2016 ஹிட் கார்களின் சூப்பர் சிறப்புகள் இவைதான்! #Cars2016 | Superhit cars launched in 2016

வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (05/01/2017)

கடைசி தொடர்பு:07:44 (05/01/2017)

2016 ஹிட் கார்களின் சூப்பர் சிறப்புகள் இவைதான்! #Cars2016

 

2016 கார்

கடந்த 2016-ம் ஆண்டில், பட்ஜெட் முதல் லக்ஸூரி கார் வரை, அதாவது  டாடா டியாகோ தொடங்கி வால்வோ S90 என கார்கள், பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் என பலவற்றை டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டோம். ஃபோர்டின் எண்டேவர், மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டாவின் இனோவா/ஃபார்ச்சூனர் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கார்கள் வரிசையாக அறிமுகமானது 2016-ல் தான். மஹிந்திரா KUV 100, ஹோண்டா BR-V போன்ற க்ராஸ்ஓவர் கார்கள் களமிறங்கியதும் இந்த ஆண்டில்தான். அப்படிப்பட்ட கார்களின் தொகுப்பே இந்த கட்டுரை!

 

டாடா டியாகோ

2016 கார்

டாடா மோட்டார்ஸ் இந்த ஆண்டில் அறிமுகப்படுத்திய ஒரே கார் டியாகோதான். என்றாலும், கைட் 5 காம்பேக்ட் செடான், காம்பேக்ட் எஸ்யூவியான நெக்ஸான், ஹெக்ஸா க்ராஸ்ஓவர் எஸ்யூவி என டாடா அடுத்தபடியாகக் களமிறக்கப்போகும் கார்கள் எப்படி இருக்கும் என்பதற்கான டிரெய்லராக டியாகோவை அளவிடலாம். ஏனெனில், டாடா இதற்கு முன்பு அறிமுகப்படுத்திய ஜெஸ்ட் மற்றும் போல்ட் ஆகிய இரண்டு கார்களும், விஸ்டா ஹேட்ச்பேக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட கார்கள் ஆகும். ஆனால் டாடா தயாரித்த முதல் ஹேட்ச்பேக் காரான இண்டிகாவின் அடுத்த தலைமுறை மாடலாகப் பொசிஷன் செய்யப்பட்டுள்ள டியாகோ, எந்த காரின் அடிச்சுவடும் இல்லாமல், முற்றிலும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட கார். IMPACT டிஸைன் கோட்பாடுகளின்படி வடிவமைக்கப்பட்டுள்ள டியாகோ, ஃப்ரெஷ்ஷான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது.

ஸ்டைலான கேபினில், அதிக சிறப்பம்சங்களும் - போதுமான இடவசதியும் இருந்தது ப்ளஸ். டிரைவிங் மோடுகளைக் கொண்ட புத்தம் புதிய 3 சிலிண்டர் பெட்ரோல் & டீசல் இன்ஜின்களின் செயல்பாடு ஓகே ரகம். டியாகோவின் ஸ்டீயரிங் - சஸ்பென்ஷன் செட் செய்யப்பட்ட விதத்தினால், பெரிய காரை ஓட்டுவது போன்ற அனுபவம் கிடைக்கிறது. மேலும் காரின் சிறப்பான கட்டுமானம் காரணமாக, போட்டியாளர்களைவிட டியாகோவின் எடை அதிகமாக இருக்கிறது. இது அதிக வேகங்களில் காரின் நிலைத்தன்மைக்கு உதவிகரமாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, சிறந்த பேக்கேஜாக இருக்கும் டியாகோ, அசத்தலான விலையில் கிடைக்கிறது!

