யமஹா R15 V3.0 பைக்கில் என்ன ஸ்பெஷல்? | A close look on Yamaha R15 v3.0

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (07/02/2017)

கடைசி தொடர்பு:17:40 (07/02/2017)

யமஹா R15 V3.0 பைக்கில் என்ன ஸ்பெஷல்?

தமிழ் படங்களில் மட்டும்தான் பார்ட் - 1,2,3 வரவேண்டுமா? பைக்கிலும் வரலாம் என்பதற்கான உதாரணம்தான் இது! பைக் ஆர்வலர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட யமஹாவின் R15 V3.0, இந்தோனேஷியாவில் சமீபத்தில் அறிமுகமாகியுள்ளது. பழைய பைக்குடன் ஒப்பிடும்போது, டூயல் டோன் கலர்கள் உடனான முற்றிலும் புதிய டிஸைன் மற்றும் பல அம்சங்களை முதன்முறையாக வழங்கியுள்ளது யமஹா. YZF-R6 பைக்கை அடிப்படையாகக் கொண்டு, R15 V3.0 பைக்கை வடிவமைத்திருப்பதாக யமஹா கூறினாலும், ஹோண்டாவின் CBR 250RR பைக்கின் சாயல் இதில் இருப்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். புதிய LED ஹெட்லைட்களை, அதன் இடையே இருக்கும் Air Vent அழகானதாகக் காட்டுகிறது. ஃபுல் ஃபேரிங்கும் முன்பைவிட நளினமாகக் காட்சியளிக்கிறது.

 

யமஹா R15 V3.0

 

R15 V2.0 பைக்கில் 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருந்த நிலையில், R15 V3.0 பைக்கில் இருப்பதோ 11 லிட்டர் பெட்ரோல் டேங்க்தான்! அதேபோல R15 V2.0 பைக்கில் அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இருந்த நிலையில், R15 V3.0 பைக்கில் இருப்பதோ முழுக்க டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்! R15 V2.0 பைக்கைவிட 30மிமீ கூடுதல் நீளம், 55மிமீ கூடுதல் அகலம், 65மிமீ கூடுதல் உயரம் எனப் புதிய பைக் வளர்ந்திருந்தாலும், R15 V3.0-ன் வீல்பேஸ் முன்பைவிட 20 மி.மீ குறைந்துள்ளது. எனவே பைக்கின் கையாளுமையும், நிலைத்தன்மையும் முன்பைவிட ரேஸ் டிராக்கில் அசத்தலாக இருக்கும் என நம்பலாம். சீட் உயரமும் 800மிமீ-ல் இருந்து 815மிமீ ஆக உயர்ந்திருக்கிறது. எனவே முன்பைவிட ரைடிங் பொசிஷன் ஸ்போர்ட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இப்படி டெக்னிக்கலாக பைக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், R15 V2.0 பைக்கைவிட வெறும் 1 கிலோ மட்டுமே எடை அதிகமானதாக இருக்கிறது யமஹா R15 V3.0 (137 கிலோ).

 

யமஹா R15 V3.0

 

R15 பைக்குக்கே உரித்தான DeltaBox ஃப்ரேமில், புதிய 155சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது முன்பைவிட அதிகமான 19.3bhp பவர் மற்றும் 1.47kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. ஃப்யூல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், Variable Valve Actuation தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. எனவே பழைய பைக்கைவிட புதிய R15-ன் டாப் எண்ட் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கும் என்கிறது யமஹா. மேலும் R15 V2.0 பைக்கின் 149சிசி இன்ஜினைவிட, R15 V3.0 பைக்கின் 155சிசி இன்ஜினின் கம்ப்ரஸன் ரேஷியோ அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது. முன்பக்கம் 100/80-17 மற்றும் பின்பக்கம் 140/70-17 என்றளவில் அகலமான டயர்களைக் கொண்டிருக்கும் R15 V3.0, ஸ்லிப்பர் க்ளட்ச் அமைப்பையும் கொண்டிருக்கிறது. எனவே அதிக வேகத்திலும் சிக்கலின்றி கியர் மாற்றவும், குறைக்கவும் முடியும். முன்பக்கம் USD ஃபோர்க் - பின்பக்கம் மோனோஷாக் என சஸ்பென்ஷன் ஏரியாவில் செமையாக ஸ்கோர் செய்திருக்கிறது யமஹா R15 V3.0. இந்த 2017-ம் ஆண்டை FZ25 பைக் வாயிலாக அற்புதமாகத் துவக்கியிருக்கும் யமஹா, கூடிய விரைவில் R15 V3.0 பைக்கையும் களமிறக்கும் எனலாம்! 

யமஹா R15 V3.0

 - ராகுல் சிவகுரு

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்