இந்திய ராணுவத்தின் அதிகாரபூர்வ வாகனமாக சஃபாரி தேர்வானது எதனால் தெரியுமா? | Indian Army chooses Safari As their official vehicle

வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (04/01/2017)

கடைசி தொடர்பு:14:29 (04/01/2017)

இந்திய ராணுவத்தின் அதிகாரபூர்வ வாகனமாக சஃபாரி தேர்வானது எதனால் தெரியுமா?

சஃபாரி கார்

இதுவரை மாருதி ஜிப்ஸிதான், இந்திய ராணுவத்தின் அதிகாரபூர்வமான வாகனமாக இருந்து வந்தது. இப்போது அந்த இடத்துக்கு வந்திருக்கிறது டாடாவின் சஃபாரி ஸ்டார்ம்.  அப்படி ஸ்பெஷலாக இது சஃபாரி தேர்வாகிறதென்றால்.. அதில் என்னென்ன ஸ்பெஷல் என்று பார்ப்போமா?

மாருதி ஜிப்ஸி

ராணுவத்துக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் சஃபாரி ஸ்டார்ம், பொதுமக்கள் பயன்படுத்தும் சஃபாரி ஸ்டார்ம் எஸ்யூவியில் இருந்து நிறைய மாறுதல்கள் இருக்கும். முற்றிலுமாக மேம்படுத்தப்பட்ட இன்ஜின் - கியர்பாக்ஸ், கடுமையான சாலைகளைத் தாங்கக்கூடிய சஸ்பென்ஷன் ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். இந்திய ராணுவம் இந்நாள்வரை பயன்படுத்திவந்த கான்வாஸ் ரூஃப் உடைய ஜிப்ஸி (General Service 500kg), 500 கிலோ எடையை மட்டுமே சுமக்கும் திறன் படைத்தது. மேலும் லைட் வெயிட் காம்பேக்ட் எஸ்யூவியான  இது பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளதால், ரன்னிங் காஸ்ட்டும் அதிகமாக இருந்துவந்தது. எனவே (General Service 800kg), அதாவது 800 கிலோ வரையிலான எடையைத் தாங்கக்கூடிய திறனுடன், உறுதியான மெட்டல் ரூஃப் & கட்டுமானம் - அதிக பவர்/டார்க்கை வெளிப்படுத்தும் டீசல் இன்ஜின் ஆகியவற்றுடன், பாதுகாப்பு வசதிகளைக் கொண்டிருந்த எஸ்யூவிக்கான தேவை எழுந்தது. இதன் விளைவாகவே, அரசு வெளியிட்ட டெண்டரில்தான் மஹிந்திரா மற்றும் டாடா கலந்துகொண்டன. 

ஸெனான்

தற்போது சஃபாரி ஸ்டார்ம் எஸ்யூவியுடன், 500 ஸெனான் பிக்-அப்பையும் டாடாவிடமிருந்து வாங்கவுள்ளது இந்திய ராணுவம். இந்த வாகனத்துடன், மஹிந்திராவின் பொலேரோ கேம்பர் பிக்-அப்பும் போட்டியிட்டதை இங்கு சொல்லியாக வேண்டும். ஆனால் ஸெனான் பிக்-அப்பின் ஏஸி, கட்டுமானத் தரம், 5 பேருக்கான இடவசதி, 2 காற்றுப்பை போன்ற வசதிகள் காரணமாக, ராணுவத்தின் சம்மதத்தை இது பெற்றிருக்கிறது என டாடா கூறியுள்ளது. Border Out Post வாகனமாகப் பயன்படுத்தப்பட உள்ள ஸெனான், நாட்டின் எல்லையில் ராணுவத்தாரின் செயல்பாட்டைக் கவனிப்பதற்கு உதவிகரமாக இருக்கும். இந்த 3,692 வாகனங்களின் (3,192+500) மதிப்பு, சுமார் 400 கோடி ரூபாய். 

டாடா டிப்பர் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ராணுவத்துக்கான வாகனங்களைத் தயாரிக்க, தனியாக Tata Motors Defence Solutions. எனும் ஒரு துணை நிறுவனத்தை நடத்தி வருகிறது டாடா. கடந்த 2015-ம் ஆண்டில், 900 கோடி ரூபாய் மதிப்பிலான 1,239 6x6 மல்ட்டி ஆக்ஸில் டிரக்குக்கான ஆர்டரை டாடா பெற்றது கவனிக்கத்தக்கது. ஏனெனில், ஒரு தனியார் இந்திய நிறுவனத்துக்கு, இந்திய ராணுவத்தால் அளிக்கப்பட்ட மிகப்பெரிய ஆர்டர் இதுதான். இந்த டிரக்குகள், உதிரிபாகங்கள், வெடி பொருட்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை, ஒரு இடத்திலிருந்து ஏற்றிச் சென்று, மற்றோரு இடத்தில் பாதுகாப்பாக இறக்கிவிடும் பணியைச் செய்யும் திறன்படைத்தவை. இதுதவிர, Border Roads Organisation அமைப்பில் இருந்து, 63 கோடி ரூபாய் மதிப்பிலான 350 SAK 1212 4X4 டிப்பர் லாரிக்கான ஆர்டரையும் பெற்றிருக்கிறது டாடா.  

ஜிப்ஸிக்கு மாற்றாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்திய ராணுவத்தால் டிக் அடிக்கப்பட்ட வாகனங்கள் -  ஸ்கார்ப்பியோ & சஃபாரி ஸ்டார்ம். இதற்காக இரண்டு கார்களும் பலவித கடுமையான சோதனைகளுக்கு (அதிக உயரம், பனி, பாலைவனம், சதுப்பு நிலம்) உட்படுத்தப்பட்டன. எனவே கடந்த மூன்று ஆண்டுகளாக, மஹிந்திராவுக்கும் (ஸ்கார்ப்பியோ) - டாடாவுக்கும் (சஃபாரி ஸ்டார்ம்) இடையே கடுமையான போட்டி நடந்தது. இறுதியில் டாடா வென்றிருக்கிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தப் போட்டியில் இரண்டுமே ஜெயித்துவிட்டன. ஆனால் காருக்கான டீல் விஷயத்தில் வின்னிங் ஷாட் அடித்தது டாடாதான். முதற்கட்டமாக 3,192 கார்களுக்கான ஆர்டரை, ராணுவத்திடம் இருந்து பெற்றிருக்கிறது டாடா. இந்த எண்ணிக்கை இனிவரும் காலத்தில் 10 மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- ராகுல் சிவகுரு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்