குப்பைகளை இறக்குமதி செய்கிறது ஸ்வீடன்... ஏன்?

ஸ்வீடன் குப்பை

பெரும்பாலான நாடுகளில் சுகாதார சீர்கேடுகளுக்கும், சுற்றுச்சூழல் மாசுபாடுகளுக்கும் காரணமாக இருப்பவை அந்நாட்டில் சேகரமாகும் குப்பைகள்தான். பல நாடுகள் தங்கள் நாட்டின் குப்பைகளை என்ன செய்வதென தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஸ்வீடன் அரசாங்கமோ வெளிநாடுகளில் இருந்து குப்பைகளை அதிகளவில் இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டிவருகிறது. தங்கள் நாட்டில் இருக்கும் குப்பைகளின் அளவு போதவில்லை என்கிறது. அப்படி குப்பைகளை வைத்து ஸ்வீடன் என்ன செய்கிறது தெரியுமா?

மறுசுழற்சியில் அசத்தும் ஸ்வீடன்:

குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ‘waste to energy’ விஷயத்தில் முன்னோடியாக விளங்குகிறது ஸ்வீடன். தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் 99% குப்பைகளை ஸ்வீடன் ஆனது மறுசுழற்சி மற்றும் ஆற்றல் உற்பத்திக்காக பயன்படுத்திவருகிறது. மீதம் 1% மட்டுமே குப்பைகளாக அழிக்கப்படுகின்றன. இப்படி மறுசுழற்சி செய்யப்படும் குப்பைகள் அனைத்தும் வேறு பொருட்களாகவோ அல்லது மின்சாரமாகவோ மாற்றப்படுகிறது. அத்துடன் ஸ்வீடனில் இருக்கும் வீடுகளுக்கு வெப்ப ஆற்றலை அளிக்கவும் இந்த குப்பைகள் பயன்படுகின்றன. தற்போது 32 மறுசுழற்சி நிலையங்கள் ஸ்வீடனில் செயல்பட்டு வருகின்றன. இவை மொத்தம் 810,000 வீடுகளுக்கு வெப்பத்தையும், 2,50,000 வீடுகளுக்கு மின்சாரத்தையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் மறுசுழற்சி செய்யத்தக்க கழிவுகள் பெறப்பட்டு அவை இந்த நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த 2012-ம் ஆண்டு மட்டும் மொத்தம் 2,270,000 டன் எடை கொண்ட குப்பைகள் எரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்பட்டுள்ளது. ஒருபொருளை புதிதாக உருவாக்குவதற்கு தேவைப்படும் ஆற்றலை விடவும், மறுசுழற்சி செய்யப்படும் குப்பைகளைக் கொண்டு புதிய பொருளை உருவாக்கவும் குறைவான ஆற்றலே தேவைப்படுகிறது.

மக்களின் ஒத்துழைப்பும், வெற்றி கண்ட மறுசுழற்சியும்:

குப்பைகளை மறுசுழற்சி செய்வது என்பது எளிதான காரியம் கிடையாது. எனவே இதற்கு மக்களின் ஒத்துழைப்பும் ஸ்வீடன் அரசுக்கு முக்கியமானது. எனவே வீடுகளில் இருந்து குப்பைகளை பெறும் போதே, மட்கும் குப்பைகள், பிளாஸ்டிக் குப்பைகள், உயிரிக் கழிவுகள், கண்ணாடிகள், மின்னணு கழிவுகள் என தரம்பிரித்து சேகரிக்கப்படுகின்றன. இப்படி பெறப்படும் குப்பைகள் அனைத்தும், மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஆற்றலாக மாற்றப்படுகிறது. இதற்கு ஸ்வீடன் நாட்டின் குப்பைகள் மட்டுமே போதாது என்பதால் வெளிநாடுகளில் இருந்தும் குப்பைகளை இறக்குமதி செய்கிறது. அத்துடன் மின்சார உற்பத்திக்கு இந்த குப்பைகள் பெருமளவில் பயன்படுகின்றன. மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி மற்றும் எண்ணெய் ஆகியவற்றை விடவும் இந்த குப்பைகள் எளிதாக கிடைக்கின்றன. இவற்றின் விலையும் மிகவும் மலிவு என்பதால், இவை மின் உற்பத்திக்கு சிறந்த எரிபொருளாக விளங்குகிறது.

