Published:Updated:

'எங்களிடம் தீக்குச்சி, லத்தி இல்லை; பேனா மட்டுமே உண்டு!' கொதிக்கும் எழுத்தாளர்கள்

'எங்களிடம் தீக்குச்சி, லத்தி இல்லை; பேனா மட்டுமே உண்டு!' கொதிக்கும் எழுத்தாளர்கள்
News
'எங்களிடம் தீக்குச்சி, லத்தி இல்லை; பேனா மட்டுமே உண்டு!' கொதிக்கும் எழுத்தாளர்கள்

'எங்களிடம் தீக்குச்சி, லத்தி இல்லை; பேனா மட்டுமே உண்டு!' கொதிக்கும் எழுத்தாளர்கள்

"சிரித்தார்கள். கை குலுக்கினார்கள். நல்ல நண்பர்களாகத் தான் முதலில் இருந்தார்கள். காக்கிச் சட்டையைக் கழற்றினால், அவர்களும் சாதாரண மனிதர்கள் தானே? அந்த மனிதர்களும் இந்த மண்ணின் பிள்ளைகள் தானே? அவர்களும் தமிழில் பேசுபவர்கள் தானே? நம்மைப் போலவே ஒரு வாழ்க்கை அவர்களுக்கும் இருக்கிறதுதானே?. அரசாங்கங்களின் ஊழல்கள், துரோகங்கள் அவர்களையும், அவர்கள் குடும்பத்தையும் பாதிக்கும்தானே? அரிசி, பருப்பு, எண்ணெய் விலையேறும்போது, அதில் கலப்படம் செய்யப்படும்போது, அதனால் உயிர்கள் பாதிக்கப்படும்போது, இவர்களும் பதறுவார்கள்தானே.? அதெப்படி அந்த காக்கி கலர் சட்டை போட்டவுடன் மனங்கள் மறத்துப் போய்விடுகின்றன? கால்கடுக்க நின்ற காவலர்களின் பசி போக்க,  தங்கள் வருமானத்திற்கு வைத்திருந்த மீன்களைப் பொறித்துக் கொடுத்த மீனவ மக்களின் வாழ்வாதாரங்களையே எரிக்கும் அளவிற்கு அந்த அகோர பசி எங்கிருந்து வந்தது? "ரெட் சிப்" பொருத்திய  "சிட்டி" ரோபாக்கள் ஆகிவிட்டனரா காவல்துறையினர்... " என்று மெரினாவின் காற்றைக் கிழித்து கேட்டுக் கொண்டிருந்தது ஒரு தோழரின் குரல். மேடையில் அல்ல... கூட்டத்தின் நடுவில் அல்ல... மெரினாவின் மண்ணில் நடந்தபடி பேசிக் கொண்டிருந்த இரு தோழர்களின் உரையாடல் அது. 

மெரினாப் புரட்சியின் இறுதிநாளில் காவல்துறை செய்த களேபரங்கள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டன. அவர்களுக்கு எதிரான குரல்கள் தமிழகம் எங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. அந்தக் குரல்களை அடக்கும் ஆயுதங்களை காவல்துறையும் கையில் எடுத்தாகிவிட்டது. இன்று (27-01-2017) படைப்பாளிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது காவல் துறை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"எங்கள் கைகளில் பாஸ்பரஸ் இல்லை; தீக்குச்சி இல்லை; லத்திகள் இல்லை; பேனாக்கள் மட்டுமே இருக்கின்றன. எழுத்து மட்டுமே எங்கள் ஆயுதம். நாங்கள் ஜனநாயகத்தை நம்புகிறோம். இதன் அடிப்படையில்தான் மெரினாவில் காவல்துறையினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரியிருந்தோம். முதலில் 5 நாட்களுக்கு முன்னரே அனுமதிக் கடிதம் தர வேண்டும் என்றனர். பின்பு சேப்பாக்கத்தில் நடத்திக் கொள்ளுங்கள் என்று அனுமதித்தனர். பின்பு, அதை மறுத்து வள்ளுவர் கோட்டத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள் என்றனர். இதோ... இப்பொழுது அங்கும், எங்கும் எதுவும் நடத்தக் கூடாது என்கிறார்கள் " என்றவர் தொடர்ந்து,

"காரணம் கேட்டோம். `மெரினா சம்பந்தமான ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளோம்' என்று பதிலளித்தார்கள். ஜனநாயக உரிமைகளை மறுக்கும் முடிவுகளை எடுக்க காவல்துறைக்கு எப்போது அதிகாரம் கொடுக்கப்பட்டது? இது கருத்துரிமைக்கு எதிரான மிகப் பெரிய வன்முறை" என்கிறார். 

"பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் உரிமை கூட எழுத்தாளர்களுக்கு மறுக்கப்படும் என்றால் இது என்ன ஜனநாயகம்? பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்கு எதிரான இந்த தாக்குதல்களைக் கண்டிக்கும் வகையில் மனித உரிமை ஆணையகம், உயர்நீதிமன்ற நீதிபதி போன்றோருக்கு கண்டனங்களை மின்னஞ்சல் வழியாக தெரிவிக்க இருக்கிறோம். இந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் யாரும், 

பெறுநர்

தலைவர், தேசிய மனித உரிமை ஆணையகம், புதுடில்லி covdnhrc@nic.in, ionhrc@nic.in

தலைவர், தமிழ்நாடு மனித உரிமை ஆணையம், சென்னை cpc-tn@indianjudiciary.gov.in

மேதகு தலைமை நீதியரசர், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை. 

ஆணையர், சென்னை காவல் துறை, cop@vsnl.net - போன்ற  மின்னஞ்சல் முகவரிகளுக்கு தங்கள் எதிர்ப்புகளைப் பதியலாம்..

தமிழக நெஞ்சங்களில் ஏற்பட்டிருக்கும் எழுச்சியை தங்களின் சுயலாபத்திற்காக அடக்க நினைக்கும் அரசாங்கம், அவர்களுக்குத் துணை போகும் காவல்துறை ஆகியோரின் கனவுகள் நிச்சயம் பலிக்காது" என்று ஆவேசமாக பேசி முடிக்கிறார் எழுத்தாளர் சிவ. செந்தில்நாதன்.

                                     - இரா. கலைச் செல்வன்.