வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (13/12/2016)

கடைசி தொடர்பு:18:14 (13/12/2016)

வர்தா புயலில் அழிந்த மரங்கள்... கோடை வெப்பம் அதிகமாகுமா? ஓர் அலசல்

வர்தா

சென்னையை புரட்டிப் போட்ட வர்தா புயல் மற்றும் மழை.. மேலும் படங்களுக்கு...

டந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தின் காரணமாக காணும் இடமெல்லாம் தண்ணீராகக் காட்சியளித்தது சென்னை. இந்த ஆண்டு வர்தா புயல் தாக்குதல் காரணமாக திரும்பிய பக்கமெல்லாம் சாய்ந்து கிடக்கும் மரங்களோடு காட்சியளிக்கின்றது. நேற்று (12/12/16) தாக்கிய வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் மிகப்பெரிய பாதிப்பு... மரங்களுக்குத்தான். இதுவரை கிடைத்த தகவல்களின்படி, மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன!

சென்னையை புரட்டிப் போட்ட வர்தா புயல் மற்றும் மழை.. மேலும் படங்களுக்கு...


குறிப்பாக, சென்னையில் அதிகமான மரங்கள் சாய்ந்து இருப்பதைப் பார்க்கும்போது... 'இவ்வளவு மரங்களா சென்னையில் இருந்தன!' என்கிற வியப்பு முதலில் ஏற்படுகிறது. கூடவே, 'சென்னையின் பசுமை அழகு பறிபோய்விட்டதே' என்கிற கவலையும் பொங்குகிறது! மரம் நட்டால் மழை பொழியும் என்றுதான் மரம் நடுவது பெருகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த புயல் மழை வந்து மரங்களை அதிக அளவில் காவுவாங்கியிருப்பது வேதனையான விஷயமே!

சென்னையை புரட்டிப் போட்ட வர்தா புயல் மற்றும் மழை.. மேலும் படங்களுக்கு...

     மரங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட மரம் வளர்ப்பு சங்கத் தலைவர் ‘எழில்சோலை’ மாசிலாமணியிடம் நாம் கேட்டபோது, “பொதுவாக, அந்த மண்ணுக்கு எந்த மரங்கள் ஏற்றவையோ, அவற்றை நடவு செய்வதுதான் மரங்களுக்குப் பாதுகாப்பு. குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டத்தின் கடலோரம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் எந்த வகை மரங்கள் தானாகவே செழித்து வளர்ந்து நிற்கின்றனவோ... அவற்றையே பரவலாக நடவு செய்யவேண்டும். குறிப்பாக சாலையோரங்களில் அவற்றை அதிகமாக நட்டு வைத்திருக்க வேண்டும். 

 கடலோர பகுதிகளுக்கு வேப்ப மரம், புங்கை மரம், காட்டு வாகை மரம் போன்ற மரங்களே மிகவும் ஏற்றவை. ஆனால், தற்போது சாய்ந்துள்ள பெரும்பாலான மரங்களில் குல்மோகர் (ஃபயர் ஆஃப் பாரஸ்ட் என்ற பெயரும் இதற்கு உண்டு) போன்ற அழகுக்காக வளர்க்கப்பட்ட மரங்கள்தான் அதிகமாக சாய்ந்துள்ளன. அழகுக்காக வளர்க்கப்படும் மரங்கள் பொதுவாக புயலை எதிர்கொள்ள முடியாத மரங்கள்தான். அதிலும் இந்த குல்மோகர் மரம் வேகமாக வளர்ந்துவிடும் என்பதால் பலரும் இதையே சாலையோரங்களில் நடுகிறார்கள். இப்படி கடந்த 7 முதல் 10 ஆண்டுகளுக்குள் நட்ட அழகு மரங்களே பெரும்பாலும் சாய்ந்துள்ளன. இந்த வகை மரங்கள் எப்போதும் உறுதித்தன்மையோடு இருப்பதில்லை. 

சென்னையை புரட்டிப் போட்ட வர்தா புயல் மற்றும் மழை.. மேலும் படங்களுக்கு...