 

ஃபோர்டு எண்டேவர்

2016 கார்

முதல் தலைமுறை எண்டேவர்தான், இந்தியாவில் மெகா சைஸ் எஸ்யூவிகளுக்கு எல்லாம் முன்னோடி. எனவே தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த எண்டேவரின் வெற்றியைத் தடுத்து நிறுத்தியது, டொயோட்டா ஃபார்ச்சூனரின் வரவு. பின்பு பஜேரோ ஸ்போர்ட், ட்ரெயில்ப்ளேஸர் எனப் போட்டி அதிகரித்ததால், முற்றிலும் புதிய எண்டேவரைக் கடந்த ஆண்டில் களமிறக்கியது ஃபோர்டு. பழைய காரின் பாக்ஸ் டைப் டிஸைனுடன் ஒப்பிடும்போது, கட்டுமஸ்தான தோற்றத்திலும், உறுதியான கட்டுமானத்திலும் காண்போரைக் கவர்கிறது புதிய எண்டேவர். லெதர் வேலைப்பாடுகள் கொண்ட கேபின், சிறப்பம்சங்களிலும் இடவசதியிலும் முன்பைவிட பிரிமியமாக இருக்கிறது. காரின் அனைத்து வேரியன்ட்டிலும் பெரும்பான்மையான பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

புதிய 2.2 லிட்டர் & 3.2 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போன்ற ஆப்ஷன்களைக் கொண்டிருக்கும் எண்டேவரின் பெர்ஃபாமென்ஸ் அற்புதமாக இருக்கிறது. ரைடிங் மோடுகள் இருப்பதால், ஆஃப் ரோடு சாகசங்களுக்கும் ஏற்ற எஸ்யூவியாக இது மாறியிருக்கிறது. ஸ்டீயரிங் மற்றும் சஸ்பென்ஷன், கச்சிதமான செட்டிங்கைக் கொண்டுள்ளது. எனவே அதிக வேக நிலைத்தன்மை, கையாளுமை, ஓட்டுதல் தரம் ஆகியவை சூப்பராக இருக்கின்றன. இந்த காரில் சில மைனஸ்கள் இருந்தாலும், ஃபார்ச்சூனரைவிடக் குறைவான விலை, அந்த குறைகளை மறக்கடித்துவிடுகிறது.

 

மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா

2016 கார்

பெலினோ வாயிலாக 2015-ம் ஆண்டை வெற்றிகரமாக முடித்த மாருதி சுஸூகி, 2016-ம் ஆண்டில் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விட்டாரா பிரெஸ்ஸாவைக் களமிறக்கியதுடன், வெற்றியையும் தக்கவைத்துக் கொண்டது எனலாம். மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற மாருதி சுஸூகியின் முதல் காம்பேக்ட் எஸ்யூவியின் விற்பனை எண்ணிக்கை, 50 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. மேலும் வெயிட்டிங் பீரியட்டும் 9 மாதங்கள் என்ற அளவில் இருக்கிறது. விட்டாரா பிரெஸ்ஸாவின் டிஸைன் அசரடிக்கும் வகையில் இல்லாவிட்டாலும், அனைத்து வயதினரையும் கவரும்படி இருக்கிறது. காருக்குள்ளே நுழைந்தால், 5 பேருக்கான இடவசதியைக் கொண்ட கேபின் நம்மை வரவேற்கிறது.

இது அதிக சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தாலும், கேபினில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக்கின் தரம் சுமார் ரகம்தான். சியாஸ், எர்டிகா, எஸ்-க்ராஸ் ஆகிய கார்களில் இருக்கும் அதே 1.3 லிட்டர் டீசல் இன்ஜின்தான் விட்டாரா பிரெஸ்ஸாவில் இடம்பெற்றுள்ளது. இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் - ஓட்டுதல் அனுபவம் மனநிறைவைத் தரும்படி அமைந்திருக்கிறது. அனைத்து வேரியன்ட்டிலும் 2 காற்றுப்பை, ஏபிஎஸ் - இபிடி போன்ற பாதுகாப்பு வசதிகள் ஆப்ஷனலாக அளிக்கப்பட்டிருந்தது வரவேற்கத்தக்கது. இந்த காரில் சில குறைகள் இருந்தாலும், விலை அதனை மறக்கச் செய்கிறது.

