கேரள மீனவர்களுக்கு உதவும் இ-சமுத்ரா ஆப்! #E-Samudra

மீனவர்கள்

மீனவர்களின் வாழ்வாதாரம் எப்போதும் ஆபத்து நிறைந்தவை. உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் இது மட்டும் மாறாது. இயற்கை சீற்றங்களாலும், மனிதனின் பேராசைகளாலும் என இவர்களின் ஆபத்துக்கு ஆயிரம் காரணங்கள். ஆனால், பலி ஆவது என்னவோ அப்பாவி மீனவர்கள் தான். இந்த மீனவர்களின் பிரச்னையை தொழில்நுட்பம் கொண்டு தீர்க்க முயன்றிருக்கிறது நமது அண்டை மாநிலம் ஆன கேரளா.

மீனவர்களுக்கென பிரத்யேகமாக ஒரு ஆண்ட்ராய்டு ஆப்-பை தயாரித்திருக்கிறது எர்ணாகுளம் மாவட்ட அரசு. இதை “நிகொனிக்ஸ் சாஃப்ட்வேர் சொல்யூஷன்” மற்றும் “மீன்வளத்துறையினர்” இணைந்து வடிவமைத்துள்ளனர்.மீனவர்கள் இந்த மொபைல் ஆப்-பை பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம்,தட்ப வெப்ப நிலைகள்,கடல் அலைகளின் வேகம்,மீன் பிடிக்க ஏதுவான பகுதிகள் என அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். மீனவர்கள் கடலில் மாநில எல்லைகளை அறியாமல் கடந்திடும் போது எச்சரிக்கை விடுப்பதோடு, கூகுள் வரைபடம் மூலம் கடலில் 35 மைல்கள் வரை தெளிவான வரைபடத்தை காண்பிக்கும்.இதில் “SOS” பட்டன் பொருத்தப்பட்டுள்ளதால் கரையில் இருப்பவர்களுக்கு கடலில் இருப்பவரின் லொகேஷனும்,சிக்னல் இல்லாத இடத்திற்கு படகு பயணித்தால் கூட கரையில் இருப்பவரிடம் தொலைபேசியில் பேச இயலும்.மேலும் மீன் மார்க்கெட்டில் விலைப்பட்டியலும் இதில் பதிவேற்றம் செய்து வைக்கப்பட்டிருக்கும்.

எர்ணாகுளத்தின்,மாவட்ட செயலாளார் முகமது.Y.சஃபிருல்லா,,தொலைதொடர்பு துறையின் துணை இயக்குநர்,ரகுநந்தன் மற்றும் மீன்வளத்துறை இயக்குநர் மகேஷ் ஆகியோர் முன்னிலையில் சோதனை நடைபெற்றது.

இந்த ஆப்-பை முதலில் 50 மீனவர்களின் மொபைல் ஃபோன்களில் பதிவிறக்கம் செய்து சோதனை முழுதாக வெற்றி பெற்றபின் ஆப்-ஸ்டோரில் அனைவருக்கும் உபயோகமாகும்படி வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

முன்பு இதே போல் “மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி மையம்” ஒரு ஆப்-பை வடிவமைத்திருந்தது,அதில் வானிலை மாற்றம்,கடலின் வெப்பம் மற்றும் கடல் பாசி அதிகம் வளர்ந்த இடம் என அனைத்து தகவல்களையும் காண இயலும்,எனினும் அதைவிட இ-சமுத்ரா-வில் நிறையவே தேவையான மாற்றங்கள் உள்ளன.

இனியேனும் எல்லை தாண்டியதால் மீனவர் படுகொலை என்பது போன்ற செய்திகள் படிபடியாக குறையும் என நம்புவோம்.

- எஸ்.எம்.கோமதி

(மாணவ பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!