இதைக் கொஞ்சம் படிங்க.. நீங்களும் ஆகலாம் பி.சி.ஸ்ரீராம்! #Photography

புகைப்படக் கலை

க்கத்து டவுனில் இருக்கும் ஸ்டூடியோவுக்கு குடும்பத்தோடு வண்டிகட்டி சென்று புகைப்படம் எடுத்துக் கொண்ட காலம் போய் எல்லோருடைய கையிலும் DSLR தவழும் காலத்திற்கு வந்துவிட்டோம். கையில் கேமரா இல்லையென்றாலும் மொபைலில் படங்களைக் கிளிக்கிக் கொண்டு உலாவரும் ஒவ்வொரு இளைஞனின் உள்ளுக்குள்ளேயும் ஒரு பி.சி. ஸ்ரீராமும், சந்தோஷ் சிவனும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த அளவுக்குப் புகைப்படக் கலை பெரும்பாலானோரை ஈர்க்கும் ஒரு விஷயம்!       

போட்டோகிராபி மீது ஆர்வம் கொண்டு புது DSLR கேமரா வாங்கியும், நீங்கள் எடுக்கும் படங்களுக்கு பேஸ்புக்கில் லைக்ஸ் வரவில்லையா? உங்களுடைய போட்டோகிராபி திறமையை வளர்த்துக்கொள்ள ஏதேனும் சிறப்பு வகுப்பிற்கு செல்லலாம் என்று இருக்கிறீர்களா? உங்களுக்கானதுதான் இந்த கட்டுரை.

1. உங்கள் கேமராவை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் :

கிராமத்தில் பெண்களின் சமையல்! படம் : க.விக்னேஸ்வரன்

முதலில் உங்களிடம் உள்ள கேமராவைப் பற்றி முழுமையாக புரிந்துகொள்ளுங்கள். அந்த கேமராவைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்ள தவறாதீர்கள். உங்கள் கேமராவுடன் அளிக்கப்பட்ட ‘User Manual’ கையேட்டை முழுமையாக படித்துவிடுங்கள்.

விலை உயர்ந்த கேமராவில் மட்டுமே சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம் என்ற பொது கருத்து நிலவி வருகிறது. அது முற்றிலும் தவறான கருத்து. சுவையான சமையலுக்கு சமைப்பவரின் திறமைதான் காரணமே தவிர, விலை உயர்ந்த அடுப்பு இல்லை. விலை உயர்ந்த கேமராக்கள் சில அம்சங்களில் மட்டுமே தேவைப்படும். அதனால் திறமை இருந்தால் சிறந்த படங்களை எந்தக் கேமராவிலும் எடுக்க முடியும்.

2. குறிப்பெழுதுங்கள்  : 

போட்டோகிராபி சம்மந்தமான உங்கள் எண்ணங்களை, லட்சியங்களை ஒரு பிரத்யேக நோட்டில் எழுதுவதை வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள் .

உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட காட்சியை படமாக்க எடுக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றினால், உடனே அதை உங்கள் போட்டோகிராபி குறிப்புகளில் எழுதிவிடுங்கள். அந்தக் காட்சியைப் படம் பிடித்தவுடன் அதை நீங்கள் எழுதிய குறிப்பின் அருகில் ஒட்டிவிடுங்கள். வாடிக்கையாய் டைரி எழுதும் பழக்கம் போல் இந்த குறிப்பெழுதும் பழக்கத்தையும் மாற்றிக்கொள்ளுங்கள். நாளைடைவில், உங்கள் போட்டோகிராபி டைரி,  உங்களின் வெற்றிக் கதைகளை கூறும் பொக்கிஷமாக மாறிவிடும்.  தவிர, இது போல் இலக்கை தீர்மானித்து செயல்படும் பொழுது உங்கள் போட்டோகிராபி திறமை மேலும் மெருகேறும்.

