வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (31/01/2017)

கடைசி தொடர்பு:20:14 (31/01/2017)

காமராஜர் கார் முதல் ஹிட்லர் கார் வரை.. பாண்டிச்சேரி வின்டேஜ் ராலி! #VintageCars

ஒரு சின்ன வின்டேஜ் ஃப்ளாஷ்பேக்...

1896-ம் ஆண்டு. நவம்பர் மாதம் 14-ம் தேதி, சனிக்கிழமை. இங்கிலந்து தலைநகர் லண்டனின் சாலைகள் முந்தைய நாள் மழையின் காரணமாக ஈரம் கொண்டிருந்தன. ஹைட் பார்க் (Hyde Park) அருகே சில கார்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. 

"இதுவரை சாலைகளில் 6 கி.மீ வேகத்தில் மட்டுமே ஊர்ந்து கொண்டிருந்த இங்கிலாந்து கார்கள், இனி 23 கி.மீ வேகத்தில் சீறிப் பாயலாம்!" என்ற சந்தோஷ அறிவிப்பை வாசிக்கிறார் ஹாரிலாசன் (Harry Lawson). வின்டேஜ் கார் ராலியின் முன்னோடி என்று இவரைச் சொல்லலாம். "இதைக் கொண்டாட நாம் பிரிட்டனின் அழகிய கடற்கரை நகரமான பிரைடனுக்கு ஊர்வலமாகச் செல்ல இருக்கிறோம்" என்று அவர் சொல்லி முடிக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த 87 கி.மீ பயணம் தொடங்குகிறது. அன்று தொடங்கிய இந்தப் பயணம், வருடந்தோறும் நடக்க வேண்டும் என்ற முடிவும் அங்கே எடுக்கப்படுகிறது. 

வின்டேஜ் கார் ராலி சென்னை டூ பாண்டிச்சேரி

நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் விண்டேஜ் கார் ராலியாக இந்த 'லண்டன் டூ பிரைடன்' பயணம் ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. உலகின் பல நாடுகளில் இருக்கும் வின்டேஜ் கார் ஆர்வலர்களுக்கு இந்த ரேலி என்பது ஒரு கலர்ஃபுல் நனவு. இதை முன்மாதிரியாகக் கொண்டு பல நாடுகளும் வின்டேஜ் கார் ராலியை நடத்தி வரும் நிலையில்... சென்னையிலும் கடந்த பத்து ஆண்டுகளாக வின்டேஜ் கார் ராலி நடைபெற்று வருகிறது. இந்த வருடமும் களை கட்டியது கார்களின் அணிவகுப்பு. 'என்னதான் நடக்குது இங்க' என்று பார்ப்பதற்காக வந்திருந்த நம்மை, வான்ட்டட் ஆக வண்டியில் ஏற்றினார் கைலாஷ். "ஹாய்... நான்தான் சென்னை வின்டேஜ் கார் கிளப்பின் தலைவர்" என்று க்ளாஸிக்காக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட வின்டேஜ் கார்கள் இந்த ராலியில் பங்கேற்றிருந்தன. 1920-ல் ஆரம்பித்து 1950 வரைக்குமான வின்டேஜ் வாகனங்களின் அணிவகுப்பு, க்ளாஸ் ஆகவும் மாஸ் ஆகவும் இருந்தது. "ஹேய்... ப்ளைமவுத்டா... காமராஜர் இந்த கார்தான் வச்சிருந்தாரு... தெரியுமா!.. ஹேய்.. அது பென்ஸானு பாரு.. ஹிட்லர் பென்ஸ்தான் வெச்சிருந்தாரு தெரியுமா?” என்று ஆங்காங்கே கமென்ட்கள்  பறக்க, சாலைகளில் பல வின்டேஜ் கார்களுக்கு லைக்ஸ்களும் குவிந்து கொண்டிருந்தன. 

