மஞ்சள் அட்டை திருமணப் பத்திரிகை முதல் - கிரெடிட் கார்ட் பத்திரிகை வரை! #WeddingCards | Varieties of wedding cards #WeddingCards

வெளியிடப்பட்ட நேரம்: 11:43 (01/02/2017)

கடைசி தொடர்பு:11:55 (01/02/2017)

மஞ்சள் அட்டை திருமணப் பத்திரிகை முதல் - கிரெடிட் கார்ட் பத்திரிகை வரை! #WeddingCards

திருமணப் பத்திரிகை

‘திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது’ என்பது உண்மைதான். ஆனாலும் வெவ்வேறு இடங்களிலும், இல்லங்களிலும் அந்தத் திருமண முறைகள் மாறுபடுகின்றன என்பதும் உண்மை. இது ஒருபுறமிருக்க, இன்றைய நவீன உலகில் திருமண நிகழ்வுகள் மிகவும் வித்தியாசமான முறையில் அரங்கேறிவருவது குறிப்பிடத்தக்கது. ஆகாயத்தில் பறந்துகொண்டும், கடலுக்கு அடியில் பயணம் செய்தபடியும் வித்தியாசமான முறையில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளைச் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. திருமண நிகழ்வுகளில்கூட பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டன. அன்று சாதாரணமாக நடைபெற்ற திருமணங்கள், இன்று மிகவும் ஆடம்பரமாக நடக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றன. திருமணங்கள் இவ்வாறு பல்வேறு விதங்களிலும், ஆடம்பரமாகவும் நடைபெறும்போது, அதற்கு அச்சாணியாக இருக்கும் திருமணப் பத்திரிகைகளில் மட்டும் மாற்றம் வராமல் இருக்குமா என்ன?

மஞ்சள் நிற திருமணப் பத்திரிகை!

முன்பெல்லாம் பலருடைய திருமணம் மிகவும் எளிய முறையில் நடந்தேறியதைப் போன்றே, அவர்களுடைய திருமணத்துக்காக அச்சடிக்கப்பட்ட பத்திரிகைகளும் மிக மிக எளிமையாக அச்சடிக்கப்பட்டு சாதாரணமான பத்திரிகைகளாக அமைந்திருந்தன. நான்கு மடிப்பாக மடிக்கப்பட்டு, கவருக்குள் வைத்துக் கொடுக்கப்படும் அந்தப் பத்திரிகைகள், பார்ப்போரைக் கவரும் வண்ணம் இருக்கும். மஞ்சளும், ரோஸும் கலந்த நிறத்தில் அந்தப் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கப்பட்டன. இதில், திருமண நிகழ்வு பற்றிய குறிப்புகள் மஞ்சள் நிறப் பக்கத்திலும், ரோஸ் நிறத்திலான மறுபக்கத்தில் திருணம் நடைபெறும் நாள், நேரம், இருவீட்டார் அழைப்பு போன்ற தலைப்புகளும் அச்சடிக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற பாரம்பர்ய மஞ்சள் மற்றும் ரோஸ் வண்ணத்திலான திருமணப் பத்திரிகைகளை இன்றைய தலைமுறை அவ்வளவாகப் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், சில வீடுகளில் திருமணத்துக்கான சாட்சியாக அதுபோன்ற பத்திரிகைகளை ஃபிரேம் செய்து மாட்டப்பட்டிருப்பதைப் பார்த்து அறிந்துகொள்ளலாம்.

ஆரம்பகால மஞசள் நிற திருமணப் பத்திரிகை

திருமணம் என்பது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, பெண்ணும், மாப்பிள்ளையும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக்கொள்ளாமல் நடைபெற்றது அந்தக் காலம். தற்போது, ஒருவரை ஒருவர் பார்த்து, காதலித்து, அதன்பின் பெற்றோருக்குத் தெரியப்படுத்தி, நிச்சயித்து திருமணம் நடைபெறுவதும் உண்டு. வேறுசில நிகழ்வுகளில், இரு வீட்டாருமோ அல்லது பெண் அல்லது பையன் வீட்டாரோ காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்பட்சத்தில், பதிவுத் திருமணம் செய்துகொள்ளுதல் அல்லது நண்பர்கள் உதவியுடன் தாங்களாகவே எளிய முறையில் கோயில்களிலோ அல்லது மண்டபங்களிலோ வைத்து திருமணம் செய்துகொள்வதும் நடைபெற்றுவருவதை அறிகிறோம்.

கால மாற்றத்துக்கேற்ப திருமணம் செய்துகொள்வது மாறிவிட்டது போன்று, திருமணத்துக்காக அச்சிடப்படும் பத்திரிகைகளிலும் ஏராளமான மாற்றங்கள் வந்துவிட்டன. மஞ்சள் - ரோஸ் நிற பத்திரிகைகளுக்குப் பிறகு, டிஜிட்டல் யுகம் அசுர வளர்ச்சி பெற்றதால், அதன்மூலம் திருமணப் பத்திரிகைகள் புதுப்பொலிவு பெறத் தொடங்கின. திருமணக் குறிப்புகளுடன், மணமகன் மற்றும் மணமகள் உருவம் பதித்த படங்கள் வெளிவர ஆரம்பித்தன. இன்றும் பல வீடுகளில் இப்படித்தான் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இதுதவிர, மிகவும் சிம்பிளாக போஸ்ட் கார்டு சைஸிலும் பத்திரிகைகள் வரத் தொடங்கிவிட்டன.