3. தினமும் நேரம் ஒதுக்குங்கள் :

புகைப்படக் கலை

போட்டோகிராபி கலையில் உங்களின் திறமையை வளர்க்க விரும்பினால், கண்டிப்பாக தினமும் உங்கள் கேமராவுடன் ஒரு குறிப்பிட்டளவிலான நேரத்தை செலவிடுங்கள். தினமும் மனதிற்கு திருப்தியாக 3 படங்களாவது எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். வார இறுதி நாட்களில் Photo Walk மேற்கொள்ளுவதை வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள். ஒரு கிராமத்திற்கோ அல்லது ஒரு சுவாரசியமான இடத்திற்கோ சென்று அந்த இடம் முழுவதும் சுற்றி திரிந்து புகைப்படம் எடுப்பதே Photo Walk. உங்கள் ஊரிலும் கண்டிப்பாக ஒரு Photo Walk குழு இருப்பார்கள். முகநூலில் தேடி பாருங்கள். அப்படி இல்லை என்றால் நீங்களே ஒரு Photo Walk குழுவை உருவாக்குங்கள்.

4. புதுமையை புகுத்துங்கள் :

மூதாட்டி! படம் : க.விக்னேஸ்வரன்

தினமும் புகைப்படம் எடுப்பதை விட அதிமுக்கியமான விஷயம், புகைப்படம் எடுப்பதில் புதிய யுத்திகளை முயற்சி செய்வது. அனுதினமும் ஒரே  மாதிரியான காட்சிகளை படம் பிடிப்பதில் ஒரு பயனும் இல்லை. நீங்கள் Photo Walk செல்லும் இடங்களை மாற்றி கொண்டே இருங்கள். புதிய இடம், புதிய முகங்கள், புதிய நிறங்கள் என்ற தேடலை வளர்த்துக்கொள்ளுங்கள். இதைத் தவிர மாறுபட்ட வெளிச்சங்களில் புகைப்படம் எடுக்க முயலுங்கள். பொதுவாக போட்டோகிராபி துறையில் Magic Hours என்றழைக்கப்படும் அதிகாலை மற்றும் அந்திமாலை நேரங்கள்தான் Outdoor போட்டோகிராபிக்கு சிறந்த நேரம். ஆனால் இரவு நேரம், மதிய நேரங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களும் தங்களுக்கே உரித்தான பிரத்யேக சிறப்பம்சங்களை கொண்டிருக்கும். அவைகளையும் முயற்சித்து பாருங்கள்.

5. இலக்குகளை உருவாக்கிக் கொள்ளுங்கள் :

கடற்கரையில் தம்பதி! படம் : க.விக்னேஸ்வரன்

உங்கள் போட்டோகிராபிக்கென்று சில  Theme-களை உருவாக்கிக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு ஆங்கில எழுத்துக்களின் வடிவம் கொண்ட விசயங்களை படம் எடுப்பதாக முடிவு செய்தால், கோவில் கோபுரம் A வடிவம் போல் இருக்கும், மலைத்தொடர்ச்சிகளின் நடுவே M வடிவத்தை காணலாம். இப்படி A முதல் Z வரை தேடி தேடி எடுப்பது சுவாரசியமாக இருக்கும்!  மேலும் ஒரு புகைப்பட கலைஞராக நீங்கள் உலகை பார்க்கும் விதம் தேர்ச்சியடையும்.  நம் வாழ்வியலில் அழிந்து வரும் சில விசயங்களை Theme ஆக எடுத்துக் கொள்வது, உங்கள் புகைப்பட கலைக்கு மேலும் மதிப்பைக் கூட்டும். அழிந்து வரும் வாழ்வியலிற்கு தண்டட்டி அணிந்த கிராமத்து பாட்டிகள் நல்ல உதாரணம்.

இது போல் இலக்குகளை உருவாக்கிக்கொள்வதால் எந்நேரமும் நமக்குள் ஒரு தேடல் இருக்கும். ஒரு புகைப்பட கலைஞருக்கு இந்த தேடல் மிக அவசியம்.

