் அல்லாமல், ஓர் அரசியல் கட்சி ஆதரவாளராகவும் இயங்கினார் சோ என்பதற்கு ஸ்தாபன காங்கிரஸ் – இந்திரா காங்கிரஸ் இணைப்புக்கு அவர் காட்டிய ஆர்வமும் செயல்பாடும் சரியான சாட்சியங்கள். இணைப்புக்காக காமராஜருடன் ஒரு பக்கம், இந்திரா காந்தியுடன் இன்னொரு பக்கம் என்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. 

இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தியபோது, தமிழகத்தில் அதிகம் நெருக்கடிகளை எதிர்கொண்டவர் சோ. முக்கியமாக, அவருடைய பத்திரிகையான துக்ளக், இந்திராவின் நடவடிக்கைக்கு எதிராகத் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்தார் சோ. பத்திரிகையை கறுப்பு அட்டையுடன் வெளியிட்டார். இந்திராவின் நடவடிக்கையை விமர்சித்து கேலிச் சித்திரங்களையும் கருத்துப் படங்களையும் வெளியிட்டார் சோ. அதன் காரணமாக கடுமையான தணிக்கைக்கு உள்ளானது துக்ளக். ஒருகட்டத்தில் துக்ளக் பத்திரிகையையே நிறுத்தி விட்டார். ஆனாலும் தலைமறைவுப் பத்திரிகைகள் பலவற்றில் தன்னுடைய விமர்சனங்களைத் தொடர்ச்சியாக எழுதினார். பிறகு பலருடைய வற்புறுத்தலால் மீண்டும் துக்ளக்கைத் தொடங்கினார். 

அப்போதுதான் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் தனக்கு அறிமுகம் ஏற்பட்டதாகப் பதிவு செய்திருக்கிறார் சோ. பின்னர் ஜனதா கட்சி உருவாக்கப்பட்டு, தேர்தலைச் சந்தித்தபோது அந்தக் கட்சியின் தீவிரமான பிரசாரகராகச் செயல்பட்டார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, டெல்லி, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களிலும் பிரசாரம் செய்தார். வாஜ்பாய், அத்வானி, ராமகிருஷ்ண ஹெக்டே, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் ஆகியோருடன் சோ நெருக்கமானார். 

மத்தியில் இந்திரா காங்கிரஸ் வீழ்த்தப்பட்டு, ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தபோது பிரதமர் மொரார்ஜி தேசாயுடன் நெருக்கம் காட்டினார் சோ. பிற்பாடு அந்தக் கட்சிக்குள் கலகம் வெடித்தபோது, மொரார்ஜி – சரண் சிங் இடையே சமரசத் தூதுவராகச் செயல்பட்டார் சோ. ஆனால் அவருடைய சமாதான முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. 

பிறகு மொரார்ஜி அரசுக்கு எம்.ஜி.ஆர் வசமிருந்த 18 எம்.பிக்களின் ஆதரவு தேவைப்பட்டபோது, அதற்காக எம்.ஜி.ஆரிடம் தூது சென்றவர் சோ. அப்போது மொரார்ஜியை ஆதரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துச் சொல்லி, எம்.ஜி.ஆரை டெல்லிக்கு அழைத்து வந்தார். பலமுறை பேசியும், கடைசிவரை எம்.ஜி.ஆர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவில்லை. ஒருகட்டத்தில், மொரார்ஜி பதவி விலகி, சரண் சிங் பிரதமராகும் சூழல் வந்தபோது, அவருக்கே தன் ஆதரவைக் கொடுத்தார் எம்.ஜி.ஆர். 

பிறகு சரண் சிங் ராஜினாமா செய்தபிறகு, ஜெகஜீவன் ராமைப் பிரதமராக்கும் முயற்சிகள் நடந்தன. அப்போதும் எம்.ஜி.ஆரின் ஆதரவைப் பெற சோவே களமிறங்கினார். எம்.ஜி.ஆரிடம் பேசினார். ஆனால் ஜெகஜீவன்ராம் மீது தனக்கு நம்பிக்கையில்லை. ஆகவே, அவர் பிரதமராக ஆதரவில்லை என்று சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர். ஆனாலும் வாஜ்பாய், சுப்ரமணியன் சுவாமியை அழைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரைச் சந்தித்தார் சோ. ஆதரவும் கிடைத்தது. ஆனால் அதற்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது. 

பிறகு சந்திரசேகரின் ஜனதாவையும் பாரதிய ஜனதாவையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் சோ. அதற்காக ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேவரஸை நாக்பூரில் சந்தித்து இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாகப் பேசினார். பிறகு அத்வானியிடமும் பேசினார். ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இணைப்பு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 

டெல்லி அரசியல் பெரிதாக வெற்றியைக் கொடுக்காத சூழ்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர் அரசை மிகத் தீவிரமாக விமர்சிக்கத் தொடங்கினார் சோ. ஒண்ணரை பக்க நாளேடு என்ற பெயரில் எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கேலியாகவும் கிண்டலாகவும் தொடர்ச்சியாக விமர்சித்தார். தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் அரசாங்க ஃபைலை முதல் முறையாகப் புரட்டும் விழா என்ற தலைப்பில் வெளியான அங்கதக் கட்டுரை குறிப்பிடத்தக்கது. 

