1 கி.மீக்கு 500 ரூபாய் டாக்ஸி கட்டணம்.. டிரைவர் லைசென்சை பறித்து போலீஸ் அதிரடி | Call taxi driver charges 500 rupees for 1 kilometer

வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (26/12/2016)

கடைசி தொடர்பு:11:46 (27/12/2016)

1 கி.மீக்கு 500 ரூபாய் டாக்ஸி கட்டணம்.. டிரைவர் லைசென்சை பறித்து போலீஸ் அதிரடி

1 கிமீக்கு 500 ரூபாய்

‘வண்டி எக்மோர் போகாதுங்க; அடையார்ல டிராஃபிக்; மவுன்ட் ரோட் தூரம்’ என்று ‘பாட்ஷா’ ரஜினிபோல் மொக்கை காரணம் சொல்லும் டாக்ஸி  டிரைவர்கள் ஒருவகை. ‘அன் டைம்  வேற; கொஞ்சம் காஸ்ட்லி ஆகும்’ என்று கஸ்டமரை விட்டுவிடாமல் மீட்டருக்கு மேல் ரேட் சொல்லும் டிரைவர்கள் இன்னொரு வகை. இதில் இரண்டாவதையும் தாண்டி ‘அதுக்கும் மேல’ சென்று விட்டார், (1 கிமீக்கு 500 ரூபாய்) டாக்ஸி டிரைவர் ஜமீல் அஹமதுகான்.

சிங்கப்பூரைச் சேர்ந்த ரேமண்ட் இயோ, அலுவல் விஷயமாக இந்தியா வந்தவர் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார். விமான நிலையத்துக்குச் செல்வதற்காக டாக்ஸியை அழைத்தவர், முதலில் வந்த டாடா இண்டிகா காரில் ஏறி அமர்ந்திருக்கிறார். ரேமண்டின் அவசரத்தைப் புரிந்து கொண்ட டாக்ஸி டிரைவர் ஜமீல், ‘மீட்டர்லாம் போட முடியாது; ரொம்ப தூரம் போகணும்; 200 ரூபாய் ஆகும்’ என்று அரைகுறை ஹிந்திங்கிலீஷில் பேரம் பேசியிருக்கிறார். ‘அண்ணன்டதானடா கேக்குற... 200 ரூபா எப்படி பத்தும்.. இன்னும் கேள்றா’ என்ற வடிவேலுவின் டயலாக், டிரைவரின் மைண்ட் வாய்ஸில் வந்ததோ என்னவோ, ஏர்போர்ட் வந்ததும் 200 ரூபாயை தடாலென 500 ஆக்கிவிட்டார். இதற்கு ஜமீல் காரணமாகக் கைகாட்டியது, ரேமண்ட் சுமந்து வந்த 2 சூட்கேஸ்கள். இத்தனைக்கும் மும்பைக்கு அடிக்கடி தொழில் விஷயமாக வந்து போகும் ரேமண்டுக்கு, தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து விமான நிலையத்துக்கு வெறும் 1 கி.மீ தூரம்தான் என்பது நன்றாகவே தெரியும். 

ரேமண்ட் அவரிடம் பேரம் பேசியும் பேமென்ட் விஷயத்தில் வளைந்து கொடுக்கவில்லை ஜமீல். ‘500 ருப்யா தீஜியே... நஹிதோ ஏர்போர்ட் கா அந்தர் நஹி ஜா ஸக்தேஹே’ என்று மிரட்டலுக்கும் ஆளானார் ரேமண்ட். வேறு வழியில்லாமல் 500 ரூபாயைக் கொடுத்துவிட்டு நேராக விமான நிலையத்துக்குச் செல்லாமல், பிரதம மந்திரி அலுவலகத்துக்கு இதை ஒரு கம்ப்ளெய்ன்ட் மனுவாக எழுதி அனுப்பிவிட்டார். ‘இந்தியாவுக்கே இது மாதிரி டிரைவர்களால் இழுக்கு... இது வழிப்பறிக்குச் சமம்; எனக்கு இந்திய தேசத்தின் மீதிருந்த மதிப்பே போய்விட்டது’ என்கிற ரீதியில் இருந்த அந்த மனு, மஹாராஷ்ட்ரா போக்குவரத்து கமிஷனர் அலுவலகத்துக்குச் செல்ல, விஷயத்தைத் தீவிரமாக்கினர் காவல்துறையினர். டாக்ஸியும் களவுமாகப் பிடிபட்டார் ஜமீல்.