6. அப்டேட்டாக இருங்கள் :

எந்த துறையாக இருந்தாலும் சரி, அந்த துறையில் வெற்றிபெற வேண்டுமென்றால் அந்தத் துறையை பற்றிய அடிப்படை விஷயங்களை அறிந்திருக்க வேண்டும். உலகளவில் போட்டோகிராபி துறையில் அனுதினம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. போட்டோகிராபி உலகில் என நடந்துக்  கொண்டிருக்கிறது என்பதில் அப்டேட்டாக இருங்கள். இதற்கு போட்டோகிராபி சம்பந்தமான பத்திரிகைகளும், ஆன்லைன் தளங்களும் உதவிகரமாக  இருக்கும்.

7. கேள்வி கேளுங்கள்  :

தமிழக கடற்கரை படம் : க.விக்னேஸ்வரன்

புதிதாக கேமரா வாங்கிய அனைவரின் மனதிலும் கேமரா பற்றியும் போட்டோகிராபி பற்றியும் பல கேள்விகள் இருக்கும். புகைப்பட துறையில் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் உங்களின் சிறு சந்தேகங்களிற்கு கூட விடை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். பல ஆன்லைன் தளங்களில் போட்டோகிராபி குறித்த சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வசதியுள்ளது. புகைப்படத்துறை சம்பந்தமான உங்களின் சந்தேகத்தை இந்த தளங்களில் பதிவேற்றினால், அனுபவமுள்ள புகைப்பட நிபுணர்களால் உங்கள் சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும்.

சில ஆன்லைன் தளங்கள் :

https://learn.sudhirshivaram.com/forum/

http://www.jjmehta.com/forum/

YouTubeல் போட்டோகிராபி சம்பந்தமான பல்லாயிரக் கணக்கில் வீடியோக்கள் உள்ளன. அவைகளின் மூலம் ஒரு முழு புகைப்பட கலைஞராகவே ஆகிவிடலாம்.

மேலும்  flickr.com, 500px.com  போன்ற தளங்களில் உலகளவில் சிறந்த, அனுபவமிக்க புகைப்பட கலைஞர்களின் புகைப்படங்களை காணலாம். அவர்களுடன் உரையாடலாம். இந்த இரண்டு இணையதளங்களும் புகைப்பட கலைஞர்களுக்கான பிரத்யேக தளங்கள் எனலாம். நீங்கள் போட்டோகிராபி பயில ஆரம்பிக்கும் பொழுதே இந்த இணையதளங்களில் இணைவது உங்கள் போட்டோகிராபி திறமைக்கு இன்னும் பலம் சேர்க்கும்.

8. எடிட்டிங்கில் கவனம் செலுத்துங்கள் :

புகைப்படக் கலை படம் : க.விக்னேஸ்வரன்

டிஜிட்டல் போட்டோகிராபியின் மிகப்பெரிய பலம், அது கேமராவில் படம் எடுப்பதுடன் மட்டும் முடிவுபெறுவதில்லை என்பதுதான் . படங்களை  சிறந்த முறையில் எடிட்டிங் செய்யும் திறமை என்பது மிக  அவசியமான ஒன்றாகும். சின்ன அளவில் Brightness மற்றும் Contrast அளவுகளை மாற்றுவது புகைப்படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தக்கூடும். படத்தின் உண்மைத்தன்மை பாதிப்படையாமல் எடிட் செய்வதில்தான் வெற்றியின் சூட்சமம் ஒளிந்துள்ளது. புகைப்படம் எடுக்க செலவிடும் நேரத்தை போல எடிட்டிங்கிற்கும் நேரம் செலவிடுவது மிக அவசியம். 

உதாரணத்திற்கு இந்த காணொளிகளை காணுங்கள் :

 

 

 

 

 

 

ரோம் நகரம் ஒரே நாளில் கட்டி முடிக்கப்படவில்லை என்றொரு பழமொழி உண்டு. மகத்தான விஷயங்கள் ஒரே நாளில் கைகூடுவதில்லை. தொடர்ந்து பயிற்சியும், முயற்சியும் மேற்கொள்ளுங்கள், விரைவில் சிறந்த புகைப்படங்களை உருவாக்குபவராக மாறிவிடுவீர்கள்.​

 வாழ்த்துகள்!!

எழுத்தும் படங்களும் : க.விக்னேஸ்வரன்,

(மாணவப் பத்திரிகையாளர்)

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!