 

மஹிந்திரா KUV 1OO

2016 கார்

யுட்டிலிட்டி வாகனங்களைத் தவிர்த்து, மஹிந்திரா முதன்முதலாக தயாரித்த வாகனம்தான் KUV 1OO. மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஆகிய கார்களுக்குப் போட்டியாகக் களமிறங்கிய இந்த கார், க்விட்டைப் போல கிராஸ்ஓவர் டிஸைனைக் கொண்டிருக்கிறது. டட்ஸன் கோ + காருக்கு அடுத்தபடியாக, 6 பேருக்கான இடவசதியைக் கொண்ட காம்பேக்ட் கார் இதுதான். KUV 1OO-ன் வெளிப்புற டிஸைனைப் போலவே, கேபினும் வித்தியாசமான டிஸைனைக் கொண்டிருக்கிறது. ஆனால் சிறப்பம்சங்கள் குறைவாக இருப்பது மைனஸ். மஹிந்திராவின் புதிய mFalcon 3 சிலிண்டர் பெட்ரோல் & டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள், தமது வேலையைச் சரியாகச் செய்கின்றன.

டீசல் இன்ஜினில் மட்டுமே, டிரைவிங் மோடுகள் இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. நம்மூர் சாலைகளை மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட சஸ்பென்ஷன், மென்மையாக செட் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓட்டுதல் தரம் நன்றாக இருந்தாலும், கையாளுமையில் பின்தங்கிவிடுகிறது KUV 1OO. ஏபிஎஸ், இபிடி அனைத்து வேரியன்ட்டிலும் ஸ்டாண்டர்டாக இருப்பதுடன், 2 காற்றுப்பைகளை ஆப்ஷனலாகப் பெறமுடிகிறது. மொத்தம் 14 வேரியன்ட்டில் KUV 1OO கிடைப்பதால், அனைவரது பட்ஜெட்டுக்கும் ஏற்றபடி கார் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது தெரிகிறது.

 

ஹோண்டா BR-V

2016 கார்

ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய கார்களுடன் போட்டியிடும் வகையில், ஹோண்டாவின் அறிமுகம்தான் BR-V. சின்ன எஸ்யூவி செக்மென்ட்டில், நீளமான மற்றும் 7 இருக்கைகளைக் கொண்ட ஒரே கார் என்ற பலத்துடன் களமிறங்கிய BR-V, மொபிலியோ காரின் க்ராஸ் வெர்ஷனாகவே பார்க்கப்படுகிறது. எனவே என்னதான் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் ஸ்டைலாகவே இருந்தாலும், பக்கவாட்டுத் தோற்றம் எம்பிவியையே நினைவுபடுத்தும்படி அமைந்திருக்கிறது. மொபிலியோ மற்றும் சிட்டியில் இருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின்களையே இதிலும் பொருத்தியுள்ளது ஹோண்டா. ஆனால் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுக்கு பதிலாக, இரண்டிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருப்பது ப்ளஸ். காருக்குள்ளே இடவசதி அட்டகாசமாக இருந்தாலும், க்ரெட்டாவின் பிரிமியம் கேபினுடன் ஒப்பிடும்போது, BR-V காரின் டேஷ்போர்டு டிஸைன் டல்லாக இருக்கிறது.

மேலும் அதிக சிறப்பம்சங்கள் இல்லாதது இதனை உறுதிபடுத்துகிறது. ஆனால் 2 காற்றுப்பை மற்றும் ஏபிஎஸ் - இபிடி போன்ற பாதுகாப்பு வசதிகள், அனைத்து வேரியன்ட்டிலும் ஸ்டாண்டர்டாக இருப்பது ஆறுதல். இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் சீராக இருப்பது, நகரம் மற்றும் நெடுஞ்சாலைகளில் க்ரூஸ் செய்வதற்கு உதவிகரமாக இருக்கிறது. ஸ்டீயரிங் மற்றும் சஸ்பென்ஷன் செட்டிங் காரணமாக, ஒரு பெரிய செடானை ஓட்டுவது போல ஈஸியான கையாளுமையைக் கொண்டிருக்கிறது BR-V. காரின் குறைவான எடை காரணமாக, அருமையான மைலேஜும் கிடைக்கிறது. இப்படி பிராக்டிக்கலாக இருக்கும் இந்த காரின் மற்றொரு மைனஸ், விலைதான்!

