வெளியிடப்பட்ட நேரம்: 09:25 (18/12/2016)

கடைசி தொடர்பு:09:25 (18/12/2016)

டோரன்ட் தளங்களை ஒன்றும் செய்ய முடியாதா? #KickassTorrentsIsBack

ணையத்தில் அதிகமாக உலவுபவர்களுக்குப் பரிச்சயமான வார்த்தை ‘டோரன்ட்’. பெரும்பாலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் தளங்களில் கோப்புகளை டோரன்ட் வடிவில் வழங்குவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவைகளை நேரடியாக டவுண்லோட் செய்ய முடியாது. டோரன்ட் வழங்கும் எக்ஸ்டன்ஷன் உதவியோடு அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதிக மெமரி அளவுள்ள ஃபைல்களை டவுன்லோடு செய்ய டோரன்ட் எளிதாக இருக்கும் என்பதால் இதனை விரும்புகிறார்கள்.

ஆனால், டோரன்ட் தளங்களில் பெரும்பாலானவை அப்படிச் செயல்படுவதல்ல. வேறொருவர் காப்புரிமை பெற்ற தகவல்களை இலவசமாகப் பொதுவெளியில் பகிர்ந்து அதைப் பலரும் டவுண்லோட் செய்வதற்கு உதவிகரமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், டோரன்ட் தளங்களை அதிகமானோர் பயன்படுத்துவதே இந்த விஷயங்களுக்காகத்தான். வேறொருவர் காப்பிரைட் பெற்று வைத்திருக்கும் ஒரு திரைப்படத்தை அவரது அனுமதியின்றி டோரன்ட் தளங்களில் பதிவேற்றுவதன் மூலம் அதை லட்சக்கணக்கானோர் இலவசமாகவே டவுண்லோட் செய்துகொள்ள முடியும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் டோரன்ட் தளங்களை முடக்க முயற்சித்தனர். இப்படித்தான் கடந்த ஆகஸ்டில் டோரன்ட் தளங்களின் ராஜாவான 'கிக் ஆஸ் டோரன்ட்' தளம் முடக்கப்பட்டது.

சுமார் நூறு கோடி டாலர் மதிப்புள்ள படங்கள், இசை ஆல்பங்கள் உள்ளிட்ட தகவல்களைத் திருடுவதாகப் புகார் எழுந்ததையடுத்து அமெரிக்க நீதித்துறையால் இந்த இணையதளம் முடக்கப்பட்டது. இந்தத் தளத்தின் நிறுவனர் ஆர்டெம் வாலின் போலந்து நாட்டில் கைது செய்யப்பட்டார். அவரது ஆப்பிள் போன், மற்றும் ஐ-க்ளவுட் மூலம் அவரது இருப்பிடத்தை அறிந்துகொண்டு கைது செய்ததாகக் காவல்துறை தெரிவித்தது. 'தல'யைத் தூக்கிவிட்டால் எல்லாம் அடங்கிவிடும் என நினைத்தது நீதித்துறை.

டோரன்ட் முடக்கப்பட்ட செய்தி, எல்லா நாடுகளிலும் இருக்கும் டோரன்ட் பயன்பாட்டாளர்களுக்குப் பேரிடியாக வந்து இறங்கியது. இந்தச் செய்திக்குப் பிறகு, உலகின் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட தளங்களில் 186-ஆவது இடத்தில் இருந்த டோரன்ட் தொகுப்புத் தளம் Torrent.ez தனது பயனாளர்களுக்குப் பிரியாவிடை கொடுத்துத் தளத்திற்கு ஷட்டரைப் போட்டது. இப்படி இணைய உலகில் கெத்து காட்டிய இந்த 'கிக் ஆஸ் டோரன்ட்' தளம்தான் இப்போது திரும்ப வந்திருக்கிறது. முன்பிருந்த டோரன்ட் தளத்தின் அத்தனை தகவல்களையும் அப்படியே வைத்து, டொமைன் நேம் மட்டும் மாற்றி வந்திருக்கிறது.

டோரன்ட்

ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் டோரன்ட். அதன் முகப்புப் பக்கத்தில், ' சர்வர்கள் தற்போது பாதிக்கப் பட்டிருக்கின்றன. இந்தக் குறைகளைச் சரிசெய்து கொண்டிருக்கிறோம். விரைவில் டோரன்ட் தளம் இயங்கத் தொடங்கும். நாங்கள் எங்கேயும் போய்விடவில்லை. கோழைகள்தான் தம் முகத்தைக் காட்டாமல் நிழலாட்சி புரிவார்கள். நாங்கள் முன்புபோலவே திரும்ப வந்திருக்கிறோம். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. விரைவில் எல்லோரும் டோரன்ட்டைப் பயன்படுத்தலாம்' எனச் செய்தி வெளியிடப் பட்டிருக்கிறது. தங்களது குழுவினருக்காக, ரிக் ஆஸ்ட்லியின் பிரபல ஆல்பமான, 'Never Gonna Give You Up' வீடியோவையும் முகப்புப் பக்கத்திலேயே பின் செய்து வைத்திருக்கிறார்கள். இதன்மூலம் கிக் ஆஸ் டோரன்ட் தளம் அடுத்த அத்தியாயத்திற்குத் தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.

இந்தத்  தளங்களை முடக்க அரசும், நீதிமன்றமும் பல முயற்சிகள் செய்தாலும் தற்காலிகமாகத் தடைசெய்யப் பட்டிருக்கின்றன என்பதே உண்மை. இதேபோல 'கபாலி' படம் வெளியாவதற்கு முன்பு பிரபலமான பைரேட் தளமான தமிழ்ராக்கர்ஸ்.காம் முடக்கப்பட்டது எனினும் 'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' என அந்தத் தளம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் 'புலிமுருகன்' படத்தை இந்த இணையதளம் வெளியிட்டபோது, இதன் அட்மின்கள் கோவையில் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், சற்று நேரத்தில் 'எங்கள் அட்மின்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. கவலை வேண்டாம்' என ட்வீட் செய்து அதிரவைத்தனர் தமிழ்ராக்கர்ஸ் குழுவினர்.

இப்படித்தான், டோரன்ட் தளங்கள் வெவ்வேறு நாடுகளில் வசிப்பவர்களால் நிர்வகிக்கப் படுகின்றன. ஒருவரைக் கைது செய்தாலும் இன்னொரு நாட்டில் இருப்பவர் தொடர்ந்து தளத்தை ஆக்டிவாக வைத்திருக்கிறார் என்பதால்  இந்தத் தளங்களை முடக்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை. அரசு, நீதித்துறை மற்றும் திரையுலகினர் கண்களில் விரல்விட்டு ஆட்டும் டோரன்ட் தளங்களைத் தடுக்க இன்னும் பலமான சைபர் செக்யூரிட்டி தேவைப்படும் எனக் கருதப்படுகிறது.  

 

- விக்கி

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்