தர்மபுரி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மீது காவல்துறை கொண்டு கடும் நடவடிக்கையை எம்.ஜி.ஆர் அரசு எடுத்தபோது, மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு உருவானது. அதில் சோவும் ஓர் உறுப்பினர். அந்தக் குழுவினர் உண்மை அறியச் சென்றபோது, ”அந்த விசாரணைக் குழுவினரே நக்சல் பாரிகளோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என்றார்.  

அதுநாள்வரை அரசியல் விமர்சகராக இருந்த சோ, 1983ல் நேரடி அரசியலில் இறங்கினார் தமிழ்நாட்டில் நடந்த விழா ஒன்றில், ஜனதா கட்சியில் சோ சேர்ந்து விட்டதாக அறிவித்தார் சந்திரசேகர். சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார் சோ. அந்தச் சமயத்தில்தான் ஆந்திராவில் என்.டி.ஆர் அரசைக் கவிழ்த்து விட்டு, பாஸ்கரராவை முதல்வராக்கியது காங்கிரஸ். அந்தச் செயலுக்குப் பகிரங்க எதிர்ப்பு தெரிவித்தவர் சோ.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜானகி அரசுக்கு காங்கிரஸின் ஆதரவைப் பெற்றுத்தர ராஜீவைச் சந்தித்துப் பேசினார் சோ. எம்.ஜி.ஆரின் நினைவாக ஜானகி அரசுக்கு ஆதரவு என்று சொல்லுங்கள். ஆட்சி நடக்கட்டும். இடைப்பட்ட காலங்களில் காங்கிரஸை வலுப்படுத்தித் தேர்தலுக்குத் தயார்ப்படுத்துங்கள். தேர்தல் நேரத்தில் ஜானகி கட்சியை ஜூனியர் பார்ட்னராகச் சேர்த்துக் கொண்டு தேர்தலைச் சந்தித்தால், வெற்றி வசப்படும் என்றார். ஆனால் அந்த யோசனையை ராஜீவ் ஏற்கவில்லை.

பிற்பாடு 1991 தேர்தலின்போது ஜெயலலிதா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார் சோ. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருக்கும் திமுக தோற்க வேண்டும் என்பதுதான் என்னுடைய முதல் குறிக்கோள். அதற்காகவே ஜெயலலிதா வெற்றிபெறவேண்டும் என்று எழுதினார் சோ. ஈழத்தமிழர் விவகாரத்தைத் தொடர்ந்து விமர்சித்து எழுதியவர் சோ. விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பிரிவினை இயக்கம், வன்முறை இயக்கம் என்றதோடு, அங்கே நடப்பது போரோ, இன அழிப்போ அல்ல. உள்நாட்டுக் கலகம் என்றே சொன்னார். 

1991ல் ஜெயலலிதாவை ஆதரித்த சோ, அதற்கடுத்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக – தமாகா கூட்டணி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அந்தக் கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவைப் பெற்றுத் தந்ததில் சோவுக்கும் பங்குண்டு. அந்தக் கூட்டணிக்கு ஆதரவாகத் தன்னுடைய பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதினார். 

தொண்ணூறுகளின் மத்தியில் தமிழ்நாட்டில் பாஜக முக்கியத்துவம் பெற ஆரம்பித்தபோது, அதை ஆதரித்து எழுதிய வெகுசிலரில் சோ முக்கியமானவர். பாஜகவின் குறைபாடுகளைக் கேலியாக விமர்சித்துக் கொண்டே, அந்தக்கட்சி வளர வேண்டியதன் அவசியத்தை அழுத்தமாகப் பதிவுசெய்து கொண்டிருந்தார். அதிமுக–பாஜக கூட்டணியை வரவேற்று எழுதினார். வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோருக்கு ஆதரவாகப் பேசவும் எழுதவும் செயல்படவும் செய்தார். 

இந்திய அளவில் பாஜகவுக்கும் தமிழக அளவில் அதிமுகவுக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த அதே வேளையில், அரிதிலும் அரிதாக அதிமுகவை விமர்சிக்கவும் செய்தார். ஆனால் திமுக, கருணாநிதி எதிர்ப்பு நிலைப்பாட்டில் அவருடைய நிலைப்பாடு அழுத்தந்திருத்தமானது. 2011 தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி உருவாக்கும் முயற்சியிலும் சோவின் பங்களிப்பு இருந்தது. பதவியேற்புக்குப் பிறகு நடந்த விருந்தில் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் நடுநாயகமாக அமர்ந்திருந்தவர் சோ.

அத்வானியின் அரசியல் காற்று அடங்கத் தொடங்கியபோது மோடியை முன்னிறுத்தியது ஆர்.எஸ்.எஸ். அப்போது மோடியைப் பற்றித் தொடர்ச்சியாக எழுதியது துக்ளக். அந்தப் பத்திரிகையின் ஆண்டு விழா ஒன்றில், அத்வானி, மோடி இருவரையுமே பங்கேற்கச் செய்தார். மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, அவருக்குத் தனது முழு ஆதரவையும் வழங்கினார் சோ. அவர் மீது மோடிக்கும் மிகுந்த மரியாதை உண்டு. சோ உடல்நிலை பாதிக்கப்பட்டபோது பிரதமர் மோடியே நேரில் வந்து பார்த்தார் என்பது அதற்கான சான்று.

கடந்த அரை நூற்றாண்டு அரசியலில் சோவின் மேடை, பத்திரிகை, அரசியல் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் கவனத்துக்கும் ஆய்வுக்கும் விமர்சனத்துக்கும் உரியவை என்பதில் சந்தேகமில்லை! 

- ஆர். முத்துக்குமார்