‛ஏதாவது ஒரு குரலைக் கேட்க வேண்டும் போலிருந்தது...’ - ஊர்சுற்றியின் அனுபவம் | Story of Travellers

வெளியிடப்பட்ட நேரம்: 12:32 (05/02/2017)

கடைசி தொடர்பு:12:31 (05/02/2017)

‛ஏதாவது ஒரு குரலைக் கேட்க வேண்டும் போலிருந்தது...’ - ஊர்சுற்றியின் அனுபவம்

ஓர் ஊர்சுற்றிக் கதை: 

பனி பொழிந்து கொண்டிருந்தது. அதையும் ஊடுருவி சில வண்டிகளின் விளக்கு வெளிச்சம். என் கருப்பு காரின் ஜன்னல்களை முழுமையாக மூடித் தான் வைத்திருந்தேன். இருந்தும், மிக மெல்லிய சந்துகளின் வழி, உள் ஊடுருவிய அந்த திருட்டுக் காற்று எனக்குப் பெரும் குளிர் கொடுத்தது. இதோடு 133வது தடவையாக அந்தப் பாடல் ஸ்பீக்கரில் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த ஆடியோ பிளேயரில் சிடி மட்டும் தான் போட முடியும். வண்டியில் வேறு சிடியும் இல்லை. இந்த சிடியில் மொத்தம் 11 பாடல்கள். அதுவே தான் திரும்ப, திரும்ப பாடிக் கொண்டிருந்தது. ஆனால், ஏனோ... எனக்கு அந்தப் பாடல்கள் போரடிக்கவில்லை. என் ஆடியோ பிளேயருக்கு அது பிடிக்கவில்லை. சிடியை தேய்த்துவிட்டது. பாடகரின் குரல் கொஞ்சம் விகாரமாகியிருந்தது.

ஊர்சுற்றி

பல நாள் உறக்கமின்மை அதன் எதிர்வினையைக் காட்டத் தொடங்கியிருந்தது. இனி சில நொடிகளேனும் கூட இதை ஓட்ட முடியாது என்ற நிலையை எட்டினேன். 

என் வண்டியை ஓரம் கட்ட இடப் பக்க இன்டிகேட்டரைப் போட்டேன். அது பனிப்புகைக்கு சிவப்பு வண்ணத்தைக் கொடுத்தது. புரியாத மொழியில் நீல வண்ணத்தில் ஏதோ எழுதியிருந்தது. தரையில் விரித்து வைக்கப்பட்டிருந்த அந்த இரும்பு போர்டுக்கு அருகில் "Hot Tee - Rs.8" என்று கோணல் மாணலான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு பேப்பர் தொங்கிக் கொண்டிருந்தது. வண்டியை விட்டு இறங்கி, நெருங்கிப் போனேன்.

பாய்லரில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. பாய்லரின் தலையில் அழுக்கேறிய வெள்ளைத் துணி கட்டப்பட்டிருந்தது. சூடு கையில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக இருக்கலாம். அது பார்க்க, ஒரு பஞ்சாபியின் தலையில் இருக்கும் டர்பன் போலிருந்தது. பஞ்சாபிகளுக்கு மட்டும் அத்தனை அடர்த்தியாக முடியும், மீசையும், தாடியும் எப்படி வளர்கிறது என்ற சந்தேகமும் சம்பந்தமில்லாமல் அந்த சமயம் எனக்குத் தோன்றியது. 

கடையில் யாருமேயில்லை. கொஞ்சம் காலை எக்கி, தலையை நீட்டி எட்டிப் பார்த்தேன். நீல நிற பிளாஸ்டிக் சேர் ஒன்று, சில நிமிடங்களுக்கு முன்பு தான் அதிலிருந்து ஒருவர் எழுந்து போனதை நினைத்து ஆசுவாசம் அடைந்துக் கொண்டிருந்தது. கடையின் முன்பகுதியை நிரப்பியிருந்த கண்ணாடி பாட்டில்கள் களைப்பாகக் காணப்பட்டன. அதிலிருந்த சில பிஸ்கெட்களும், கேக்குகளும் மரணத்தின் தருவாயில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தன. அதில் சில மரணமடைந்தும் இருந்தன.

டீ குடிப்பதோ, பிஸ்கெட் சாப்பிடுவதோ என் நோக்கமல்ல. டீ குடிக்கும் பழக்கமும் எனக்கில்லை. ஆனால், தானே மூடிக் கொள்ளும் என் கண்களை சில நிமிடங்களேனும் திறந்து வைக்க நான் யாருடனாவது பேசியாக வேண்டும். நான் எதனோடாவது பேசியிருக்கலாம் தான். நானும் பேசினேன் தான். ஆனால், எனக்கு என்னுடன் யாராவது பேச வேண்டும் போலிருந்தது. ஏதாவது ஒரு குரலை நான் கேட்க வேண்டும். அந்த விகாரமாகிப் போயிருந்த பாடகரின் குரல் மட்டுமே என் தலையில் ஓடிக் கொண்டிருந்தது. வேறு குரல் வேண்டும். என் காதுகளின் வழி புகும் அந்தக் குரல் என் தூக்க கலக்கத்தைப் போக்க வேண்டும். 

