வெளியிடப்பட்ட நேரம்: 14:26 (21/01/2017)

கடைசி தொடர்பு:14:31 (21/01/2017)

உங்கள் வீட்டுக்கு என்ன விலையில், எந்த வகை டைல்ஸ்?!

அழகான டைல்ஸ் வேலைப்பாடுகளுடன் கூடிய வீடு

கிரானைட், மார்பிள் என்று எத்தனையோ வகை தரைகள் வந்துவிட்டபோதும், இன்றும் பலரின் தேர்வு டைல்ஸாகவே இருக்கிறது. வீட்டுக்கான கட்டுமானத்துக்கு டைல்ஸ் வகைகளை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை விளக்குகிறார், சென்னை, 'ஶ்ரீ செந்தூர் என்டர்ப்ரைசஸ்' நிறுவன நிர்வாகியான ராதிகா.

''டைல்ஸை பொருத்தவரை செராமிக்(Ceramic), பாலியஸ்டர் விட்ரோலைட்(Polyester Vitrolite), கிளாஸ்ட் விட்ரோலைட்(Glazed Vitrolite) என மூன்று வகைதான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, நீரை உறிஞ்சும் தன்மையைப் பொறுத்து, இந்த மூன்று வகை டைல்ஸின் தரம், உழைக்கும் தன்மை, ஆயுட்காலம் ஆகியவை வகைப்படுத்தப்படுகின்றன. 

25 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் செராமிக் வகை டைல்ஸ், வீட்டின் உள்ளே சுவர்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய டைல்ஸ் அதிக கீறல்களுக்கு(scratch) உட்படும் தன்மை கொண்டிருப்பதால், தரைகளுக்குப் பயன்படுத்த உகந்ததல்ல.

பாலியஸ்டர் விட்ரோலைட்  வகை டைல்ஸ், நீரை உறிஞ்சும் தன்மை குறைவாகக் கொண்டிருப்பதால் இவை வீட்டின் தரைகளுக்குப் பயன்படுத்த உகந்தவையாக இருக்கின்றன. அதிக கடினத்தன்மையுடன், அதிக வெப்பநிலையில் பதிக்கப்படுவதால் இவை நீண்ட ஆயுள் கொடுக்கும். 

கிளாஸ்ட் விட்ரோலைட் டைல்ஸ் வகைகள், பாலியஸ்டர் வகையை விட அதிக டிசைன், கலர், லுக், கிராக் ஆகாத தன்மையில் கிடைக்கும். நீடித்த ஆயுள் கொடுக்கும் இந்த வகை டைல்ஸின் விலையும் அதிகம். 

பாலியஸ்டர் விட்ரோலைட் மற்றும் கிளாஸ்ட் விட்ரோலைட் வகை டைல்ஸ் கிச்சன், வரவேற்பறைகளில் பயன்படுத்த பொருத்தமானதாக இருக்கும். மேலும் கிச்சன் மற்றும் டைனிங் தேவைகளுக்காக, செராமிக் ஆன்டி ஸ்கிட் டைல்ஸ்  தனியாக விற்கப்படுகின்றன. 

அளவுகள்:
வீட்டின் வடிவமைப்பு, தேவை, செலவு போன்ற தேவைகளுக்கு ஏற்ப டைல்ஸ் வகைகளை அமைத்துக் கொள்ளலாம். குறிப்பாக வீட்டின் கிச்சன்களுக்கு இன்ச் அளவுகளில் இருந்து அடி அளவு வரையிலான டைல்ஸை பயன்படுத்துகிறார்கள். 

வீட்டின் வரவேற்பறை மற்றும் படுக்கை அறையில் பொதுவாக அடி அளவுகளில்தான் டைல்ஸ் பயன்படுத்தப்படும். பெரும்பாலானோர், வரவேற்பறை மற்றும் பெட்ரூமுக்கு 2*2 என்ற அளவு டைல்ஸ்தான் பயன்படுத்துகிறார்கள். வீட்டு சுவருக்கு இணையான நிறத்தில் டைல்ஸை அமைத்தால் நல்ல லுக் கிடைக்கும். 

விலை நிலவரம்(சதுர அடியில்):
செராமிக் - ரூ. 25 -லிருந்து கிடைக்கும்.
பாலியஸ்டர் விட்ரோலைட் - ரூ. 40 - 50 -லிருந்து கிடைக்கும்.
கிளாஸ்ட் விட்ரோலைட் - ரூ. 70-100 -லிருந்து கிடைக்கும்

ஆயுட்காலம்:
செராமிக் - 15 ஆண்டுகள் வரை.
பாலியஸ்டர் விட்ரோலைட் - 25 ஆண்டுகள் வரை.
கிளாஸ்ட் விட்ரோலைட் - 25 - 30 ஆண்டுகள் வரை.''

- கு.ஆனந்தராஜ்
    

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்