வெளியிடப்பட்ட நேரம்: 13:26 (02/02/2017)

கடைசி தொடர்பு:15:31 (03/02/2017)

மரங்களின் இடுக்குகளில் முன்னோர்களைப் பாதுகாக்கும் டோராஜாக்கள்..!

 

டோராஜா

ஆச்சர்ய மம்மிக்கள் புகைப்படங்களுக்கு க்ளிக் செய்யவும்

மிக நீண்ட கடல் பறப்பில் அது ஒரு குட்டி தீவு, அந்த தீவின் மலைகளில் பல பிரமாண்ட பாறைகள், அந்த பாறைகளில் சதுர வடிவில் பல பொந்துகள். பாறைகளில் மட்டுமல்ல, அங்குள்ள பழமையான மரங்களிலும் இப்படியான பொந்துகள். பறவைகளோ, விலங்குகளோ, மனிதர்களோ எளிதில் நெருங்க முடியாத வகையில், அந்த பொந்துகள் உருவாக்கப்பட என்ன காரணம் தெரியுமா?

இந்தோனேஷியா தீவுகளில் ஒன்றான தென் சுலாவெசி மாகாணத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும், டோராஜா இனத்தவர்கள், அவர்கள் இனத்தில் இறந்தவர்களின் உடல்களை இந்த பொந்துகளில் தான் பாதுகாத்து வருகின்றனர். டோராஜா மக்களுக்கும், இந்த பொந்துகளுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது.

தங்களின் இறப்பிற்கு பிறகும் வாழ்க்கை இருக்கிறது என்பதை டோராஜா இன மக்கள் உறுதியாக நம்புகின்றனர். எனவே தங்கள் இனத்தில் ஒருவர் இறந்துவிட்டால், அவர்களை அடக்கம் செய்வதற்கு, முதலில் பாறைகளை தேர்வு செய்வார்கள். இறந்தவர்களின் உடல் அளவிற்கேற்ப சதுரவடிவில் பாறைகளை துளையிடுவார்கள். பின் இறந்த உடலை துணிகளை கொண்டு முழுவதுமாக சுற்றி, உருவாக்கிய பொந்துகளில் உடலை பாதுகாப்பாக வைப்பார்கள். பெரியவர்களுக்கு மட்டுமே இந்த நடைமுறை. இறந்தது  கைக்குழந்தையாக இருந்தால், மரத்தில் சதுர வடிவில் பொந்து ஏற்படுத்தி குழந்தை உடலை அதில் அடக்கம் செய்வார்கள்.

பண்டைய எகிப்து நாகரிகத்தில் இறந்தவர்கள் மறுஉலகிற்கு செல்கின்றனர், அவர்களுக்கு அவ்வுலகில் வாழ உடல் தேவை என்பதால் இறந்தவர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தது. எனவே இறந்தவர்களின் சடலங்கள் பதனிடப்பட்டு பாதுகாக்கப்பட்டது. மனிதர்களின் சடலங்கள் மட்டுமல்ல முதலை, பூனை போன்ற விலங்குகளின் சடலங்களும் பாதுகாக்கப்பட்டன. ஆனால் டோராஜா மக்களின் நம்பிக்கை சற்று வேறுபடுகிறது. 

டோராஜா

ஆச்சர்ய மம்மிக்கள் புகைப்படங்களுக்கு க்ளிக் செய்யவும்

பாறைகளிலும், மரங்களிலும் அடக்கம் செய்யப்பட்ட உடல்களை, மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் வெளியே எடுக்கின்றனர். அவ்வாறு எடுக்கப்பட்டவர்கள் மீண்டும் உயிருடம் வந்திருப்பதாக உணர்கின்றனர். எனவே, அந்த உடல்களை நீரால் நன்கு சுத்தம் செய்து, தேவைப்பட்டால் சுண்ணாம்பு, பெயிட்களை கொண்டு அவர்களுக்கு வர்ணம் பூசி, அழகான முறையில் அவர்களுக்கு ஒப்பனை செய்து, புத்தாடைகளை உருத்திவிட்டு, நறுமணப்பொருட்களை கொண்டு அவர்களை திருவிழாவிற்கு தயார்படுத்துவார்கள்.

இதுமட்டுமல்லாது, இறந்தவர்களின் நிறைவடையாத ஆசைகளை இந்த நாளில் தீர்த்து வைப்பார்கள். அந்த உடல்களுடன் பேசுவார்கள், கட்டி அழுவார்கள். சடங்குகள் முடிந்த பிறகு, மீண்டும் உடலை, துணிகளைக் கொண்டு சுற்றி, அந்தந்த பொந்துகளில் வைத்துவிடுவார்கள். இவ்வாறு இறந்தவர்களுக்கு, அவர்களின் இறப்பிற்கு பின் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை செய்துவருகிறார்கள்.

இச்செயல்கள் சிலருக்கு, மூடநம்பிக்கையா தெரியலாம், சிலருக்கு தவறாக தோன்றலாம், சிலருக்கு அருவறுப்பு தரலாம். ஆனால் டோராஜா மக்களுக்கு அவ்வாறு அல்ல. சுயநலமே பிரதாணமாக கொண்ட இந்த உலகில், தாங்கள் அளவு கடந்து நேசித்த உறுவுகளின் ஆசைகளை, நிறைவேற்றுகிறோம் என்கிற மகிழ்ச்சியையும், மனதிருப்தியை இம்மக்கள் பெறுகிறார்கள். 

டோராஜா மக்கள், கம்போடியா வம்சத்தை சேர்ந்தவர்கள் என்று ஆய்வுகள் சொல்கிறது. இந்தோனேசியா மக்களுக்கே இப்படி ஒரு இன குழு இருப்பது, பல வருடங்களாக தெரியாமல் இருந்தது. 1909களில் இந்தோனேசியாவிற்கு டச்சிக்காரர்களின் வருகைக்கு பிறகே இந்த இனம் உலகிற்கு தெரிய துவங்கியது. இவர்கள் வாழும் வீடு, படகு அமைப்பு கொண்டது. திருமணங்கள் அற்புத சடங்குகள் கொண்டது. கலை உருவாக்கங்களில் டோராஜா இன மக்கள்  தனித்தன்மை கொண்டவர்கள். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தோனேசியா அரசு, சுலாவெசி மாகாணத்தின் குறிப்பிட்ட சில மலைப்பகுதிகளை சுற்றுலா தளமாக அறிவித்தது. இன்று பல கலாச்சார மாற்றங்களை இந்த இனமக்கள் சந்தித்து வருகின்றனர். இருப்பினும் கூட தங்களின் பாரம்பரியங்களை இழந்துவிடக்கூடாது என்பதற்காக டோராஜா மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

-ஜோ.கார்த்திக்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்