Published:Updated:

”சென்னையின் தேம்ஸ்” கூவம் நதியோடு ஒரு பயணம்..!

”சென்னையின் தேம்ஸ்” கூவம் நதியோடு ஒரு  பயணம்..!
”சென்னையின் தேம்ஸ்” கூவம் நதியோடு ஒரு பயணம்..!

சென்னை என்றாலே அனைவரின் கண்முன்னர் தெரிவது கூவம் எனும் கறுத்துப்போன ஆறுதான். கூவம் என்றாலே துர்நாற்றம், அழுக்கு என மனதில் நிலையாக ஒட்டிக்கொண்டு விட்டது. நாமும் இன்றைய கூவத்தை கடக்கும்போது மூக்கை மூடித்தான் கடந்துபோக வேண்டி இருக்கிறது. இன்றைய கூவத்தின் நிலையும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் இந்த துர்நாற்றம் வீசும் கூவம் நதிதான் நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களால் 'சென்னை தேம்ஸ்' என்ற வார்த்தையால் உச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம், லண்டனில் ஓடும் அழகிய தேம்ஸ் நதி போலவே இந்த கூவம் இருந்துள்ளது. 1950-க்கு முன்பு வரைக்கும் படகுப் போக்குவரத்துக்காகவும், மக்கள் மீன் பிடித்து சுவைக்கும் இடமாகவும், ஆங்கிலேயர்களின் சுற்றுலாத் தலமாகவும் இருந்துள்ளது. கூவம் நதியின் அழகில் மனதைப் பறிகொடுத்த ஆங்கிலேயர்கள் பலர். ஆனால் இன்றைய நிலையில் தனக்கே உரித்தான தனி சிறப்பம்சத்தையும், தனி அழகையும் இழந்து கழிவுகள் செல்லும் நீரோடையாக காட்சியளிக்கிறது. கம்பராமாயணத்தில் 'கூவத்தின் சிறு புனலைக் கடலயிர்த்த தொவ்வாதோ" என்று கூவத்தின் சிறப்பினை பற்றி கம்பர் பாடலே பாடியுள்ளார். இன்று கூவத்தின் ஓரமாக நிற்கவே கூச்சப்படும் நிலை. அரசாங்கமும் அண்ணா ஆட்சிக்காலத்திலிருந்து கூவம் சீரமைப்பு திட்டத்துக்காக கோடி கோடியாக நிதி ஒதுக்கி வந்திருக்கிறது. ஒதுக்கப்பட்ட நிதிகள் என்னவானது என்ற கேள்விக்குத்தான் இங்கு பதில் இல்லை. கூவம் பக்கத்திலே நிற்கவே கூச்சப்படும் இந்த காலத்தில் ஒன்பது நாட்களாக கூவத்தோடு நடைப்பயணம் மேற்கொண்டு உறவாடி இருக்கிறார்கள், சாரா குழுவினர். கூவம் நதியோடு பயணம் மேற்கொண்ட சாரா அவர்களின் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

"என்னுடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை அடுத்துள்ள நாசரேத். விடுமுறை நாட்களில் தூத்துக்குடியை அடுத்த ஏரலில் உள்ள எங்கள் தாத்தா வீட்டுக்கு குடும்பத்துடன் போய் வருவது வழக்கம். அந்த ஊரை ஒட்டி செல்லும் தாமிரபரணி ஆற்றில் குளிக்க, துவைக்க, குடிக்க தண்ணீரை எடுக்க என ஒரு நாளைக்கு பத்து தடவைக்கு மேல் ஆற்றுக்குச் செல்வேன். அப்போதிருந்த அனுபவம், எனக்கு சிறிய வயதில் இருந்தே நதிகளின் மீதும், இயற்கையின் மீதும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. இயற்கை குறித்த எனது முதல் நடைபயணமே இமயமலைதான். பாரம்பர்யங்களையும், அதைத் தேடிய பயணங்களையும் மேற்கொண்டு வருகிறேன். பயணங்களில் ஏறக்குறைய பல கிராமங்களுக்குச் சென்று மக்களின் எண்ணங்களைப் பற்றியும், மக்களுக்கு இயற்கை மீதான ஆர்வத்தை பற்றியும் அதிகமாக தெரிந்து கொண்டேன். என் நண்பர் மாதவன் ஒருநாள் நதியோடு பயணம் செய்யும் திட்டத்தை ஆரம்பிக்கலாமே என ஆலோசனை சொன்னார். 