"பழைய வண்டிகளைப் பார்த்துக்குறது... அதை ஓட்டுறதுங்குறது ஒரு போதை. நமக்குப் பிடிச்ச பழைய வண்டிகளை வீட்டுக்குள்ளயே சும்மா நிறுத்தி என்ன பிரயோஜனம்?இப்படி வருஷத்துக்கு ஒருமுறை அதை ரோட்ல அழகா ஓட்டிட்டுப் போகும்போது ஒரு செம பீல் கிடைக்குது பாஸ்!" என்றபடி தன் 1946 'மோரிஸ் மைனர்-8' காரைக் கிளப்பினார் கைலாஷ். "8 என்றால், 800 சிசி... 1000 சிசியும் இருக்கு... குப்பையில் கிடைச்ச குன்றுமணி சார் இந்த மோரீஸ் மைனர்" என்று ஒரு மேஜர் ஃப்ளாஷ்பேக்குக்குத் தாவினார் அவர்.

1994-ம் ஆண்டு. மத்தியான நேரம்... ஒரு மெக்கானிக் கடைக்கு வெளியே வெயிலில் குப்பைகள் சூழ ஒரு கார் நின்று கொண்டிருந்ததைக் கவனித்திருக்கிறார் கைலாஷ். என்ன கார் என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது, அது 1946-ம் ஆண்டைச் சேர்ந்த மோரீஸ் மைனர் கார். உடனே அங்கிருந்தவர்களிடம் பேசி, ஓனரைப் பிடித்து அன்று ராத்திரியே மோரீஸை தன் வீட்டுக்கு டெலிவரி எடுத்துவந்து விட்டார் கைலாஷ். "என்கிட்ட இருக்குற 1933 Ford - Tudor, 1948 - Aston - 8, 1952 - Bug Fiat, 1946 - Singer என ஒவ்வொரு கார்களுக்கும் பின்னால் ஒரு அழகான கதை இருக்கு!" என்று கைலாஷ் புளகாங்கிதம் அடைந்து முடிந்தபோது, பாண்டிச்சேரி ரோடு வந்திருந்தது. 

வின்டேஜ் கார் ராலி சென்னை டூ பாண்டிச்சேரி

"நம்ம ஜீப்ல ஒரு ரைடு வர்றீங்களா?" என்று பாசமாகக் கைகாட்டினார், பச்சை நிற வில்லீஸ் ஜீப் ஓட்டுநர். சட்டென அதற்கு இடம் மாறினோம். "1942 மாடல் சார் இது. பெட்ரோல் இன்ஜின். செம ஸ்மூத்தா இருக்கும்" என்று சின்ன இன்ட்ரோ கொடுத்தார் அர்ஜூனன். "உங்க ஜீப்பா? நல்லா வெச்சிருக்கீங்களே?" என்றபோது, "ஹலோ... நான் மெக்கானிக் சார். எங்க பாஸ்கிட்ட வில்லீஸ் மாதிரி நிறைய கார்கள் கைவசம் இருக்கு!" என்றார். அவர் சொன்னதுபோலவே புத்தம் புது பெட்ரோல் காரில் போவதுபோன்ற உணர்வைக் கொடுத்தது வில்லீஸ். 

"இதுல இருக்கிறது சைட் வால்வ் பெட்ரோல் இன்ஜின் சார். ஸ்டீயரிங் ராடில் இருந்து, பெடல்ஸ் வரைக்கும் எல்லாமே ஒரிஜினாலிட்டியோட அப்படியே இருக்கு. கால் வைக்க சிரமமா இருக்குறதால பெட்ரோல் டேங்க் மட்டும் சின்னதாக்கி இருக்கோம்" என்று அர்ஜூனன் சொல்லிக் கொண்டிருந்தபோது, ஒரு பச்சை நிற 1931 Dodge Brothers கார் நம்மைக் கடந்து சென்றது. காரின் பானெட் மீது டெம்பரேச்சர் மீட்டர் பொருத்தப்பட்டிருந்தது வித்தியாசமாக இருந்தது. 

