தன் பொம்மையுடன் ட்ரம்புக்கு எதிராகப் போராடும் 4 வயது சிறுமி! | 4 year old kid protest against trump with her dolls!

வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (10/02/2017)

கடைசி தொடர்பு:15:49 (10/02/2017)

தன் பொம்மையுடன் ட்ரம்புக்கு எதிராகப் போராடும் 4 வயது சிறுமி!

4 வயது சிறுமி

மெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் ஜனவரி 20-ம் நாள் பதவியேற்றார். அன்றுமுதலே அவரின் அதிரடி நடவடிக்கைகளால், கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்த ட்ரம்ப்பின் உத்தரவு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ட்ரம்ப்-க்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன. இந்த நிலையில் 4 வயது சிறுமி, யாருமே எதிர்பார்க்காத அளவில் தன் எதிர்ப்பை அமெரிக்க அதிபருக்கு காட்டிவருகிறாள். அவளின் படங்கள்தான் சோஷியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின், வெர்ஜினியாவில் வசிக்கும் மார்க் ரெட்ஃபெர்ன் (Mark Redfern), வெண்டி (Wendy)  தம்பதியினர் வாஷிங்டன் நகரில் நடக்கும் ட்ரம்ப்-க்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தயாராகிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் 4 வயது மகள் ரோஸ், தானும் வருவேன் என அடம்பிடித்தார். பெற்றோருக்கும் அவளை அழைத்துச் செல்ல விருப்பம்தான். ஆனால் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடம் வெகு தூரம் என்பதால் மறுத்தனர். போராட்டத்துக்கு வந்தே ஆவேன் எனக் கையில் பொம்மை ஒன்றுடன் புறப்பட்டு விட்டாள். அதைப் பார்த்ததும், அவள் அம்மாவுக்கு ஒரு ஐடியா தோன்றியது.

மகள் ரோஸிடம், "உன் பொம்மைகள் அனைத்தையும் எடுத்து வா" என்றார். எதற்கு அம்மா இப்படிச் சொல்கிறார் என யோசித்துக்கொண்டே பொம்மைகளை எடுத்து வந்து அம்மாவிடம் தந்தாள். பொம்மைகளுக்கு ஏற்ப சிறிய அளவில் ஸ்லோகன் போர்டுகளை உருவாக்கிய அம்மா, அதனை பொம்மைகள் பிடித்திருப்பதுபோல அதன் கைகளில் டேப் கொண்டு ஒட்டினார். உடனே ரோஸூம் அம்மாவுக்கு உதவியாக பொம்மைகளில் ஸ்லோகன் போர்டுகளை ஒட்டினாள். அம்மாவைப் பார்த்து தானே இரண்டு போர்டுகளை தன் மழலைத் தனத்தோடு உருவாக்கினாள்.

ட்ரம்ப்-க்கு எதிரான ஸ்லோகன் போர்டுகளைப் பிடித்திருப்பதுபோல் இருக்கும் பொம்மைகளோடு, தன் மகளும் அட்டைகளைத் தூக்கிப் பிடித்திருப்பதுபோல புகைப்படங்கள் எடுத்த ரோஸின் தந்தை தன் பேஸ்புக் பக்கத்தில் அவற்றை போஸ்ட் செய்தார். ட்ரம்ப் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தன் மகளும் எதிர்ப்பாளர் என்று தெரிவித்ததோடு, இன்றைய சூழலுக்கு ஏற்ப பிள்ளைகளைத் தயார் செய்வது பெற்றோர்களின் கடமை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் நான்கு வயது சிறுமியின் புகைப்படங்களைக் கண்டு, நெட்டிசன்களின் இடையே 4 வயது சிறுமியின் அசத்தலான ஐடியா  மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

- என்.மல்லிகார்ஜுனா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close