பெற்றோர்களே...ஆன்லைனில் உங்கள் குழந்தைகளைச் சூழும் ஆபத்துகள் என்னென்ன? #GoodParenting #MustKnow | Parents must know about Online threats which will affect children

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (30/01/2017)

கடைசி தொடர்பு:15:34 (30/01/2017)

பெற்றோர்களே...ஆன்லைனில் உங்கள் குழந்தைகளைச் சூழும் ஆபத்துகள் என்னென்ன? #GoodParenting #MustKnow

குழந்தை கையில் ஸ்மார்ட்ஃபோன்

பெற்றோர்களுக்கு ஒரு கேள்வி...மற்றவர்கள் நேராக அடுத்த பத்திக்கு செல்லலாம். நீங்கள் உங்கள் முதல் மொபைல் போனை, எப்போது பார்த்தீர்கள்? எப்படியும் உங்களின் 20 வயதிற்கு மேல்தான் மொபைல் போன் கைக்கு கிடைத்திருக்கும். அதிலும் ஸ்மார்ட்போன் என்ற ஒன்று உங்கள் கைகளுக்கு வந்து நிச்சயம் பத்து ஆண்டுகள் கூட ஆகியிருக்காது. ஆனால் இன்று உங்கள் ஸ்மார்ட்போன் உங்களின் மூன்றாவது கையாகிவிட்டது. சரி..இருக்கட்டும்! 

இன்றைய குழந்தைகளின் கைகளுக்கு ஸ்மார்ட்போன்கள் எப்போது கிடைக்கின்றன? பிறந்தநாள் முதலே, ஸ்மார்ட்போன்கள், டேப்லட்கள், கணினிகள், இணையம் என முழு டிஜிட்டல் உலகில்தான் பிரவேசிக்கிறது இன்றைய குழந்தைகள். இதனால் இவற்றைப் பயன்படுத்துவதிலும் படுகில்லாடிகளாக இருக்கின்றனர் இன்றைய சுட்டிகள். கொஞ்சம் பெருமைக்குரிய விஷயம்தான். 

ஆனால் இங்குதான் ஆபத்தும் இருக்கிறது. காரணம் இன்றைய குழந்தைகளுக்கு எப்படி நிஜ உலகில் ஆபத்துகளும், அச்சுறுத்தல்களும் இருக்கிறதோ, அதைவிடவும் அதிகமான அச்சுறுத்தல்கள் இணைய வெளியில் இருக்கின்றன. இந்தியாவில் 2015-ம் ஆண்டு டிசம்பர் நிலவரம் படி, 306 மில்லியன் மொபைல் இன்டர்நெட் பயனாளர்கள் இருக்கிறார்கள். இது 2014-ஐ விடவும் 77 சதம் அதிகமாகும். இதில் குழந்தைகளும் அடங்குவார்கள். இவர்கள் கையில் இருக்கும் மொபைல் இன்டர்நெட்டால்தான், இவர்களுக்கான ஆபத்துக்களும் இருக்கின்றன. 

இணையம் மூலமாக மிரட்டப்படுதல், பாலியல் சீண்டல்களுக்கு ஆளாதல், தவறாக வழிநடத்தப்படுதல், ஹேக்கிங் போன்ற வகைகளில் அவர்களுக்கான அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. தினமும் குழந்தைகள் குறைந்தது 3 மணி நேரமாவது கணினி, மொபைல், டேப்லட் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இணையம் மூலமாக, சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்துகின்றனர். இங்குதான் சிக்கல்கள் துவங்குகின்றன. இதற்கு காரணம், குழந்தைகளுக்கான விழிப்புணர்வு இல்லாதது மட்டுமல்ல. பெற்றோர்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வு இல்லாததே ஆகும். கட்டுரையின் துவக்கத்தில் எழுப்பிய கேள்வி இதற்காகத்தான். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை குறைந்த காலமாகத்தான் பயன்படுத்துகின்றனர். சைபர் தாக்குதல்கள் குறித்த விழிப்புணர்வு என்பது அவர்களிடமே இல்லை. இந்த அறிவார்ந்த இடைவெளிதான் இதில் ஏற்படும் சிக்கல்களுக்கு காரணமாகின்றது. 