மூன்று மணி நேரம் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. பாண்டிச்சேரி வந்தடைந்திருந்தோம். ஏற்கெனவே பீச், டூரிஸம் என்று களை கட்டும் பாண்டிச்சேரி, இன்னும் கலர்ஃபுல்லாக மாற ஆரம்பித்தது. நகருக்குள் நுழையும்போதே மக்கள் இந்த வித்தியாச கார்களை ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தனர். பாண்டிச்சேரியின் டிராஃபிக்கைக் கடந்து பீச் ரோடு சென்றடைந்தனர் இந்த "ஹிஸ்டாரிக்கல் ஹீரோஸ்!" 

"பிரெஞ்சுக் காலனியான பாண்டிச்சேரிக்கு பிரெஞ்சு காரில்தான் வந்திறங்க வேண்டும்" என்று கூறி தன் 1975 பெஜோ (Peugeot)-504-யைக் கொண்டு வந்திருந்தார் ரஞ்சித் பிரதாப்.

"என்னிடம் மொத்தம் 48 வின்டேஜ் கார்கள் இருக்கின்றன. இது எல்லாமே எனக்கு என் குழந்தைகள் மாதிரி. அப்படிப் பார்த்துக்குவேன். இதற்குத் தேவையான ஸ்பேர் பார்ட்ஸ்களை உலகில் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து ஆர்டர் கொடுத்து விடுவேன். ஒவ்வொரு காருக்குள்ளும் என்னுடைய சின்ன வயது ஞாபகங்கள் நிறைந்து கிடக்கின்றன. சின்ன வயதில் ஸ்கூலுக்குப் போகப் பிடிக்காது. மினி காரில் போக வேண்டும் என்பதற்காகவே பள்ளிக்குச் செல்வேன்." என்று சொல்லும் ரஞ்சித் பிரதாப், பெஜோ தவிர இன்னும் நிறைய வின்டேஜ் கார்களின் உரிமையாளர். உரிமையாளர் என்று சொல்வதைவிட பாதுகாவலர் என்றே சொல்லலாம். அந்த அளவு தனது கார்களைப் பாதுகாக்கும் ரஞ்சித், Oral-B டூத் பிரஷ் நிறுவனத்தின் உரிமையாளர். 

வின்டேஜ் கார் ராலி சென்னை டூ பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி பீச் ரோட்டில் வெயில் குறையத் தொடங்கியிருந்தது. சாலையின் ஒருபுறம் 1952 - Citroen, 1948 - Ford Perfect, 1956 - Fiat Super Select, 1959 - Mark 1 Ambassador, மர வேலைப்பாடுகள் மிகுந்த Buick Eight,  1960 - Sunbeam Alpine, 1938 - Plymouth, 1959 - Benz 240D, Herald, Mg, Ford Anglia, 1964 - Vauxhall என அந்தக் காலத்து சாலை ராஜாக்கள் கம்பீரமாக நின்று கொண்டிருந்தன. 

"இதோ பாரு பழைய செவர்லே... நம்ம வச்சிருக்கோம்ல ஸ்பார்க்.. அந்த கம்பெனியோட பழைய கார் இது..." என்று தன் மனைவிக்குச் சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு வயதானவர்.

" டேய் விஜய்... சின்ன வயசுல தாத்தாகிட்ட இந்த மாதிரிதான் அம்பாஸடர் இருந்தது. நான்லாம் அதுலதான் ஸ்கூலுக்குப் போவேன். செமடா..." என்று குழந்தையாக மாறி தன் குழந்தைக்குச் சொல்லிக் கொண்டிருந்தார் ஓர் அப்பா.

 இப்படியாக பல மனிதர்கள் அந்த கார்களின் பழைய ஞாபகங்களில் ஆழ்ந்து போயினர். இன்றைய தலைமுறையினர், வண்டிகளோடு செல்ஃபி எடுக்கத் தொடங்கினர். மக்களின் மகிழ்ச்சியை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தன வரலாற்றைக் கடந்து நிற்கும் இந்த வரலாற்று வாகனங்கள்.

                                                                                                                 

-  இரா.கலைச் செல்வன்,

படங்கள்: தே.அசோக்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்