வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (01/02/2017)

கடைசி தொடர்பு:14:19 (01/02/2017)

‘வதுவை நன்மணம்!’ - பழநிபாரதியின் கவிதை... பாடலானது!

"மணச் சீலையாகிறது
மழை நீலம்

முதுமழை மேகங்கள்
நிறை நீர்க்குடம் சுமந்து
மங்கல நீராட்டுகின்றன உன்னை

மூலிகை மணக்கும்  
உன் மேனியெங்கும்
ஒட்டிக்கிடக்கின்றன
நனைந்த நெல்மணிகளும்
குளிர்ந்த மலரிதழ்களும்

ஓர் ஆதிமரத்தின் கீழ்
உன்னை
எனக்குக் கைப்பிடித்துக் கொடுக்கிறது
முன்னந்திக் காற்று

எங்கோ
ஒரு கருவறைச் சித்திரத்தில்
உறைந்திருந்த பறவை
இப்போது
இம்மரத்தின் கிளையில்

நீ
மரத்தின் வேர்களை
உள்ளங்கைகளில் மூடிவைத்திருக்கிறாய்
ரேகைகளாக

உன் மார்பில் ஏந்தியிருக்கிறாய்
அதன் கனிகளையும்

மரபணு மாற்றப்படும் உலகில்
அன்பே
உன்னை
எங்கே அழைத்துச்செல்வது
பத்திரமாக?"

வதுவை நன்மணம் - பழனிபாரதியின் கவிதை.

 

15.10.2014 ஆனந்த விகடன் இதழில் கவிஞர் பழநிபாரதி எழுதிய கவிதை இது. பெண்ணின் தன்மையையும், பூமியின் தன்மையையும் இணைத்து, மரபணு மாற்ற அரசியலை உள்ளடக்கமாக்கி எழுதப்பட்டது இந்தக் கவிதை. இதில் லயித்து, அழகுற இசையமைத்து ஆல்பமாக்கி இருக்கிறார் இசையமைப்பாளர் குரு கல்யாண். 

குரு கல்யாண்


மாத்தி யோசி, கோட்டி, குகன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள குரு கல்யாண், மதுரையைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் இசைக்கலவை தொழில்நுட்பம் படித்தவர். ஆனந்த விகடன் கவிதை அவரை ஈர்த்தது பற்றியும், அதை இசையாக்கியது பற்றியும் நெகிழ்வோடு பகிர்ந்து கொண்டார்.

"சிறு வயதில் இருந்தே எனக்கு கவிதையில் நாட்டம். சமூக பிரச்னைகளையும், உயிரோட்டமான வாழ்வியலையும், சூழலியலையும் பேசும் கவிதைகள் என்னை பெரிதாக ஈர்க்கும். அந்த வகையில் கவிஞர் பழநிபாரதி மீது எனக்கு மரியாதை அதிகம். குகன் படத்தில் அவரோடு பணியாற்றிய போது மேலும் அவர் மீது மதிப்பு அதிகமானது. இயற்கை விவசாயம் பற்றிய ஒரு பாடல்... அவ்வளவு அற்புதமாக வார்த்தைகளை அடுக்கி இலக்கியப்பூர்வமாக எழுதியிருந்தார். 

ஆனந்த விகடனில் அவர் எழுதியிருந்த கவிதை எனக்கு பல்வேறு புரிதல்களை உருவாக்கியது. பூமியையும் பெண்ணையும் ஒன்றாக உருவகப்படுத்தியதோடு, உலகை அச்சுறுத்தும் மரபணு மாற்றத்தையும் கவிதைக்குள் உட்புகுத்திய நுட்பம் என்னை வியக்க வைத்தது. இதை பாடலாக்க வேண்டும் என்ற உந்துதல் அப்போதே ஏற்பட்டு விட்டது. கவிஞரும் அனுமதித்தார். 

ஆனால் அது மிகவும் சவாலாக இருந்தது. சந்தத்துக்கு வார்த்தைகளை எழுதி பாடலாக்குவது எளிது. ஆனால், கவிதையை இசைக்குள் அடக்குவது எளிதல்ல. நிறைய உழைத்து, வரிக்கு சிறு பங்கம் கூட வராமல் தாளத்திற்குள்  கொண்டு வந்து பாடலாக்கினேன். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பரத் அந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். 