    வேம்பு, புங்கை, அரசு போன்ற மரங்களும் ஆங்காங்கே சாய்ந்திருப்பதைக் காண முடிகிறது. இதற்குக் காரணம் அந்த மரங்கள் நடப்பட்ட விதம் மற்றும் தவறான பராமரிப்பு போன்றவைதான். பொதுவாக சென்னை போன்ற நகர்ப்புறப் பகுதிகளில் நட்ட மரங்களைச் சுற்றி கான்கிரீட் அமைத்து வேர்கள் பக்கவாட்டில் செல்ல முடியாமல் தடுக்கப்படுவதால் மரங்களுக்கு பிடிப்புத் தன்மை இல்லாமல் சாய்ந்துவிடுகின்றன. அரச மரங்களைப் பொறுத்தவரை பல இடங்களில் பறவைகளின் எச்சம் காரணமாக மேலாகவே வளர்ந்திருக்கின்றன. அவற்றின் வேர் சரிவர மண்ணுக்குள் ஊடுருவ முடியாத நிலையும் இருக்கின்றது. இத்தகைய மரங்கள்தான் சாய்ந்துள்ளன. வேம்பு, புங்கை மரங்களில் பெரும்பாலும் கிளைகளே அதிகமாக ஒடிந்துள்ளன. 

 கிராமப்புறங்களில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தேவையில்லாத பக்கக் கிளைகளை அகற்றி மரங்களை சீர்படுத்துவது வழக்கம். இதனால் புயல் காற்றானது மரங்களைச் சாய்க்காமல், அவற்றை தழுவிச் சென்றுவிடும். இதனால்தான் பனை மரங்கள் புயலுக்குச் சாய்வதில்லை. இனிமேலாவது நகர்ப்புறங்களில் யார் மரங்களை நடுவதாக இருந்தாலும், அவற்றை அழகுக்கு என்பதைத் தவிர்த்து மண்ணுக்கு ஏற்ற மரங்களாக மட்டுமே நடவேண்டும். கூடவே அவற்றை கட்டாயம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கிளைகளை அகற்றி பராமரிக்கவும் வேண்டும். இதைச் செய்தால், தற்போதுபோல பெருமளவில் மரங்கள் விழுவதைத் தடுக்கலாம்" என்று சொன்னார்.

சென்னையை புரட்டிப் போட்ட வர்தா புயல் மற்றும் மழை.. மேலும் படங்களுக்கு...

  ஓய்வுபெற்ற வனத்துறை அலுவலர், 'மரம்' ராஜசேகரன் பேசும்போது, "வேம்பு, புங்கை, அரசு, புளி போன்ற மரவகைகளைத்தான் முக்கியமாக நடவேண்டும். இந்த மரங்களின் வேர் ஆழமாக செல்லும், எவ்வளவு காற்றடித்தாலும் கீழே விழாமல் இருக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் மேற்சொன்ன பாரம்பர்ய மரங்களே சிறந்தவை. மரங்களை நடும்போது அடர்த்தியாக நட்டால் ஒன்றோடு ஒன்று மோதி பெரும்பாலும் மரங்கள் சாய்ந்துவிடாமல் இருக்கும். சாய்ந்த மரங்களுக்கு பதிலாக உடனடியாக புதிய மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஆனால், அவை வளர்ந்து, சென்னையை பழைய நிலைக்கு மாற்றுவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும். என்றாலும் இதைச் செய்யாவிட்டால், எதிர்காலத்தில் கோடையின் வெப்பத் தாக்குதலை சென்னை தாங்காது என்கிற நிலை உருவாகிவிடும். 
கடற்கரைப்பகுதியில் காற்றைத் தடுக்கும் வகையில் மரங்களை அடுக்கு முறையில் நடவேண்டும். இதனால் நகருக்குள் நுழையும் புயல் காற்றின் வேகமானது தடுக்கப்பட்டு குறைவாகவே காற்றுவீசும். மரங்கள் எதிரிகள் இல்லை, எப்போதும் நம் நண்பர்கள்தான் என்பதை மக்கள் உணர வேண்டும். வெப்பம், புகை, மாசு போன்றவற்றைத் தடுக்கும் அரணாக இருந்த மரங்கள் சாய்ந்திருப்பதால் வரும் காலங்களில் சுற்றுச்சூழலிலும் பாதிப்பு அதிகமாக இருக்கும். குறிப்பாக தற்போது, இவ்வளவு மரங்கள் சாய்ந்திருப்பதால், வரும் ஆண்டு கோடையில் வெப்பத்தின் தாக்கம் சென்னையைப் பொறுத்தவரை கடுமையாகவே இருக்கும்" என்று சொன்னார்.

-துரை.நாகராஜன்.

 படங்கள்: ப. சரவண‌க்குமார், மீ.நிவேதன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்