 

ஸ்கோடா சூப்பர்ப்

2016 கார்

அதிக இடவசதி, சொகுசான ஓட்டுதல், பவர்ஃபுல் பெர்ஃபாமென்ஸ், நீண்டு கொண்டே செல்லும் சிறப்பம்சங்களின் பட்டியல், அசத்தலான விலை என பெயருக்கு ஏற்றபடி சூப்பர்ப், சூப்பரான கார்தான். விலை அதிகமான ஜெர்மன் லக்ஸூரி கார்களுக்கு இணையான அனுபவத்தைத் தரக்கூடிய சூப்பர்ப் காருக்கு, இந்தியாவில் அக்கார்டு மற்றும் கேம்ரி ஆகிய ஹைபிரிட் செடான்களே போட்டியாக இருக்கின்றன. மேலோட்டமாகப் பார்க்கும்போது ஆக்டேவியா போலவே தெரிந்தாலும், பழைய காருடன் ஒப்பிடும்போது நீட்டான டிஸைனைக் கொண்டிருக்கிறது 3வது தலைமுறை சூப்பர்ப். NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்ற இந்த காரின் அனைத்து வேரியன்ட்டிலும், 8 காற்றுப்பைகள் ஸ்டாண்டர்டாக அளிக்கப்படுவது ப்ளஸ். காருக்குள்ளே நுழைந்தால், ஆக்டேவியாவுக்குள்ளே சென்றுவிட்டோமோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆனால் தரம் - சிறப்பம்சங்கள் - இடவசதி ஆகியவற்றில் டாப்பாக இருக்கிறது சூப்பர்ப் காரின் கேபின். டிரைவிங் மோடுகள் உடனான 1.8 லிட்டர் டர்போ பெட்ரோல் & 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் - கியர்பாக்ஸ் கூட்டணி, அதிரடியான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்துகின்றன. சொகுசான ஓட்டுதல் தரத்தை மனதில் வைத்து, சஸ்பென்ஷனை மென்மையாக செட் செய்திருக்கிறது ஸ்கோடா. எனவே பழைய சூப்பர்ப் காரைவிட ஓட்டுதல் தரத்தில் முன்னேற்றம் தெரிந்தாலும், ஸ்போர்ட்டியான கையாளுமையை தியாகம் செய்துவிட்டது புதிய சூப்பர்ப். ஆனால் எவ்வுளவு வேகத்தில் சென்றாலும், கார் நிலையாகச் செல்வது அருமை. மைலேஜும் போதுமானதாக இருக்கிறது.

 

ஃபோக்ஸ்வாகன் ஏமியோ

2016 கார்

இந்தியாவில் ஃபோக்ஸ்வாகன் கார்களின் நன்மதிப்பை, மிடில் க்ளாஸ் மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமை, ஏமியோ காரையே சேரும். பிரிமியம் ஹேட்ச்பேக் போலோ மற்றும் மிட் சைஸ் செடான் வென்ட்டோ ஆகிய கார்களால் முடியாததை, வந்த வேகத்திலேயே சாதித்துக் காட்டியிருக்கிறது, காம்பேக்ட் செடான் காரான ஏமியோ. டிஸைனில் காம்ப்ரமைஸ் செய்த ஃபோக்ஸ்வாகன், கேபின் தரத்திலும், காரின் கட்டுமானத் தரத்திலும் தனது திறமையை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளது. சிறப்பம்சங்களில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கும் ஏமியோவின் மிகப்பெரிய மைனஸ், இடவசதிதான்.