இதை காட்சிகளோடு இணைப்பது மேலும் சவாலாக இருந்தது. கவிதைக்கும், இசைக்கும் பொருத்தமான காட்சிகளை இணைத்தோம். என் புரிதல்படி பாரதியில் இருந்தே புதுக்கவிதை தொடங்குகிறது. அதனால் இந்த பாடலும் அவரில் இருந்துதான் தொடங்குகிறது. 
ஒரு பக்கம் ஒரு பெண்ணின் சித்திரத்தை வரைவது போலக் காட்டிவிட்டு, இன்னொரு பக்கம் நிலக்காட்சிகளையும் கவிதை வரிகளையும் பதிவு செய்தோம். எவ்வளவோ பாடல்களை உருவாக்கியிருந்தாலும் இந்த "வதுவை நன்மணம்" மிகவும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது..." என்கிறார் குரு கல்யாண். 

மிகவும் உணர்வுப்பூர்வமாகப் பேசினார் கவிதையை எழுதிய பழநிபாரதி.

பழனிபாரதி


"வதுவை நன்மணம் என்பது பழமையான நம் திருமண முறை. மண் குவிக்கப்பட்டு, நிறைந்த நீர்க்குடங்கள் வைத்திருப்பார்கள். அதில் நெல்மணிகளும் பூவிதழ்களும் மிதக்கும். அந்த நீரைக் கொண்டு வயது முதிர்ந்த பெண்கள் மணமகளை நீராட்டுவார்கள். ஒரு தொல்தமிழர் வாழ்வியல் நூலில் இதைப் படித்தபோது என்னை மிகவும் ஈர்த்த காட்சி இது. எப்போதும் இந்த காட்சி என் மனதில்  நிழலாடிக் கொண்டே இருக்கும். 

இந்தக் கவிதை எழுதியபோது மழை பெய்து கொண்டிருந்தது. இயல்பாகவே மண்ணையும், பெண்ணையும் இணைத்து எழுத இயக்கியது மனம். என்னையறியாமலேயே வதுவை நன்மணக் காட்சிகள் இந்தக் கவிதையில் ஒட்டிக் கொண்டன. இன்று நம் மரபுகள் பலவும் தொலைந்து விட்டன. காய்கனி தொடங்கி வாழ்க்கை முறை வரை எல்லாவற்றிலும் மரபணு மாற்றம் அதிவேகத்தில் நடந்து வருகிறது. அந்த சூழலும் கவிதைக்குள் உள்நுழைந்து விட்டது. 

இந்தக் கவிதையை அவ்வளவு அழகாக இசையமைத்து அழகூட்டி இருக்கிறார் குரு. தமிழ்சினிமாவில் புதுக்கவிதைகளுக்கு இசையமைப்பது முன்பே நடந்திருக்கிறது. எம்.எஸ்.விஸ்வநாதன், வாலியின் கவிதைகளுக்கு இசையமைத்து பாடலுக்கு நடுவே சேர்த்திருக்கிறார். வைரமுத்துவின், "திருத்தி எழுதிய தீர்ப்புகள்" நூலில் இடம்பெற்ற ஒரு கவிதை பாடலாக ஒரு படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தக் கவிதைகள் எல்லாம் இசையின் இயைபோடு ஒத்துப்போகக்கூடியவையாக இருந்தன. 
இந்தக் கவிதையைப் பொறுத்தவரை இசைக்குள் அடங்கும் நுட்பத்தோடு எழுதப்படவில்லை. அதில் கவனமும் செலுத்தவில்லை. ஆனால் அதை வெகு லாவகமாக வேகமான ஒரு ரிதத்தில் இணைத்து ஈர்க்கும்படி உருவாக்கியிருக்கிறார் குரு. வார்த்தைகள் எந்த இடத்திலும் இசையால் சேதமாகவில்லை என்பது இன்னொரு வியப்பு..."  என்கிறார் கவிஞர் பழநிபாரதி

பழந்தமிழர் மணக்காட்சியையும் பெண்ணின் வனப்பையும், இயற்கையின் சிறப்பையும் பாடும் இந்தப் பாடலை நீங்களும் கேளுங்கள்!

 


-வெ.நீலகண்டன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்