Published:Updated:

மதிப்பிழக்கும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மதிப்பிழக்கும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்!
மதிப்பிழக்கும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்!

மதிப்பிழக்கும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மிழகத்தின் இரண்டாவது பெரிய பேருந்து நிலையம், கட்டமைப்புக்காகவும் சுத்தத்துக்காகவும் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெற்ற முதல் பேருந்து நிலையம், ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பேருந்துகளும், இரண்டு லட்சம் மக்களும் வந்து செல்லும் பேர் பெற்ற பேருந்து நிலையம். இப்படி ஏகப்பட்ட பெருமைகளைக் கொண்ட மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை பற்றி சமீபகாலமாக வருகின்ற செய்திகள் பெருமைப்படும்படியாக இல்லை.

சில நாட்களுக்கு முன், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் சீலிங் பூச்சு பெயர்ந்து அரசு போக்குவரத்து கழக புக்கிங் கவுண்டரில் விழுந்தது. நல்ல வேளையாக அங்கு ஆட்களுக்கு ஏதும் ஆகவில்லை. அந்தளவுக்கு உள்ளது கட்டிடத்தின் தரம். கடந்த ஜூலை மாதம் செங்கோட்டையிலிருந்து மதுரைக்கு வந்த அரசுப்பேருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்துவிட்டு, டிரைவரும் கண்டக்டரும் ஓய்வெடுத்த போது நள்ளிரவில் பேருந்து  காணாமல் போனது. நீண்ட தேடலுக்கு பின் சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் கண்டுபிடிக்கப்பட்டது.  இன்றுவரை  பேருந்தை கிளப்பி கொண்டு போன நபரை கண்டுபிடிக்க முடியவில்லை. பேருந்து நிலையத்தின் பாதுகாப்பு எந்த லட்சனத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். இப்படி பல புகார்கள் கிளம்பி வரும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நாம் ஒரு ரவுண்ட் அடித்தோம்.

இலவச சிறுநீர் கழிக்கும் இடங்களெல்லாம் கட்டண கழிப்பிடமாக மாறிவிட்டது. அங்கு ஐந்து ரூபாய் அடாவடியாக கேட்கிறார்கள். சில்லறை இல்லாமல் போனால் சிறுநீர் கழிக்க காத்திருக்க வேண்டும் அல்லது சில்லறைக்கு காத்திருக்க வேண்டும். பஸ் பிடிக்கும் அவசரம் என்றால் சில்லறையை எதிர்பார்க்காமல் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

பேருந்து நிலைய கழிவு நீர் கால்வாய்கள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. பேருந்து நிலைய வளாகத்தில் மாநகராட்சி அனுமதிபெற்ற கடைகள் 150 தான். அதையும் தாண்டி சிலர் கடை வைத்து வியாபாரம் செய்கிறார்கள்.  எட்டு பிளாட்பார்ம்களில் பேருந்து நிற்குமிடமெல்லாம் கழிவு நீர் ஓடுகிறது. எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள், பிளாஸ்டிக் கழிவுகள்.. இது தான் இப்போதைய மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் நிலை.

இரவு நேரங்களில் பயணிகளுக்கு பாதுகாப்பும் இல்லாத சூழல் தான் நிலவுகிறது. ரவுடிகள், பிக்பாக்கெட் திருடர்கள் நடமாட்டம் அதிகம் என்பதால் கவனமாகவே நடமாட வேண்டும். இரவு நேரப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் அச்சத்துடன் பயணிக்க வேண்டி இருக்கிறது.
நம்மிடம் பேசிய கடைக்காரர் ஒருவர் "இந்த பேருந்து நிலையம், பத்து கோடி ரூபாய் செலவில் பத்து ஏக்கர் பரப்பளவில்  கட்டப்பட்டு 1999 ல் திறக்கப்பட்டபோது அழகாகவும் பிரமாண்டமாகவும் இருந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. கடைகளை பிடிக்க கட்சியினர் ஆதிக்கம் செலுத்த துவங்க... பேருந்து நிலையத்தின் நிலை மோசமானது. கட்சியினர் ஆதிக்கத்தால் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகளாக மாறியது. சுத்தம் செய்ய வேண்டியவர்கள், அதை செய்யவில்லை. பேருந்து நிலைய கான்ட்ராக்ட் அனைத்தும் கட்சியினர் செல்வாக்கினாலே எடுக்கப்பட்டதால், எந்த வேலைகளும் நடக்கவில்லை.  பெரும் தீ விபத்து ஒன்றை இந்த பேருந்து நிலையம் சந்தித்த போது, பேருந்து நிலையத்தில் அடுப்பு எரியூட்ட தடை விதிக்கப்பட்டது. ஆனால் நீண்ட நாள் நீடிக்கவில்லை. இப்படி இப்போது மிக மோசமான நிலையில் நீடிக்கிறது," என்றார்.

மாட்டுத்தாவணி  பேருந்து நிலைய கடை வியாபாரிகள் சங்கத்தலைவர் பாலகிருஷ்ணனிடம் பேசினோம், "ஆமாம் சார், லட்சக்கணக்கில் மக்கள் வந்து செல்கிற இங்கு அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. சமீபத்துல சீலிங் இடிஞ்சு விழுந்தது. நல்ல வேலை ஆட்களுக்கு ஏதும் ஆகல. இப்ப கடைக்காரங்க ரூல்ஸ்படிதான் கடைகளை வச்சிருக்காங்க. இப்ப ஆக்கிரமிப்பு கிடையாது. ஆனா, கடைக்காரங்களுக்கு எந்த வசதியும் செய்து தரலை. எங்களுக்கு பாத்ரூம் வசதி, குடிநீர் வசதி, பார்க்கிங் வசதி செய்து தரலை. மழை நேரத்துல பயங்கரமா சாரல் அடிக்குது, மாநகராட்சி வசூலிக்கும் வாடகைப்பணத்தை வச்சுத்தான் பஸ்ஸ்டாண்டை மெயிண்டைன் பண்ணனும். எங்கே பண்றாங்க" என்றார்.

ஒவ்வொரு கடையின் அளவை பொறுத்து மாதம் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் ரூபாய் வரை வாடகை வசூலிக்கிறார்கள். இதுவே மாநகராட்சிக்கு  பல லட்சம் வரும். ஒவ்வொரு பேருந்துக்கும் ஒரு நாளுக்கு பதினைந்து ரூபாய் வசூலிக்கிறார்கள். இவ்வளவு வருமானம் வந்தும் பேருந்து நிலையத்தை மராமத்து செய்வது, சுத்தம் செய்வதில் சுணக்கம் காட்டுகிறது மாநகராட்சி.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் பேசினோம், " நீங்கள் சொன்ன புகார்களை கமிஷனரிடம் தெரிவிக்கிறோம். விரைவில் குறைகள் நிவர்த்தி செய்யப்படும், பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும்" என்று மட்டும் சொன்னார்.

- செ.சல்மான்,

படங்கள் : விக்னேஷ்வரன் (மாணவப் பத்திரிகையாளர்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு