வெளியிடப்பட்ட நேரம்: 20:58 (10/02/2017)

கடைசி தொடர்பு:21:32 (10/02/2017)

2017 ஹோண்டா சிட்டி காரில் என்ன ஸ்பெஷல்?

காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று, 2017-ம் ஆண்டுக்கான சிட்டி செடான் காரைக் களமிறக்குகிறது ஹோண்டா. இதன் அதிகாரபூர்வ படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், தனது டீலர்களில் இந்த காருக்கான புக்கிங்கை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது ஹோண்டா. எனவே இதனை வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள், ஹோண்டாவின் டீலர்களிடம் புக்கிங் தொகையாக, 21 ஆயிரம் ரூபாயைச் செலுத்த வேண்டும். மிட் சைஸ் செக்மென்ட்டின் ராஜாவாக இருந்துவந்த ஹோண்டா சிட்டி காருக்கு,  மாருதி சுஸூகியின் சியாஸ் கடும் சவாலைத் தொடர்ச்சியாக அளித்துவருகிறது. மேலும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஸ்கோடா ரேபிட் மற்றும் ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ Highline Plus மாடல்களும் தற்போது போட்டிக்கு வந்துவிட்டன. கூடிய விரைவில் சியாஸ் பேஸ்ஃலிஃப்ட் மற்றும் முற்றிலும் புதிய வெர்னா ஆகிய கார்களையும் எதிர்பார்க்கலாம். எனவே தனது இடத்தைத் தக்கவைப்பதற்கான முயற்சியாக, சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரைப் பார்க்கிறது ஹோண்டா.

2017 ஹோண்டா சிட்டி

காரின் வெளிப்புறத்தில், முன்பக்க - பின்பக்க பம்பர்கள், ஹெட்லைட்ஸ், கிரில் ஆகியவை முற்றிலும் புதியதாக இருக்கின்றன. அதில் க்ரோம் கிரில்லுக்கு சப்போர்ட் தரும் விதமாக, DRL உடனான LED  ஹெட்லைட்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பனி விளக்கு மற்றும் டெய்ல் லைட்டிலும் LED மயம்தான்! போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, மெலிதான 15 இன்ச் வீல்களைக் கொண்டிருந்தது சிட்டி. தற்போது ஃபேஸ்லிஃப்ட்டில் அதனை 16 இன்ச்சாக உயர்த்தியிருக்கிறது ஹோண்டா. அதே போல, காரின் சஸ்பென்ஷனும் சொகுசுக்காக ரி-டியூன் செய்யப்பட்டிருக்கிறது. இது இரண்டும் சேர்ந்து, சிட்டியின் கிரவுண்ட் கிளியரன்ஸை 10 மி.மீ அதிகரித்திருக்கின்றன. பிரிமியம் லுக்கிற்காக, பின் பக்க ஸ்பாய்லரிலும் LED விளக்குகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இவை அனைத்தும் டாப் வேரியன்ட்களில் மட்டுமே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்! பழைய சிட்டியில் இருந்த ZX வேரியன்ட்டை, இப்போது 2017-ல் மீண்டும் தூசு தட்டியிருக்கிறது ஹோண்டா. இதில் பெட்ரோல் AT/ டீசல் MT ஆகிய இன்ஜின் ஆப்ஷன் இருக்கின்றன.

2017 ஹோண்டா சிட்டி

காரின் உட்புறத்தில் இருக்கும் புதிய 7.08 இன்ச் AVN டச் ஸ்கிரீனில், ஆப்பிள் கார் பிளே - ஆண்ட்ராய்டு ஆட்டோ - மொபைல் மிரரிங் ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் இருக்கின்றன. மேலும் விலை அதிகமான கார்களில் இருப்பதுபோல், சாட்டிலைட் நேவிகேஷனுக்கு வாய்ஸ் கமாண்ட் அசிஸ்ட் வசதியும் வரலாம் எனத் தெரிகிறது. முன்பு S தான் ஆரம்ப வேரியன்ட்டாக இருந்து வந்தது. ஆனால் தற்போது SV, V, VX, ZX என மொத்தம் நான்கு வேரியன்ட்கள்தான்! அனைத்து வேரியன்ட்டிலும் 2 காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக இருந்தாலும், ஹூண்டாய் வெர்னாவைப் போல சிட்டியின் டாப் வேரியன்ட்டில் 6 காற்றுப்பைகளை இம்முறை வழங்கியிருக்கிறது ஹோண்டா. இதனுடன் ஆட்டோ ஹெட்லைட்ஸ், ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ், லெதர் சீட், புஷ் பட்டன் ஸ்டார்ட், டச் கன்ட்ரோல் உடனான கிளைமேட் கன்ட்ரோல் ஏஸி, எலெக்ட்ரிக் சன்ரூஃப், எக்கோ மோடு, பேடில் ஷிப்ட் உடனான 7 ஸ்பீடு CVT, ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல்ஸ் என வசதிகளின் பட்டியல் நீள்கிறது. ஆனால் இன்ஜின்களில் மாற்றம் இருக்காது!

2017 ஹோண்டா சிட்டி

 - ராகுல் சிவகுரு.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்