சாலை விபத்தில் அடிபட்டவர்களைக் காப்பாற்றினால் 2000 ரூபாய் பரிசு! எங்கே?

நீங்கள் உதவும் உள்ளம் கொண்டவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். சாலை விபத்து ஒன்றில் உங்களுக்குத் தெரியாத, யாரேனும் அடிபட்டவர்களைப் பார்த்தால் உங்கள் அதிகபட்ச ரியாக்ஷன்  என்னவாக இருக்கும்? 

சாலை விபத்து

‘‘ப்ச்... பாவம்டா மாப்பிள்ளை... கால்ல செம அடினு நினைக்கிறேன்... நடப்பானா என்னனே தெரியலை’ என்றபடியே பரிதாபப்பட்டுக் கடப்பது ஒருவகை. ‘கோர்ட், போலீஸுனு அலையணும்... நமக்கெதுக்கு வம்பு’ என்றபடி ஃபோட்டோவோ செல்ஃபியோ எடுத்துக் கடப்பது இன்னொரு வகை. சில அதிகபட்ச உதவும் உள்ளங்கள் என்றால், ஆம்புலன்ஸுக்கு போன் செய்துவிட்டு, அடிபட்டவரை ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு இடத்தைக் காலி செய்பவர்கள் ஒரு வகை. ‘நீங்க அடிபட்டு மயக்கமா கிடந்தீங்க; உங்க வீட்ல இருந்து ஆள் வந்ததும் நான் கிளம்புறேன்’ என்று அடிபட்டவரை மருத்துவமனையில் சேர்த்து, கூடவே இருந்து தெரிந்த நண்பரைக் கவனித்துக் கொள்ளும் உள்ளங்கள் ஆயிரத்தில் ஒன்றுதான்.

எல்லோருக்குமே இளகிய மனசுதான்; உதவும் உள்ளம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதையும் மீறி, ஒரு கொடூரத்தைப் பார்த்து கண்டும் காணாமல் செல்ல வைக்கும் கல் மனதை வரவழைப்பதற்குக் காரணம், நமது சட்டம்தான். ‘அந்தச் சட்டத்தைத் திருத்த வேண்டும்’ என்று தாமதமாக உணர்ந்திருக்கிறது சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம். இது தமிழ்நாட்டில் இல்லை; டெல்லியில்.

‘‘இனிமேல் விபத்தினால் சாலையில் அடிபட்டுக் கிடப்பவர்களை மருத்துவமனையில் சேர்த்தால், அவர்களுக்கு 2,000 ரூபாய் பரிசுத் தொகை. வெறும் பணம் மட்டுமில்லை; அவர்களுக்கு டெல்லி அரசின் சார்பாக ‘சிறந்த குடிமகன்’ சான்றிதழும் வழங்கப்படும். இது போக்குவரத்தில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரலாம்!’’ என்று அறிக்கை விடுத்திருக்கிறார், டெல்லி மாநில துணை முதல்வர் மனிஷ் சிஷோதியா. 

ராஜா ராணி படத்தில் வரும் விபத்து காட்சி

டெல்லியில் எவ்வளவுதான் சாலைக் கட்டுப்பாடுகள் விதித்தாலும், விபத்துகள் குறைந்தபாடில்லை. அதைவிட, விபத்தில் அடிபட்டுக் கிடப்பவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை தாமதமாகக் கிடைப்பதால், உயிரிழப்புகளும் அதிகம் நிகழ ஆரம்பித்து விட்டன. இதைத் தடுக்கும் பொருட்டுதான் இப்படி ஒரு சட்டத்தை இயற்றியிருக்கிறது டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சகம். ‘‘மக்களுக்கு இந்த இரண்டாயிரம் ரூபாய் என்பது பெரிய விஷயம் இல்லை. உதவும் உள்ளம் கொண்டவர்களை மேலும் ஊக்குவிக்க இந்தச் சட்டம் நன்கு உதவும்’’ என்கிறார் சாலைப் பாதுகாப்பு இயக்கம் எனும் NGO நிறுவனத்தின் டைரக்டர் சாஜி செரியன். 

விபத்தில் அடிபட்டுக் கிடப்பவருக்கு உதவும் நோக்கோடு அவரை மருத்துவமனையில் சேர்த்தால், ‘எங்க பார்த்தீங்க? எப்படி ஆச்சு? நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க.. யார் மேல மிஸ்டேக்... கம்ப்ளெய்ன்ட் எழுதிக் குடுங்க... கூப்பிடற போதெல்லாம் ஸ்டேஷன் வரணும்’ என்று விபத்தில் அடிபட்டவரைவிட சோதனைக்கு ஆளாபவர்கள், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்ப்பவர்கள்தான். ‘‘இனிமேல் இந்தப் பயம் மக்களுக்கு வேண்டியதில்லை. இந்தப் பரிசுப் பணம் சின்னத் தொகைதான்.  இனிமேல் அதுபோல் யாரும் பயப்பட வேண்டியதில்லை என்பதற்காகத்தான் இந்தப் பரிசுத் தொகை’’ என்கிறார் மனிஷ்.

‘‘இனிமேல் விபத்தில் அடிபட்டவர்களுக்கு உதவுபவர்களை எந்தவிதத்திலும் காவல்துறை தொந்தரவு செய்யக் கூடாது.’’ என்று மத்திய அரசுக்கு அறிவித்திருக்கிறது, வி.பி.கோபால கவுடா மற்றும் அருண் மிஷ்ரா போன்ற நீதிபதிகள் கொண்ட பெஞ்ச். 

சீக்கிரம் தமிழ்நாட்டுக்கும் ஒரு நல்ல சேதி சொல்லுங்க!

- தமிழ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!