ஜனார்த்தன ரெட்டி தயாரித்த பத்திரிகை!

இவற்றையெல்லாம் மிஞ்சும் விதமாக கர்நாடக முன்னாள் அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான கலி ஜனார்த்தன ரெட்டி, கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தனது மகளின் திருமணத்துக்காகத் தயாரித்திருந்த பத்திரிகை மிகவும் வித்தியாசமானதாக அமைந்திருந்தது. அது, வழக்கமான வார்த்தைகள் அச்சடிக்கப்பட்ட பத்திரிகையாக இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட வகையில், எல்.சி.டி திரையுடன் கூடிய ஒரு பாக்ஸ் வடிவில் தயாரிக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்தால்... ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர், திருமணத்துக்கு அழைப்பது போன்ற வீடியோ காட்சி எல்.சி.டி திரையில் தோன்றும் வகையில் வடிவமைத்திருந்தனர். அதில் ஜனார்த்தன ரெட்டி, அவரது மனைவியுடன் பாட்டுப் பாடியபடியே தனது மகளை அறிமுகப்படுத்துவார். அதன் பிறகு மணமகள் ப்ராமினியும், மணமகன் ராஜீவ் ரெட்டியும் டூயட் பாடுவார்கள். இறுதியில், திருமணத் தேதி மற்றும் இடத்தை ரெட்டி குடும்பத்தினர் கூறுவதுடன் பாடல் முடிவடையும். இதுபோன்ற மிகவும் ஆடம்பரமான அழைப்பிதழை எல்லோராலும் வழங்க முடியாவிட்டாலும், இப்படிப்பட்ட பத்திரிகையும் உலகைத் திரும்பிப் பார்க்கவைத்தது.

ஜனார்த்தன ரெட்டி தயாரித்த திருமணப் பத்திரிகை

தற்போது உலகமே டிஜிட்டல்மயமாகி, கார்டுகளில் இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில், திருமணப் பத்திரிகையும் ஒரு ஏ.டி.எம் கார்டுபோல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பதற்கு மிகவும் சிம்பிளாகவும், எல்லோரையும் அசத்தும் விதத்தில் கைக்கு அடக்கமாகவும் அந்தத் திருமண கார்டு அச்சடிக்கப்பட்டிருக்கிறது. அதில், ஒருபுறத்தில் திருமணத் தேதியும், மணமக்கள் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன. மறுபுறத்தில் திருமண மண்டபம் பற்றிய குறிப்புகளும், அவர்களுடைய தொடர்பு எண்களும் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பாகப் பேச... அதில், இடம்பெற்றிருந்த இரண்டு செல்போன் எண்களுக்கும் நாம் தொடர்புகொண்டோம். ஆனால், ஓர் எண் உபயோகத்தில் இல்லை. மற்றோர் எண்ணில் தொடர்புகொண்டபோது அவர், நம் அழைப்பை ஏற்கவில்லை.

ஏ.டி.எம் கார்டு வடிவில் பத்திரிகை!

இதுகுறித்து திருமணப் பத்திரிகை அச்சடிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள வடிமைப்பாளர்கள் கூறுகையில், ‘‘ஏ.டி.எம் வடிவமைப்பில் அச்சடிக்கப்பட்டிருக்கும் அதுபோன்ற திருமண கார்டுகளுக்கு சமீபகாலமாக நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. மிகவும் சிம்பிளாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருப்பதுடன் கைப்பையிலோ அல்லது மணிபர்ஸிலோ அதுபோன்ற கார்டை அழைப்பாளர்கள் வைத்துக்கொள்ள முடிவதால், திருமணம் நடைபெறும் நாளன்று எளிதில் மண்டபத்துக்குச் செல்ல ஏதுவாகவும் இருக்கிறது. வித்தியாசமாக இருக்கும் இதுபோன்ற திருமண கார்டைப் போன்று, வரும் காலங்களில் மற்றவர்களும் அச்சடிக்க வாய்ப்பு இருக்கிறது. டிஜிட்டல் புரட்சியில் இதைவிட இன்னும் மாற்றம் வரக்கூடும்’’ என்றனர்.

ஏ.டி.எம் கார்டு வடிவில் திருமணப் பத்திரிகை

சமூக வலைதளங்களில் இளைய சமுதாயத்தினர் தங்களது நேரத்தைச் செலவிடும் இன்றைய சூழ்நிலையில், தங்களுக்கு நெருக்கமான நண்பர்களுக்கு, ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டில் உள்ளவர்களுக்கு, திருமணத்துக்கான கார்டை ஸ்கேன் செய்து அனுப்பிவிட்டு, ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் போடும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. ‘இதனையே நேரில் வந்து கொடுத்ததாகக் கருதவும்’ என்று பின்குறிப்பையும் போட்டுவிடுகிறார்கள். பின் என்ன? திருமணத்துக்குச் சென்று வாழ்த்திவிட்டு, சாப்பிட்டு வர வேண்டியதுதான்.

மாற்றம் என்பது திருமண அழைப்பிதழ் கார்டில் மட்டும்தானா? மாற்றம் ஒன்றே மாறாதது என்பது இதற்கும் சாலப்பொருந்தும்.

- ஜெ.பிரகாஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close