Published:Updated:

‘இதனால்தான் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறேன்...!’ - கங்கை அமரன் #OPSVsSasikala

‘இதனால்தான் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறேன்...!’ - கங்கை அமரன் #OPSVsSasikala
‘இதனால்தான் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறேன்...!’ - கங்கை அமரன் #OPSVsSasikala

‘இதனால்தான் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறேன்...!’ - கங்கை அமரன் #OPSVsSasikala

முதல்வர் பதவிக்கான சண்டையில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்தாலும் ஆச்சர்யமில்லை. அந்த அளவுக்கு அ.தி.மு.க-வில் பதவிச் சண்டை போய்க்கொண்டிருக்கிறது. கடந்த 5-ம் தேதி  அ.தி.மு.க-வின் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட சசிகலா, முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளார் என்று தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்தச் சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் சசிகலா முதல்வராகப் பதவி ஏற்பதில் குழப்பம் நீடித்தது. இந்த நிலையில், திடீரென்று யாருமே எதிர்பார்க்காதபோது ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்ற முதல்வர் பன்னீர்செல்வம் அங்கே சுமார் 40 நிமிடங்கள் தியானத்தில் அமர்ந்தார். அதன்பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ்., ''சசிகலா நிர்பந்தித்த காரணத்தால்தான் நான், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன்'' என்றார். அதற்குப் பின் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தமிழக அரசியல் களத்தை அதிரச் செய்தது. அவருடைய பேச்சை மறுத்து... அவ்வப்போது சசிகலா பதிலடி கொடுத்தும் வருகிறார். இப்படி இரு தரப்புக்கான மோதல் வெளிப்படையாக அதிகரித்துள்ள நிலையில், அடுத்து முதல்வராக அமரப்போவது நீயா?... நானா? என்ற நிலை தமிழகத்தில் நீடித்துக்கொண்டிருக்கிறது.

''என் குடும்பத்தாரை மிரட்டினர்!''  

இந்தச் சூழ்நிலையில் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி, சசிகலாவுக்கு எதிராகவும் அவர் பேசிவருகிறார். இதுகுறித்து கங்கை அமரனிடம் பேசியபோது, '' 'உங்களுடைய நிலம் முதல்வருக்குப் பிடித்துள்ளது. எனவே, அந்த நிலத்தை எங்களுக்குக் கொடுத்துவிடுங்கள்' என்று சசிகலா தரப்பினர் என்னிடம் கேட்டனர். அதற்கு நான், 'நிலத்தை விற்கும் அளவுக்கு எனக்கு எந்தப் பிரச்னையும் தற்போது இல்லை' என்று கூறினேன். சில நாட்கள் கடந்த நிலையில், 'ஜெயா டி.வி'-யில் சேரும்படி எனக்கு அழைப்பு விடுத்தார்கள். அப்போது எனக்கு அரசியல் சாயம் வேண்டாம். பணியிலும் சேருவதற்கு எனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்தேன். இதனைத் தொடர்ந்து முதல்வரின் அலுவலகத்தில் இருந்து பேசியதாகச் சொன்னவர்கள், 'கங்கை அமரன் என்ன அவ்வளவு பெரிய ஆளா? பின்னி எடுத்துவோம்' என்று என் குடும்பத்தாரை மிரட்டினர். பின்னர், சசிகலாவை... நான் தொலைபேசியில் அழைத்து, 'முதல்வரின் அலுவலகத்தில் இருந்து இப்படி மிரட்டல் வந்துள்ளதே' என்று கேட்டேன். அதற்கு அவர், அதிர்ந்துபோனவராக... 'என்ன அண்ணா சொல்கிறீர்கள்' என்று கேட்டார். பிறகு, 'நான் பார்த்துக்கொள்கிறேன்' என்றார்.

சில நாட்கள் கடந்த நிலையில், மீண்டும் நிலத்தைக் கொடுக்கச் சொல்லி சசிகலா தரப்பினர் அழுத்தம் கொடுத்தார்கள். எனது குடும்பத்தினர் பயந்தார்கள். 'பணியில் சேர முடியாது' என்று சொன்னதற்கே... இவர்கள் இப்படி மிரட்டுகிறார்கள்; 'நிலத்தைக் கொடுக்க முடியாது' என்று பிடிவாதம் பிடித்தால்.... ஆபத்து வரும் என்று கருதி நிலத்தைக் கொடுத்துவிட்டேன். என்ன செய்வது... நிலத்தைக் கொடுத்துவிட்டு மீண்டும் அந்த அளவுக்கு சம்பாதித்து தற்போது உயர்ந்துள்ளேன். மக்களின் நலனுக்காக ஆட்சிக்கு வரவேண்டும் என்று இவர்கள் துடிக்கவில்லை மாறாக பணத்தைச் சம்பாதிக்கவே ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் நிலையை தற்போது நினைக்கும்போது மிக வருத்தமாக உள்ளது. உறவுகளைச் சந்திக்கவிடாமல் அவரைத் தனிமைச்சிறையில் வைத்திருந்திருந்தார்கள் என்பது அவருடைய அண்ணன் மகள் தீபா சொல்லியதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்களின் நலனை யோசிப்பவராக இருந்திருந்தால்... ஜெயலலிதாவின் மறைவை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு சென்றிருப்பார்கள்; அவர்களுடைய செல்வாக்கைப் பெறுவதற்கு முயற்சி செய்திருப்பார்கள்; அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது தரம் தாழ்ந்த வேலைகளைச் செய்துவருகிறார்கள்; தமிழக அரசியலை எண்ணி அயல் நாடுகளில் உள்ளவர்களும் சிரிக்கிறார்கள்.

''ஓ.பி.எஸ். செயல்பாடுகள் எனக்குப் பிடித்துள்ளன!'' 

'வர்தா' புயல், ஜல்லிக்கட்டு விவகாரம் போன்ற பிரச்னைகளில் ஓ.பி.எஸ் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் எனக்குப் பிடித்துள்ளன. சசிகலா மீண்டும் பணம் சம்பாதிக்கத்தான் வருகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவருக்கு, மக்கள் செல்வாக்கு இல்லை. என்னையும் மிரட்டிக் கையெழுத்து வாங்கினார்கள். அதேபோன்று பன்னீர்செல்வத்தையும் மிரட்டித்தான் கையெழுத்து வாங்கியுள்ளார்கள். அவரை ஒடுக்கிவைக்கப் பார்த்தார்கள். அவரும் பொறுமையாகத்தான் இருந்தார். எத்தனை நாள் பொறுமையாக இருப்பார். வெடித்துவிட்டார்'' என்றார்.

- கே.புவனேஸ்வரி

அடுத்த கட்டுரைக்கு