டிஸ்ட்ரிக்ட் ஹீட்டிங்:

ஸ்வீடன் போன்ற வெப்பநிலை குறைந்த நாடுகளில் இந்த டிஸ்ட்ரிக்ட் ஹீட்டிங் முறையானது பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு வீடுகளிலும் நீரை சூடாக்க அல்லது வெப்பத்தை உண்டாக்க எரிபொருள்கள், மின்சாரம் ஆகியவை வீணாக்குவதற்கு பதிலாக, குறிப்பிட்ட மறுசுழற்சி நிலையங்களில் இருந்து, கழிவுகள் எரிக்கப்பட்டு அதன் மூலம் உண்டாகும் வெப்ப ஆற்றல் வீடுகளுக்கு வெந்நீராக அல்லது வெப்ப ஆற்றலாக பகிர்ந்து அளிக்கப்படும். கழிவுகள் மட்டுமின்றி நிலக்கரி, உயிரி எரிவாயு போன்றவையும் எரிக்கப்பட்டு வெப்ப ஆற்றலானது வீடுகளுக்கு கொண்டு செல்லப்படும் முறையே இந்த டிஸ்ட்ரிக்ட் ஹீட்டிங் ஆகும். பனி சூழ்ந்த ஒவ்வொரு வீட்டிலும் எரிபொருட்களை எரித்து வெப்பத்தை உருவாக்க அதிக செலவாகும். எரிபொருட்களின் தேவை அதிகமாகும். சுற்றுச்சூழல் அதிகம் மாசுபடும். இந்த சிக்கல்களை தவிர்க்க உதவும் தொழில்நுட்பம்தான் இந்த டிஸ்ட்ரிக்ட் ஹீட்டிங். 

இதற்கென அமைக்கப்பட்ட பிரத்யேக நிலையங்களில் எரிபொருட்கள் ஆனது எரிக்கப்பட்டு, நீரானது சூடாக்கப்படும். இந்த சூடான நீரானது, குழாய்கள் மூலம் வீடுகளுக்கு அனுப்பப்படும். சரியாக வீடுகளுக்கு இந்த வெந்நீரை அனுப்புவதற்கு ஏற்ற குழாய்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கும். இந்த தொழில்நுட்பம் பற்றி இங்கே கூறக் காரணம் என்னவெனில், இதிலும் எரிபொருளாக குப்பைகளையே பயன்படுத்துகிறது ஸ்வீடன். எனவே மின்ஆற்றல் மட்டுமின்றி, வீடுகளுக்கு வெப்பத்தை கடத்தவும் இந்த குப்பைகள் பயன்படுகின்றன. இவற்றில் மின்நிலையங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் உருவாகும் வெப்ப ஆற்றலும் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

மரபுசார் எரிபொருட்கள் மீது ஸ்வீடன் அரசு 1991-ம் ஆண்டு முதல் கடுமையான வரியை விதித்துவருகிறது. எனவே அந்நாட்டின் பாதி மின் உற்பத்தி மரபுசாரா ஆற்றல்கள் மூலமாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன. அது மட்டுமில்லாமல் இந்த மறுசுழற்சி செய்வதற்கு தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே தனியார் நிறுவனங்களும் மறுசுழற்சி நிலையங்கள் அமைத்து, வீடுகளுக்கு வெப்பத்தை அழித்து வருகின்றனர். பல மறுசுழற்சி நிலையங்களில் இந்த கழிவுகள் எரிக்கப்பட்டாலும் கூட, இவை அனைத்தும் நாட்டின் ஹீட் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்கும். 

இதுபோன்ற வழிகளில் குப்பைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதால் அந்நாட்டில் குப்பைகளின் தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு வருடமும் தேவைப்படும் குப்பைகளின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதே சமயம் ஸ்வீடன் சொல்வது போல அந்நாடு 99% குப்பைகளை எல்லாம் மறுசுழற்சி செய்வது கிடையாது. பாதி கழிவுகளை மறுசுழற்சிக்காக பயன்படுத்தும் ஸ்வீடன், மீதி குப்பைகளை எரித்து சாம்பலாக்குகிறது. எனவே இது எல்லாம் மறுசுழற்சி கணக்கிலேயே வராது என்றும் வாதிடுகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். அதேசமயம் குப்பைகளை உபயோகமான வழிகளில் கையாள்வதில் ஸ்வீடன் சிறந்து விளங்குகிறது என்பதை மறுக்க முடியாது. 

- ஞா.சுதாகர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!