'பெட்ரோல் போடாதீங்க, தேசிய கீதம் பாடுங்க!' - வாட்ஸ்அப் வதந்தி விஞ்ஞானிகள் | Rumours spread through Whatsapp during jallikattu protests

வெளியிடப்பட்ட நேரம்: 18:22 (25/01/2017)

கடைசி தொடர்பு:18:22 (25/01/2017)

'பெட்ரோல் போடாதீங்க, தேசிய கீதம் பாடுங்க!' - வாட்ஸ்அப் வதந்தி விஞ்ஞானிகள்

நாசா விஞ்ஞானிகளைவிட எப்போதும் பிஸியா இருப்பவர்கள், வதந்திகளைப் பரப்பும் வாட்ஸ்அப் விஞ்ஞானிகள்தான். கற்பனைக்கே எட்டாத அளவுக்கு டிஸைன் டிஸைனாக யோசித்து வதந்திகளைப் பரப்பி, நம்மைப் பீதியில் ஆழ்த்த ஒரு குரூப்பே முனைப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடைபெற்றபோது இவர்கள் அனுப்பிய வதந்திகள் எல்லாம் 'ப்ப்ப்ப்பா!' ரகம்.

 

ஜல்லிக்கட்டு போராட்ட நேரத்தில் பரவிய வாட்ஸ்அப் வதந்திகள்

 

* வதந்தி பரப்புவர்களுக்கு நாஸ்ட்ரடாமஸ் மேல அப்படியென்ன கோபம்னு தெரியலை. 'ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் பற்றி ஐந்நூறு வருடங்களுக்கு முன்பே நாஸ்ட்ரடாமஸ் சொல்லியிருக்கிறார்' என ஒரு பக்கத்திற்கு எழுதியதை நண்பனொருவன் அனுப்பியிருந்தான். நிரந்தரச் சட்டத்தைப் பற்றி ஏதாவது சொல்லி இருக்காரா மாப்ளைனு கேட்டதும் ஆஃப்லைன் போனவன் இன்னும் திரும்ப வரலை.

* அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், மோடியைத் தொடர்புகொண்டு 'எங்களுடனான வர்த்தகத்தை முடித்துக்கொள்ள துடிக்கிறதா உங்கள் நாடு? அப்படி ஒரு முடிவு எடுத்தால் உங்கள் ஆட்சியைக் கலைப்பதைத் தவிர வேறு வழி இல்லை' என மிரட்டியதாக ஒரு 'அடேங்கப்பா' வதந்தி. அவங்க பேசியதைப் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே எழுதி அனுப்பி இருந்தாங்க. அவர் எப்படிய்யா இங்கே ஆட்சியைக் கலைப்பாரு? கனவுன்னாலும் ஒரு லாஜிக் வேண்டாமாடா?

* 'யாரும் திங்கட்கிழமை பெட்ரோல் போட வேண்டாம். வாரத்தின் முதல்நாளே பெட்ரோல் போடாவிட்டால் அமெரிக்க வர்த்தகம் பாதிக்கப்படும். ட்ரம்ப் பதவியேற்ற முதல் வாரத்திலேயே அமெரிக்க வர்த்தகம் பாதிக்கப்பட்டால், அவர் கடுப்பாகி உடனடியாக பீட்டாவைத் தடை செய்வார்' இப்படியொரு வதந்தி அநேகமாக தமிழ்நாட்ல வாட்ஸ்அப் வெச்சிருக்கிற அத்தனைப் பேருக்கும் வந்துருக்கும். அதாவது 'சீப்பை ஒளிச்சு வெச்சுட்டா, கல்யாணம் நின்னுரும்ல!' மாதிரி எவனோ யோசிச்சு, அதை உட்கார்ந்து எழுதி அனுப்பியிருக்கான். பாவத்த!

* இன்னும் சிலருக்கு பார்சல் டெலிவரி பண்றவங்க மேல தனிப்பட்ட வன்மம் இருந்திருக்கு போல! அவங்களைப் பழிவாங்குறதுக்காக 'கேஷ் ஆன் டெலிவரி கொடுத்து நிறைய ஆர்டர் பண்ணுங்க. ஆன்லைன் கம்பெனியிலேர்ந்து டெலிவரி ஆகிறதுக்கு முன்னாடி, ஜல்லிக்கட்டுக்கு எதிரான அந்நிய நாட்டுப் பொருட்களை வாங்க மாட்டோம்'னு சொல்லி ஆர்டரை கேன்சல் பண்ணிருங்க. வெளியுறவுத் துறையிலேர்ந்து பிரதமருக்கு அழுத்தம் உண்டாகும்'னு ஒரு திரைக்கதையே எழுதி அனுப்பிருக்காங்க. நம்ம முகவரியைத் தேடி கஷ்டப்பட்டு வெயில்ல அலைஞ்சு திரியற டெலிவரி பாய்ஸ் சாபம் உங்களையெல்லாம் சும்மா விடாது மக்கா!

* 'வாட்ஸ்அப்ல எல்லாரும் கறுப்பு கலர்ல டி.பி வெச்சு நம்ம எதிர்ப்பைக் காட்டினால், பீட்டாவுக்குத் தடைவிதிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு உடனடியாக நடக்கும்' அப்படிங்கிறது வேற லெவல் வதந்தி. யாருக்குய்யா உங்க எதிர்ப்பைக் காட்டப்போறீங்க? எப்படி பீட்டாவுக்குத் தடை வரும்?

* 'அந்நிய நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தாமல் நமது எதிர்ப்பைக் காட்டுவோம்'. வரவேற்க வேண்டிய விஷயம்தான். ஆனா இதை ஃபேஸ்புக்லையும், வாட்ஸ்அப்லையும் வந்து சொல்ற அந்த அப்பாவிகளை என்ன பண்றது?

* போராட்டத்தின் கடைசிநாள் போலீஸ் வன்முறையில் இறங்கிப் போராட்டக்காரர்களைக் கலைத்தது. 'போலீஸ் தாக்க வந்தால் தேசியகீதம் பாடுங்கள். காவலர்கள் உங்களைத் தாக்க மாட்டார்கள்' என்பதுதான் போராட்ட நேரத்தில் அதிகம் அனுப்பப்பட்ட செய்தி. இதுக்கு ஏதாவது கருத்து சொன்னா, என் மேல வழக்கு பாயும் அபாயம் இருப்பதால்...மாப்பு இத்தோட ஸ்டாப்பு!

* எல்லாத்தையும்கூட பொறுத்துக்கலாம். மனசாட்சியே இல்லாம கட்டுக்கதை எழுதிட்டு கடைசில, 'உண்மையான தமிழன் என்றால் படித்தவுடன் ஷேர் செய்யவும்'னு எழுதுறதைத்தான் சத்தியமா தாங்க முடியலை. அதே நேரத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'வதந்திகள் பரவலாம்... நிதானம் இழக்க வேண்டாம்' எனத் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் இதே வாட்ஸ்அப் தான் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- கருப்பு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close