அமெரிக்க அதிபரின் ஆணாதிக்கத்துக்கு ஸ்வீடன் துணைப் பிரதமர் பதிலடி!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

மெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. தேர்தலில் போட்டியிட்டது தொடங்கி வென்றதுவரை நிறைய எதிர்ப்புகளை, சவால்களைச் சந்தித்து வெற்றிப் பெற்றவர். பதிவியேற்ற சில தினங்களிலேயே அமெரிக்காவில் வசிப்பவர்கள் குவைத்துக்கும், பாகிஸ்தான் உட்பட இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 5 நாடுகளுக்கு செல்ல விசா வழங்க தடை விதித்தார். அடுத்த அதிரடியாக, ஈரான், ஈராக், சிரியா, சூடான் உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளில் இருப்பவர்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்தார். ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு என இன்னொரு பரப்பரப்பை கிளப்பினார். சமீபத்தில் டிரம்ப் ஆண் அதிகாரிகள் சுற்றி  நிற்க கோப்புகளில் கையெழுத்திடும் புகைப்படம் வைரலாக பரவியது. வளரும் நாடுகளில் உள்ள பெண்களின் ஆரோக்கிய மேம்பாட்டிற்காக அமெரிக்கத் தன்னார்வ நிறுவனங்கள் அளிக்கும் நிதிக்குத் தடை விதிப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்ட புகைப்படம் அது. இப்படத்தை ஆண் அதிகாரிகள் பார்த்தபடி இருந்தனர். அதிலும் கருப்பின அதிகாரிகளும் இல்லை.

பெண்கள் சம்மந்தமான கோப்பில் கையெழுத்திடும் போது பெண் அதிகாரிகளிடம் விவாதிக்க வில்லை. தவிர, எந்த ஒரு பெண் அதிகாரியும் இல்லை. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பலரும் காட்டமான விமர்சனங்களை முன் வைத்தனர். ட்ரம்ப் இன வெறியர். ஆணாதிக்கம் நிறைந்தவர். இவரைச் சுற்றி எப்போதும் வெள்ளை நிற அதிகாரிகளே இருப்பர். அவர்களிடம் மட்டுமே சிரித்து பேசுவார். பெண்களுக்கு எதிரானவர் எனப் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

வளரும் நாடுகளின் பெண்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் ட்ரம்பில் செயலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்வீடன் துணை பிரதமர் இசபெல்லாவின் தனது டிவிட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தனது அலுவலக பெண் அதிகாரிகள் 7 பேர் புடை சூழ புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் பருவநிலை மாற்றத்திற்கான சட்டக் கோப்பில் கையெழுத்திடும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதில் ஒரு பெண் அதிகாரி கர்பிணி.

இச்சட்டம் உலகளவில் புவிவெப்பமயமாதலை 2045 ஆண்டுக்குள் கட்டுக்குள் கொண்டு வருவதற்கானது. இச்சட்டத்தில் இசபெல்லா கையெழுத்திட்டது பற்றி அளித்த பேட்டியில் ‘ஸ்வீடன் புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழும். ட்ரம்ப் புவிவெப்பமயமாதலைத் தடுப்பதற்கான பாரீஸ் ஒப்பந்ததிற்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். புவிவெப்பமயமாதலில் சீனா, அமெரிக்காவின் நடவடிக்கை குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்திற்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கும் நேரடித் தொடர்பு இல்லை. இருந்த போதும், இச்சட்டம் மூலம் பெண்களின் நிலை மேம்படுத்தப்படும். ஏற்றத்த தாழ்வு, சமத்துவம் மலரும்’ எனக் கூறியுள்ளார்.

இசபெல்லா

இதோடு, ஸ்வீடன் இணையதளத்தில் ‘ஸ்வீடன் பெண்களுக்கு சாதகமான அரசாங்கம். உலகில் ஸ்வீடன் பெண்ணியம் சார்ந்த முதல் நாடு. பெண்களுக்கான முன்னேறத்திலும், அதற்கான நலத்திட்டங்களை வகுத்து, நிதி ஒதுக்குவதிலும் முன்னோடியாகத் திகழ்கிறது. பெண்ணியம் சார்ந்த அரசாக திகழ்வதால் பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதில் தனித்துவம் பெற்றதாக விளங்குகிறது. பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களின் பங்கு மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக, வழிகாட்டியாக திகழ்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணாதிக்கத்திற்கு எதிரான பெண்களின் குரலாக ஒலித்திருக்கிறது ஸ்வீடன் நாட்டு துணைப் பிரதமரின் கருத்து!

-ஆர். ஜெயலெட்சுமி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!