ஊர்சுற்றிஅந்தக் கடையில் யாருமில்லை. ஆனால், பாய்லரில் இருந்து வந்துக் கொண்டிருந்த புகை, சுற்றத்தில் யாரோ இருக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்த்தியது. அடிக்கும் குளிருக்கு பாய்லரின் ஆவி வெதுவெதுப்பாக இருந்தது. நின்று கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் நகர்ந்தன... அல்ல... ஒரு நிமிடத்திற்குள் இருக்கும் சில நொடிகள் நகர்ந்தன.

திடீரென , கடையின் பின்பக்கத்தில் இருந்து வேக நடையில் அவன், என் முன் வந்து நின்றான். அவன் தலைக் குளித்து பல நாட்களாகியிருக்கும் என்று நினைக்கிறேன். செம்பட்டை முடி, சுருள் கொண்டிருந்தது. முகம் கடுமையாக இருந்தது. அரும்பு மீசை தான். ஆனால், அதையே அவன் முறுக்கிவிட்டிருந்தான். "என்ன வேண்டும்?" என்பதை பார்வையிலேயே கேட்டான். ஏதாவது குரலைக் கேட்க வேண்டுமென்று இருந்த எனக்கு, அது கொஞ்சம் ஏமாற்றத்தைக் கொடுத்தது. 

அவன் தலை தாண்டி தெரிந்த மஞ்சள் நிற பிளாஸ்டிக் பார்டர் கொண்ட சிலேட்டில், "Hat Baatam Milk"" என்று எழுதியிருந்தது. 

"ஒரு பாதாம் பால்..." நீண்ட நேர அமைதிக்குப் பின் பேசியதால், என் குரல் எனக்கே புதியதாக இருந்தது. 

பதில் ஏதும் சொல்லவில்லை அவன் . என்னை அவ்வளவாக கவனிக்கவும் இல்லை. கவரில் தொங்கிக் கொண்டிருந்த அந்த பேப்பர் கப்பை எடுத்தான். எனக்கு கண்ணாடி டம்ளரில் வேண்டும் என்று சொல்ல நினைத்தேன். ஆனால், சொல்லவில்லை. சில அடிகள் நடந்து, சில நொடிகள் கடந்து என் வண்டியைப் பூட்டிவிட்டு திரும்பினேன். அதற்குள் பாதாம் பால் தயாராக இருந்தது.

வட்டங்களுக்குள் வட்டங்களாக நிறைந்திருந்த அந்த பாட்டிலின் மூடியில், சில வட்டங்களை மறைத்தபடி அந்த பேப்பர் கப் உட்கார்ந்திருந்தது. 

சூடே இல்லை தான். ஆனால், சுவையாக இருந்தது. எப்படியும் பதில் சொல்ல மாட்டான் என்பதால் "எவ்வளவு?" என்று சைகையில் கேட்டேன். "பத்து" என்று விரல்களைக் காட்டினான்.

20 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன். அவன் கட்டைவிரலில் தடினமான கட்டு கட்டியிருந்தான். அதன் உச்சியில் மஞ்சள் நிறமாய் இருந்தது. அது குறித்து அவனிடம் கேட்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், எதுவும் கேட்கவில்லை. 

காசை வாங்கிக் கொண்டு சில்லறையைக் கொடுத்தான். நான் சில நிமிடங்கள் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். தன் சிவப்பு நிற ஸ்வெட்டரைக் கழற்றினான். உள்ளே காவி நிற பனியன் அணிந்திருந்தான். அதை அந்த நீல சேரின் சாய்வில் தொங்கவிட்டுவிட்டு, கையில் கருப்பு நிற உறையிட்ட சின்ன பைபிளை எடுத்து படிக்கத் தொடங்கினான்.

அவனைப் பற்றிய நினைப்புடன் வண்டியில் ஏறினேன். வண்டியைக் கிளப்பினேன். அந்த பாடகரின் குரல் பாடத் தொடங்கியது. பனி அதிகமாகியிருந்தது. கொஞ்சம் அசந்தேன். எதிரே வந்த லாரியின் ஹாரன் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். வேகமாக லாரியை நோக்கி போய்க் கொண்டிருந்த என் வண்டியை இடது பக்கமாக திருப்பி, ரோட்டின் ஓரத்தில் நிறுத்தினேன். சில நொடி பெரு மூச்சிற்குப் பிறகு, அப்படியே தூங்கிப் போனேன். 

             - ஊர் சுற்றி.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்