முதலில் நான் அவரை டிராப் செய்யவே இல்லை என்று வாதிட்டவர், பின்பு சிசிடிவி கேமராக்களின் ஆதாரங்களைக் காட்டியதும்தான் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஜமீலின் டியூட்டி ஏரியாவே பெரும்பாலும் விமான நிலையத்தைச் சுற்றித்தானாம். இந்தி தெரியாத வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்தான் ஜமீலின் டார்க்கெட். எப்படியாவது அவர்களை வாடிக்கையாளர்கள் ஆக்கிக்கொண்டு, ஃப்ளைட் சார்ஜ் வசூலிப்பது ஜமீலின் ஸ்டைல். 

‘‘என் நண்பர்கள் இந்தியாவைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்கள். அதுவும் மும்பையில் இந்த மாதிரி டாக்ஸி டிரைவர்களின் அட்டகாசங்களைப் பற்றி நிறைய சொல்லித்தான் அனுப்பினார்கள். நான் இரண்டு தடவை மும்பை வந்திருக்கிறேன். அப்போதும் இதுபோல் சிக்கலில் மாட்டியுள்ளேன். ஆனால், அதெல்லாம் இந்தளவு மோசமான அனுபவமாக அமையவில்லை. ஜமீலிடம் நான் மீட்டர் போடச் சொன்னேன். மறுத்தவர், முதலில் 200 ரூபாய் கேட்டார். இறங்கும்போது 500 ரூபாயாக மாற்றிவிட்டார். லக்கேஜுக்கும் சேர்த்து என்றார். இத்தனைக்கும் நான் ஒரு கைப்பையும், ஒரு சூட்கேஸும்தான் வைத்திருந்தேன். விமானத்துக்குத் தாமதமானாலும் பரவாயில்லை என்று ஆன்லைனில் இதற்கு எப்படிப் புகார் செய்வது என்று தேடினேன். பிரதம மந்திரி அலுவலகத்துக்கு இது பற்றி புகார் மனு அனுப்பினேன்.’’ என்று சிங்கப்பூர் பத்திரிகைக்கு ரேமண்ட் பேட்டி கொடுத்ததைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள தன்னார்வத் தொண்டர்கள் மூலமாக ஜமீல் கண்டுபிடிக்கப்பட்டு, அவரின் டாக்ஸி சீல் வைக்கப்பட்டது; டிரைவிங் லைசென்ஸும் பறிக்கப்பட்டிருக்கிறது.

‘‘ஒரு தனிமனிதனின் புகாருக்கு இந்திய காவல்துறை இப்படி ஆக்ஷன் எடுக்கும் என்று நினைக்கவில்லை. காவல்துறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!’’ என்று மூன்று நாட்களுக்கு முன்பு சந்தோஷமாகப் பேட்டி கொடுத்த ரேமண்ட்டுக்கு இந்தச் சம்பவம் நடந்தது, ஏப்ரல் 11, 2015 அன்று!

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து இப்போதுதான் இதற்குத் தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது. அதுவரைக்கும் எத்தனை ரேமண்ட்கள், எத்தனை 500-களை இழந்திருப்பார்களோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. ஆனாலும், இதுமாதிரியான கடுமையான தீர்ப்புகள் வரத்துவங்குவது வாடிக்கையாளர்களுக்கு நல்லது! 

- தமிழ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்