போட்டியாளர்களைவிடக் குறைவான பவரை வெளிப்படுத்தும் பெட்ரோல் இன்ஜின் ஒருபக்கம்; காம்பேக்ட் செடான்களிலே பவர்ஃபுல்லான டீசல் இன்ஜின் என ஏமியோவில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல்/1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள், பெர்ஃபாமென்ஸ் விஷயத்தில் எதிரெதிர் துருவங்களாக இருக்கின்றன. டீசலில் DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருப்பது ப்ளஸ். ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை மனநிறைவைத் தரும்படி அமைந்திருக்கின்றன. எனவே 4 பேர் கொண்ட குடும்பத்துக்கான பக்கா பேக்கேஜில், காம்பேக்ட் செடான் எதிர்பார்ப்பவர்களுக்கு, ஏமியோதான் சரியான சாய்ஸ்!

 

டொயோட்டா இனோவா க்ரிஸ்டா

2016 கார்

21-ம் நூற்றாண்டின் வெற்றிகரமான வாகனமாக, டொயோட்டா இனோவாவை தைரியமாகச் சொல்லலாம். கடந்த 10 ஆண்டு காலமாக, எம்பிவி செக்மென்ட்டின் ராஜாவாக திகழ்ந்த இனோவாவின் அடுத்த தலைமுறை மாடல், அறிமுகமானது கடந்த 2016-ல்தான். பிரிமியம் டிஸைன், ஸ்டைலான கேபின், டிரைவிங் மோடுகளைக் கொண்ட பவர்ஃபுல் 2.4 & 2.8 லிட்டர் டீசல் இன்ஜின்கள், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் & பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன், மேம்படுத்தப்பட்ட ஓட்டுதல் அனுபவம் என கூடுதல் திறனுடன் வெளியான இனோவா க்ரிஸ்டாவின் விற்பனை எண்ணிக்கை, 50 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. ஏனெனில், பழைய காரைவிட விலை அதிகமாக இருந்தும், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப்-10 கார்களின் பட்டியலில் இடம்பிடிக்கும் அளவுக்கு இந்த காருக்கான டிமாண்ட் இருந்ததை இங்கு சொல்லியாக வேண்டும்.

இதற்கு இனோவாவின் பலங்களான நம்பகத்தன்மை, ரீ-சேல் மதிப்பு, இடவசதி, சொகுசு, ஒட்டுமொத்த தரம், பிராக்டிக்காலிட்டி ஆகியவற்றைக் காரணங்களாகச் சொல்லலாம். இனோவா க்ரிஸ்டாவின் சஸ்பென்ஷன், நம் ஊர் சாலைகளுக்கு ஏற்றபடி அருமையாக செட் செய்யப்பட்டுள்ளது. பழைய காரைவிட புதிய இனோவாவின் எடை கூடிவிட்டதால், கையாளுமை முன்பைப் போல இல்லை. ஆனால் இந்த எடைதான் காரின் நிலைத்தன்மைக்கு துணை நிற்கிறது என்பது கவனிக்கத்தக்கது. ஆக மொத்தத்தில், லக்ஸூரி எம்பிவி எனும் புதிய செக்மென்ட்டைத் துவக்கி வைத்திருக்கும் இனோவா க்ரிஸ்டா, குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பயணிப்பவர்களுக்கான கச்சிதமான வாகனம் என்றால் மிகையில்லை!

 

ஹூண்டாய் எலான்ட்ரா

2016 கார்

எந்த செக்மென்ட்டாக இருந்தாலும், மாடர்ன் டிஸைனுக்கும், அதிகப்படியான சிறப்பம்சங்களுக்கும் பெயர் பெற்றவை ஹூண்டாயின் கார்கள். அந்த நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் செடான் மட்டும் சோடை போகுமா என்ன? தற்போது ஐரோப்பிய கார்களைப் போல, தனது கார்களை Fluidic Sculpture 2.0 டிஸைன் கோட்பாடுகளின்படி வடிவமைத்துவரும் ஹூண்டாயின் லேட்டஸ்ட் செடான்தான் எலான்ட்ரா. எனவே பழைய காரைப் போல கவர்ச்சியாக இல்லாவிட்டாலும், பக்குவப்பட்ட டிஸைனைக் கொண்டிருக்கிறது புதிய எலான்ட்ரா. கேபினும் முன்பைப் போல ஈர்க்காவிட்டாலும், ஹூண்டாய் கார்களுக்கே உரித்தான தரம் மற்றும் சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்டாக இருக்கிறது. 5 பேருக்கு, இங்கே சொகுசான இடவசதி இருக்கிறது.