நதி என்றவுடன் எங்களுக்கு முதலில் ஞாபகம் வந்தது கூவம் தான். உடனே பயணத்தை ஆரம்பிக்க ஒரு குழு அமைத்தோம். மொத்தம் ஏழு நாட்கள் பயணம் செய்யலாம் என முடிவெடுத்தோம். ஆனால் பயண தூரம்  மொத்தம் 102 கிலோ மீட்டராக இருப்பதால் மொத்தம் ஏழு நாட்களாக இருந்த பயணத்தை ஒன்பது நாட்களாக மாற்றினோம்.. இந்தத் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், கூவம் கிராமத்துக்கு அருகிலுள்ள கேசவரத்திலிருந்து ஆரம்பித்தோம். இந்த பயணம் ஆரம்பித்து மொத்தம் 25 கி.மீ தூரத்துக்கு தண்ணீரையே கண்ணால் பார்க்க முடியவில்லை. அவ்வளவும் வறண்டு போன பாலை நிலங்களாக காட்சியளித்தன. பயணம் ஆரம்பித்து முதல் ஆற்றின் ஓரமாக உள்ள விவசாயிகளிடம் அவர்களின் கருத்துகளை கேட்டுக்கொண்டே சென்றோம்.  "முன்னர் ஆற்றிலுள்ள நீரை பயன்படுத்தி விவசாயம் செய்தோம். ஆனால் இப்போது விவசாயத்துக்கு வழியில்லை ஆழ்துளைக் கிணற்றை மட்டுமே நம்பியிருக்கிறோம்" என விவசாயிகளிடம் இருந்து பதில் வந்தது.

பயணத்தில் 7-ம் நாள் திருவேற்காட்டை அடைந்தபோதுதான் கூவத்தின் நிறம் மாறியதைக் கண்டோம். அங்கு முழுவதும் குப்பை கூளங்களால் ஆறானது ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. அந்த குப்பைக் கூளங்களும், கழிவு நீரும் எங்கு இருந்து வருகிறது எனக் கண்டறியப் புறப்பட்டோம். ஒவ்வொரு தொழிற்சாலைகளையும் ஆராய்ந்தபடியே சென்றோம். அந்த ஆய்வில் முழுவதும் அடுக்கு மாடி கட்டடங்களில் இருந்து வெளியேரும் கழிவுகள் மூலமாகத்தான் நதி அதிகமாக பாழாகியிருந்தது தெரிந்தது. லாரிகளும் தன் பங்குக்கு வரிசையில் கழிவுநீரை ஆற்றுக்குள் கொட்டிக் கொண்டிருந்தது. தொழிற்சாலைகளை விட அடுக்கு மாடிகுடியிருப்புக்கள்தான் கூவத்தை பாழாக்குவதில் முக்கியமாக தனது கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறது. ஒன்பதாம் நாள் கூவம் நதி முடியும் நேப்பியர் பகுதியை அடைந்தோம். அத்துடன் எங்கள் பயணமும் முடிவுக்கு வந்தது. இந்தப் பயணம் எனக்கு சொல்லிக்கொடுத்த பாடம் முயற்சி செய்தால் கூவத்தை முழுமையாக சுத்தம் செய்து விடலாம் என்பதுதான்.

கூவம் நதி என்றால் சாக்கடை என்ற எண்ணம்தான் பலருக்கும் இருக்கிறது. இந்த எண்ணமானது தவறான கருத்து என்றே எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் கூவம் ஆற்றில் இறங்கி நடந்த போது நாங்கள் வழக்கமாக அணியும் காலணிகளை மட்டுமே அணிந்திருந்தோம். இதுதவிர நடைப்பயணத்தில் நான் இடுப்பளவு சகதிக்குள் மாட்டிக்கொண்டபோது எனது குழுவினர் என்னை மீட்டனர். அவ்வளவு சகதிக்குள் விழுந்தும் எனக்கு எந்த விதமான உடல்நலக்குறைவும் ஏற்படவில்லை. நதியைத் தேடி சென்ற பயணத்தில் நாங்கள் காசுகொடுத்து மினரல் வாட்டரை வாங்கி அருந்தவில்லை. கூவம் நதிக்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களிடம் தண்ணீர் வாங்கி அருந்தினோம். என் வாழ்க்கையில் இந்த பயணம் மறக்க முடியாத ஒரு பயணமாக அமைந்தது. பயணம் செய்த ஒன்பது நாட்களும் எனக்கு ஒரு பாடமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து கூவம் பற்றிய விழிப்பு உணர்வினை ஏற்படுத்த விழா எடுத்து கொண்டாட முடிவு செய்தோம். ஆனால் சில காரணங்களால் விழா தடைபட்டு விட்டது. இருந்தாலும் மீண்டும் முயற்சித்துக்கொண்டே இருக்கிறோம், கட்டாயம் விழா நடத்துவோம். மீண்டும் அடுத்த பயணம், அழிவின் விளிம்பில் உள்ள நதியினை நோக்கியதாக இருக்கும்" என்றார்.

கூவத்துக்காக ஆண்ட, ஆளும் அரசுகளும் கூவம் சீரமைப்பு எனும் திட்டத்துக்காக நிதிகள் ஒதுக்கிக்கொண்டே இருக்கிறது. ஆனால், கூவத்தின் மீது விழுந்த 'கறை' மட்டும் இன்னும் அழியவில்லை. விரைந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- துரை.நாகராஜன்