Published:Updated:

செய்தி வாசித்த போது கலங்கிய செய்தியாளர்களைத் தெரியுமா?

செய்தி வாசித்த போது கலங்கிய செய்தியாளர்களைத் தெரியுமா?
செய்தி வாசித்த போது கலங்கிய செய்தியாளர்களைத் தெரியுமா?

சிரியா நாட்டில் நடந்த போர்விமான தாக்குதலின்போது பெரிய அளவில் அடிபட்டு ஆம்புலன்சில் உட்கார வைக்கப்பிடிருந்தான் சிறுவன் ஒருவன். அச்சிறுவனைப் பற்றி சி.என்.என் செய்தி வாசிப்பாளர் Kate Bolduan விவரித்து சொல்லும்போதே கண் கலங்கிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இப்படியான பல தருணங்கள் தமிழகத்தைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர்களுக்கும் நிகழ்ந்ததுண்டு. அந்த இக்கட்டான தருணங்களை அவர்களே நினைவு கூர்ந்துப் பேசுகிறார்கள்.

ஹேமா ராக்கேஷ், தந்தி டி.வி:

2004-ம் ஆண்டில் 8- ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே டி.வி மீடியாவில் இருக்கிறேன்.  சேட்டிலைட் சேனலான தந்தி டி.வி க்கு வந்து  ஐந்து வருடங்கள் ஆகிறது. இத்தனை வருடங்களில் செய்தி வாசிக்கும் போது நான்  கலங்கினேன் என்றால், அது கடந்த வருடம் டிசம்பர் மாத மழையின் போது தான். மழை வெள்ள பாதிப்பு குறித்து லைவ் செய்தி வாசிக்கும் போது கலக்கத்தை வெளிகாட்டாமல் இருக்க முடியவில்லை. அதற்கு அடுத்தப்படியாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு, அவரது உடல் போயஸ் கார்டனில் இருந்து ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லும் போது என்னால் சரியாக விவரிக்கவே முடியவில்லை. கண்களில் நீரோடுதான் செய்தி வாசித்தேன். என்னால் இந்த இரண்டு தினங்களையும் வாழ்க்கையில் மறக்கவே முடியாது.
 

பிரியா, புதிய தலைமுறை:

குழந்தைகளின் பாலியல் பலாத்காரம் பற்றிய செய்தியை வாசிக்கும்போது கலக்கமாகவும், அதே நேரத்தில் கோபமாகவும் இருக்கும். இந்த நேரங்களில்  என்னை நான் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் கிட்டத்தட்ட சோகமான மனநிலைக்குப் போய்விடுவேன். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு தாய்மை குணம் இருக்கும் அல்லவா?  யாருடைய குழந்தையாக இருந்தாலும், ஒரு அவலம் ஏற்படும் பொழுது நாமும் கஷ்டப்படுவோம் இல்லையா? அந்த கஷ்டம் எனக்கு எப்போதும் உண்டு. இந்த ஃபீல்டுக்கு வந்தப் பிறகு பொறுமையை அதிகமா கத்துக்கிட்டேன்.

ஃபாத்திமா பாபு, ஜெயா டி.வி: 

30 வருடங்களாக செய்தி வாசிப்பில் இருக்கேன். மிகுந்த கனத்த மனதோடு, கண்ணீரோடு  வாசித்த செய்தி என்றால் அது முதல்வராக இருந்து மறைந்த அம்மா அவர்களுடைய மரண செய்திதான். அதற்கு முன்பு  2001,  செப்டம்பர் 11 ம் தேதி world trade center கட்டடம் தகர்க்கப்பட்ட செய்தியை வாசிச்சப்போ மனசுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது. மற்றொரு செய்தி ஒரிசாவில் ஒருவர் இறந்த தன்னுடைய மனைவியை தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்த செய்தி இந்த மூன்று செய்தியையும் கனத்த மனதோடுதான் வாசித்தேன்.  
 

சன் டிவி. சுரேஷ் குமார்:

20 வருஷமா மீடியாவில் இருக்கேன். செய்தி வாசிப்பு, திரை விமர்சனம் என தொடர்ந்து தொய்வில்லாமல் இப்போது வரைக்கும் என்னோட வேலை நகர்கிறது. 2004-ம் ஆண்டு சென்னையை தாக்கிய சுனாமி பற்றிய செய்தியை பயத்துடன் வாசித்தேன். சுனாமி வந்த போது நான் வீட்டிலிருந்தேன். என் வீட்டருகே இருந்தவர் ‘தண்ணீர் வந்திடுச்சு சார்'னு சொன்னார். அந்த வருடங்களில் தண்ணீர் பஞ்சம் என்பதால தண்ணீர் லாரிதான் வந்திருக்கும் என நினைத்தேன். அதற்கு பிறகுதான் சுனாமி வந்ததாகச் சொன்னார். உடனே நியூஸ் டெஸ்குக்கு போன் செய்து விசாரித்ததும் உடனே கிளம்பி வாங்கணு உத்தரவு. அவரசர அவசரமாக கிளம்பிப் போனேன்.  இன்னும் கூட நினைவில் பத்திரமாய் இருக்கிறது.

- வே.கிருஷ்ணவேணி