வெர்னா, க்ரெட்டா மற்றும் பழைய எலான்ட்ராவில் இருந்த அதே 1.6 லிட்டர் டீசல் இன்ஜின்தான் இதிலும் என்றாலும், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் புதிது. இவை தமது பணியைத் ஸ்மூத்தாகச் செய்கின்றன. புதிய எலான்ட்ராவின் சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டீயரிங்கும், ஜரோப்பிய கார்களைப் போன்ற செட்-அப்பைக் கொண்டுள்ளது. எனவே பழைய காரில் இருந்த அலுங்கல், குலுங்கல் இங்கே இல்லை என்பதுடன், நிலைத்தன்மை மற்றும் கையாளுமையிலும் முன்னேற்றம் தெரிகிறது. விலை விஷயத்தில் ஐரோப்பிய கார்களை எலான்ட்ரா பின்பற்றவில்லை என்பது ஆறுதல். எனவே எக்ஸிக்யூட்டிவ் செடான் செக்மென்ட்டை பலர் மறந்து கொண்டிருந்த நிலையில், அசத்தலான விலையில் சூப்பர் பேக்கேஜாக புதிய எலான்ட்ராவை அறிமுகப்படுத்தி, அனைவரது கவனத்தையும் கவர்ந்துவிட்டது என்பதே உண்மை.

 

டொயோட்டா ஃபார்ச்சூனர்

2016 கார்

எம்பிவி செக்மென்ட்டில் இனோவா எப்படியோ, எஸ்யூவி செக்மென்ட்டில் ஃபார்ச்சூனர் அப்படி. கடந்த 2009-ம் ஆண்டில் அறிமுகமான டொயோட்டா ஃபார்ச்சூனர், அதன் வகையிலே விலை அதிகமான காராக இருந்தாலும், மிரட்டலான டிஸைன், உறுதித்தன்மை வாயிலாக எஸ்யூவி பிரியர்களின் ஆதர்ச நாயகனாகத் திகழ்ந்தது. புதிய வரவுகள் காரணமாக, இரண்டாம் தலைமுறை ஃபார்ச்சூனரை சரியான நேரத்தில் களமிறக்கியிருக்கிறது டொயோட்டா. இந்த எஸ்யூவியின் வரலாற்றிலே முதன்முறையாக பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளதுடன், முன்பைவிடப் பவர்ஃபுல்லான டீசல் இன்ஜினும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய 4 வீல் டிரைவ் சிஸ்டத்தில், சாலையின் தன்மைக்கு ஏற்ப 2WD/4WD மோடுக்கு மாற்றிக் கொள்ளலாம். லேண்ட் க்ரூஸர் கார்களை நினைவுபடுத்திய பழைய ஃபார்ச்சூனரின் டிஸைனுடன் ஒப்பிடும்போது, லெக்ஸஸ் கார்களுக்கு இணையான பிரிமியம் டிஸைனைக் கொண்டிருக்கிறது புதிய ஃபார்ச்சூனர்.