ஹேக்கர்ஸ்

உங்கள் குழந்தைக்கு எந்த விதங்களில் எல்லாம் ஆபத்து வரலாம் என நினைக்கிறீர்களோ, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டும்தான் நீங்கள் எடுப்பீர்கள். எனவே இதுகுறித்து தெரிந்து கொள்ளும் முன்பாக, குழந்தைகளுக்கு இணையத்திலும் ஆபத்து உள்ளது என்பதனை நீங்கள் உணர வேண்டும். அதே சமயம் இணையம் பயன்படுத்துவதே ஆபத்து என்றெல்லாம் சிந்திக்காமல், அதில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்று மட்டுமே சிந்திக்க வேண்டும்.

நிஜ வாழ்வில், உங்கள் குழந்தைக்கு எது மாதிரியான பிரச்னைகள் வரும், யாரால் ஆபத்து வரும் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இணையத்தை பொருத்தமட்டில், யார் வேண்டுமானாலும் உங்கள் குழந்தைகளை மிரட்ட முடியும். அவர் உங்கள் வீட்டிற்கு அருகிலும் இருக்கலாம். அல்லது பெயர் தெரியாத ஏதோ ஒரு நாட்டிலும் இருக்கலாம். இணையம் என்பது எந்தளவு பரந்து விரிந்ததோ, அந்தளவு தூரம் இருக்கிறது அதன் ஆபத்துக்களும். பெண் குழந்தைகளுக்குத்தான் இந்த ஆபத்துகள் இருக்கிறது; ஆண் குழந்தைகளுக்கு இல்லை என நீங்கள் நினைத்தால் அது மிகவும் தவறு. இருபாலின குழந்தைகளுக்குமே இணையத்தில் ஆபத்துக்கள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இது தொடர்பான புள்ளிவிவரங்கள் எதுவுமே இதுவரை இல்லை. மத்திய அரசின் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் கூட, சைபர் கிரைம்கள் பற்றி மட்டுமே இருக்கிறதே தவிர, குழந்தைகள் மீது, இணையத்தில் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை என்கிறது யுனிசெஃப். சைபர் தாக்குதல்கள் என்றால், வெறும் ஆன்லைன் பேங்கிங், கிரெடிட் கார்டு மோசடி மட்டுமே இல்லை. இதுபோன்ற தனிப்பட்ட தாக்குதல்களும் அதில் அடங்கும்.

இதுபோன்ற ஆபத்துக்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்யலாம்?

ஹேக்கர்ஸ்

தொழில்நுட்ப ரீதியாக, குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதை விடவும், குழந்தைகளுடன் மன ரீதியாக உரையாடுவதன் மூலம் மட்டுமே இவற்றை முதலில் தடுக்க முடியும். தன்னம்பிக்கை குறைந்த குழந்தைகள், அதிகம் பெற்றோர்களுடன் நேரம் செலவிட முடியாத குழந்தைகளே இவற்றால் பாதிக்கப்படுகின்றனர். எனவே நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இவைதான்.

1. உங்கள் குழந்தைகளிடம் மொபைல் அல்லது கணினி போன்றவற்றைக் கொடுக்கும் போதே, அதன் சாதக பாதகங்களை எடுத்து சொல்லிவிடுங்கள். 

2. ஆன்ட்டி வைரஸ், மால்வேர், ஹேக்கிங், சைபர் தாக்குதல்கள் போன்ற விஷயங்கள், இது பற்றிய அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை எல்லாம் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்துவிடுங்கள். 

3. இணையம் அல்லது சமூக வலைதளங்களில் அச்சுறுத்தல் தரும் விஷயங்கள், அறிமுகம் இல்லாத நபர்களின் தலையீடுகள் போன்ற அசாதரணமான, சந்தேகத்திற்கு இடமான விஷயங்கள் எது நடந்தாலும், உங்களிடம் கட்டாயம் கூறவேண்டும் என சொல்லிவிடுங்கள்.

4. வங்கிகள், மொபைல் வாலட்டுகள் போன்ற நிதி தொடர்பான ஆப்ஸ்கள், தளங்கள் போன்றவற்றை உங்கள் கண்காணிப்பு இன்றி, பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். 

5. சமூக வலைத்தளங்கள், மொபைல்கள் போன்றவற்றிற்கு பேரன்டல் கண்ட்ரோல் மென்பொருட்கள் இருக்கின்றன. தேவைப்பட்டால் அவற்றையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

6. உங்கள் குழந்தைகளுக்கு இணையம் மூலமாக ஏதேனும் ஒரு பிரச்னை என்றால், உடனே காவல்துறையினரின் உதவியை நாடிவிடுவது நல்லது. 

- ஞா.சுதாகர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்