இதையெல்லாம் பின்பற்றினால்.. தொட்டுவிடும் தூரத்தில் வெற்றிக்கொடி! #MorningMotivation | Six interesting tips for being a successful person

வெளியிடப்பட்ட நேரம்: 07:47 (27/01/2017)

கடைசி தொடர்பு:12:29 (27/01/2017)

இதையெல்லாம் பின்பற்றினால்.. தொட்டுவிடும் தூரத்தில் வெற்றிக்கொடி! #MorningMotivation

Morning Motivation, வெற்றி

ம் எல்லோருக்குமே வெற்றியின் மீது பெரும் காதல் இருக்கிறது. ஆனால் ஒரு சிலரே தங்களை வெற்றிகளுக்காக தயார்படுத்திக் கொள்கிறார்கள். முறையான திட்டமிடலோடு கடுமையான உழைப்பை கொடுப்பவர்கள் எப்போதுமே தோற்றதாக சரித்திரம் இல்லை. வெற்றிகக்ளைக் கொண்டாட ஆசையா, அப்போ இந்த விஷயங்களையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்களேன்..   

"கெட் செட் யுவர் கோல்"

உங்களுடைய இலக்குகள் பற்றி எனக்கு நிச்சயமாக தெரியாது. ஒருவேளை உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு தெரிந்து இருக்கலாம். ஆனால் உறுதியான, தெளிவான இலக்கு எதுவும் இல்லாத பொழுது உங்களுக்கே கூட உங்கள் செயல்களில் நிறைய சந்தேகங்கள் பிறக்கும். சந்தேகங்கள் இருக்கும் இடத்தில் வெற்றிக்கு நிச்சயம் இடம் இருக்காது. தெளிவான திட்டமிடப்பட்ட இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கிய பயணத்தை நம்பிக்கையாக தொடருங்கள். எந்த ஊருக்குப் போவதுனு முடிவு பண்ணிட்டா போற வழிகளை ஈஸியா வகுக்கலாம் அல்லவா?

Morning Motivation

"கனவுகள்"

உங்கள் கனவுகள்தான் வாழ்க்கையின் அடுத்தடுத்த நிகழ்வுகளின் டிரெய்லர் எனச் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா!?. ஆனால் அதுதான் உண்மை எனச்சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். நம் அப்துல்கலாம் ஐயா சொன்னது போல நம்மை தூங்கவிடாமல் செய்யும் கனவுகளே நம் வாழ்வின் நிஜங்களாக மாறி வழிநடத்துகின்றன. நல்ல கனவுகளும், அந்தக் கனவுகளை எட்ட, கடுமையான உழைப்பும் கொண்ட எந்த முயற்சியும் தோற்றுப்போனதாக சரித்திரம் இல்லை.

"பழக்கவழக்கங்கள்"

உங்களின் ஒவ்வொரு செயலும் உங்களின் அடையாளமாக மாறிப்போகும். அவைதான் உங்களுக்கே உங்களுக்கான பழக்கவழக்கங்கள். உங்களுடைய செயல்களை வைத்து மட்டுமே உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை எடைபோட்டுப் பார்ப்பார்கள். தோல்விகளைக் கண்டு துளியும் அஞ்சாமல் "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா" என்ற மனநிலையிலேயே தொடர்ந்து முன்னேறிக் கொண்டு இருங்கள். உங்களின் ஒவ்வொரு நல்ல செயலும் கடலைச் சென்றடையும் ஆறுகளை போல நிச்சயம் வெற்றியையே பரிசாக கொடுக்கும்.

"எண்ணங்கள்"

அலைகள் படகினை, தான் விரும்பிய இடத்திற்குக் கொண்டு செல்வதைப் போன்றதுதான் எண்ணங்களும். உங்களை விரும்பிய இடத்திற்கு எல்லாம் அழைத்துச் செல்லும் சக்தி வலிமையான நம் எண்ணங்களைத் தவிர வேறு எதற்கும் இல்லை. எண்ணங்கள் ஒரே மாதிரியாக இல்லாமல் வெவ்வேறு மனநிலையுடன் செய்யும் எந்த வேலையும் முழுமையான வெற்றியை தந்திடாது.

Morning Motivation, வெற்றி

"நேர மேலாண்மை" 

ரைமிங்கோட டைமிங்கும் முக்கியம் கண்ணா! எல்லா விஷயங்களுக்குமே டைமிங் ரொம்ப முக்கியமாச்சே. என்னதான் பொறுமையாக திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட வேலையாக இருந்தாலும் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் வேலைகளே நம் வெற்றியைத் தீர்மானிக்கும். சரியான தருணங்களில் செய்யப்படுகின்ற வேலைகள், தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து ராஜபாட்டையில் வீரநடை போட வைக்கும். 

"நம்பிக்கை அதானே எல்லாம்" 

நல்லா யோசிச்சு பாருங்கள்.. நீங்க முழு நம்பிக்கை இல்லாம செஞ்ச எந்த வேலையாச்சும் வெற்றிகரமா முடிஞ்சுருக்கா. நிச்சயமா இருக்காது. ஒவ்வொரு செயலை செய்ய ஆரம்பிக்கும் முன்பும் அதைப்பற்றிய முழுமையான புரிதலோடு செய்யத் தொடங்குங்கள். நம்பிக்கை வேற எங்கும் இல்லை உங்களுக்குள்ள தான் இருக்குங்கிறதை உணர முடியும். பிரபு சார் சொல்ற மாதிரி "நம்பிக்கை, அதானே எல்லாம்!!" 

இவற்றையெல்லாம் பின்பற்றினா ஒவ்வொரு நாளையும் உங்களுக்கே டெடிகேட் பண்ணிக்கற அளவுக்கு, வெற்றிக்கொடியைத் தொட்டுவிடுவீர்கள்! 

- பா. பிரியதர்ஷினி,

மாணவப் பத்திரிக்கையாளர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close