அதே போல, பழைய ஃபார்ச்சூனரில் இருந்த இனோவா போன்ற டேஷ்போர்டுக்குப் பதிலாக, மாடர்ன்னான டேஷ்போர்டைப் புதிய ஃபார்ச்சூனரில் பொருத்தியுள்ளது டொயோட்டா. கேபின் தரம் சுமார் ரகம்தான் என்பது மைனஸ். ஆனால் அதற்குப் பரிகாரமாக, முன்பைவிட அதிக சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளது ஆறுதல். புதிய இனோவா க்ரிஸ்டாவில் இருந்த, டிரைவிங் மோடுகள் உடனான அதே 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 2.7 லிட்டர் டீசல் இன்ஜின்கள்தான் புதிய ஃபார்ச்சூனரில் உள்ளன என்றாலும், டீசல் இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு இன்ஜின்களுக்கும் ஆட்டோமேட்டீக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் உண்டு. டீசல் இன்ஜின் டார்க்கில் அசத்தினால், பெட்ரோல் இன்ஜின் ஸ்மூத்னெஸ் விஷயத்தில் கவர்கிறது. பழைய காரைவிடப் புதிய ஃபார்ச்சூனரில் எடை கூடியிருந்தாலும், கையாளுமை மற்றும் ஓட்டுதல் அனுபவத்தில் இது முன்பைவிட அற்புதமாக இருக்கிறது. எனவே என்னதான் எஸ்யூவி செக்மென்ட்டின் காஸ்ட்லி காராக இருந்தாலும், டொயோட்டாவின் நம்பகத்தன்மைக்கு அது ஓகே என்றே தோன்றுகிறது.

 

ஹூண்டாய் டூஸான்

2016 கார்

ஹேட்ச்பேக் மற்றும் செடான் செக்மென்ட்டில் பெற்ற வரவேற்பை, எஸ்யூவி செக்மென்ட்டில் பெற முடியாமல் தவித்து வந்தது ஹூண்டாய். க்ரெட்டாவின் வரவு அந்த வரலாற்றை மாற்றி எழுத உதவியது எனலாம். இந்திய கார் மார்க்கெட்டும் தொடர்ச்சியாக எஸ்யூவிகளுக்குச் சிவப்பு கம்பள வரவேற்பை அளித்து வந்தன. எனவே அந்த நம்பிக்கையில்தான், க்ரெட்டா மற்றும் சான்டா ஃபி கார்களுக்கு இடையேயான இடைவெளியை நிரப்பும் விதமாக, டூஸான் எஸ்யூவியைக் களமிறக்கியது ஹூண்டாய். கடந்த 2005-ல் இங்கு விற்பனை செய்யப்பட்ட இந்த காரின் முதல் தலைமுறை மாடலுக்கும், லேட்டஸ்ட்டான 3வது தலைமுறை மாடலுக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை. புதிய எலான்ட்ராவைத் தொடர்ந்து, Fluidic Sculpture 2.0 டிஸைன் கோட்பாடுகளின்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் எஸ்யூவிதான் டூஸான். இது பார்ப்பதற்கு பெரிய க்ரெட்டா போல இல்லாமல், மினி சான்டா ஃபி போல இருப்பது பெரிய ப்ளஸ்.

காருக்குள்ளே நுழைந்தால், க்ரெட்டாவில் இருப்பதுபோன்ற தரமான கேபின் நம்மை வரவேற்கிறது. ஆனால் அதிக சிறப்பம்சங்கள் மற்றும் இடவசதி இருப்பது ஆறுதல். டூஸானின் அனைத்து வேரியன்ட்டிலும், 2 காற்றுப்பை, ஏபிஎஸ், இபிடி ஆகிய பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட்டுள்ளது. எலான்ட்ராவில் இருக்கும் அதே 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் இதிலும் என்றாலும், 2.0 லிட்டர் டீசல் இனஜின் புதிது. பெர்ஃபாமென்ஸில் பெட்ரோல் இன்ஜின் 8 அடி பாய்ந்தால், டீசல் இன்ஜின் 16 அடி பாய்கிறது; அதாவது டீசல் இன்ஜினில் வேகம் செல்வதே தெரியவில்லை. டூஸான் ஒரு சாஃப் ரோடர் என்பதால், மென்மையான செட்டிங்கைக் கொண்டிருக்கிறது சஸ்பென்ஷன். அதை மனதில்வைத்து காரை ஓட்டினால், ஸ்டீயரிங்கின் ரெஸ்பான்ஸ் மனநிறைவைத் தரும்படி இருக்கிறது. விலை விஷயத்தில் எலான்ட்ரா போலவே டூஸானும் ஸ்கோர் செய்கிறது.

- ராகுல் சிவகுரு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்