‘பேராசைக்கு எதிரான சரியான தீர்ப்பு!’ - மிஸ்டர் K-யின் #WednesdayWisdom கதை | Its a clear judgment against greediness - Wednesday Wisdom - a short story by Mr. K

வெளியிடப்பட்ட நேரம்: 05:16 (15/02/2017)

கடைசி தொடர்பு:10:24 (15/02/2017)

‘பேராசைக்கு எதிரான சரியான தீர்ப்பு!’ - மிஸ்டர் K-யின் #WednesdayWisdom கதை

பேராசை பெருநஷ்டம் என்று பழமொழி சொல்லப்பட்டாலும், பேராசையை யாரும் விடுவதாக இல்லை. ‘உன் வயிற்றுப் பசிக்குப் பின்னும் நீ உண்ணும் உணவு இன்னொருவருடையது’ என்பதைப் படித்தாலும் யாரும் புரிந்து கொள்வதில்லை.

மிஸ்டர் K

பெரிய பெரிய சாம்ராஜ்யங்களே அழிந்தது, இந்தப் பேராசையின் காரணமாகத்தான் என்பது கண்கூடு. மகாபாரதம் சொல்லாத நீதி ஏதும் உண்டா என்ன?

பாண்டவர்களுக்கு நாட்டில் பாதி கொடு, ஐந்து நகரம் கொடு, ஐந்து கிராமமாவது கொடு என்று கிருஷ்ணன் தூதுவனாக வந்து கேட்டபின்னும், தன்னோடு சேர்த்து நூறு கௌரவர்கள் சிங்கங்களாக இருக்க, என்னை எதிர்ப்பவர் யார் என்று கர்ஜித்து, எதுவும் தரமுடியாது என்று அனுப்பினான் துரியோதனன். இறுதியில் என்ன ஆயிற்று?  தர்மமே வென்றது. 

சீனாவில் ஒரு கிராமம். அங்கே இருக்கும் மக்கள் எந்த நிலையிலும் அளவுக்கதிகமாகப் பொருட்களைச் சேர்க்க மாட்டார்கள். அதேபோல, தாங்கள் பயன்படுத்திய பொருட்களை சுழற்சி முறையில் பிறருக்குக் கொடுத்து உதவுவார்கள்.  ஒரு பொருளை வெகுகாலத்திற்குப் பயன்படுத்துவது போலத்தான் வாங்கவே செய்வார்களாம். எப்படி என்று ஓர் உதாரணம் சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். 

குளிர்பிரதேசம். பெரிய அளவிலான பூட்ஸ்களோடுதான் நடக்க முடியும். பனிப்பொழிவு இருக்கும். தங்கள் குழந்தைகளுக்கு பூட்ஸ் வாங்கும்போது, இரண்டு அல்லது மூன்று சைஸ் அதிகமான பூட்ஸ்கள்தான் வாங்குவார்கள். சாக்ஸ், அதிகமாக வாங்கிக் கொள்வார்கள். முதலில் 3 சாக்ஸ்கள் அணிந்து பூட்ஸ் அணிவார்களாம். பிறகு கொஞ்சம் வளர்ந்ததும் இரண்டு சாக்ஸ் அணிவார்கள். இப்படியே..  அதே போல, இவர்கள் குழந்தைகள் பயன்படுத்த முடியாத அளவு அவை சிறியதானதும், அக்கம்பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அளித்துவிடுவார்கள். இவர்களும் புதிதாக வாங்கும் முன், தங்கள் மகன் / மகளைவிட பெரிய வயதுள்ள குழந்தைகள் அக்கம்பக்கத்தில் இருந்தால், அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு, தேவைப்பட்டால் மட்டுமே  புதிதாக வாங்குவார்கள். இதனால் அந்த கிராமத்தில் திருட்டு என்ற ஒன்றே இல்லையாம். பேராசையற்ற ஊரில் திருட்டுக்கு என்ன தேவை இருக்கப் போகிறது.

நில்.. கவனி.. கற்பனை செய்... செல்லாதே!

பேராசையை ஒழிக்க ஒரு எளிய சூத்திரம் பயிலச் சொல்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். நில் கவனி.. கற்பனை செய்.. அதற்கு மேல் வேண்டாம் என்பதே அது. ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருக்கும். இதை ஒரு பயிற்சியாக எடுத்துக் கொண்டால், இட்ஸ் ஈஸி! 

உதாரணமாக நண்பர்களோடு, வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் இன்னொரு நண்பனைப் பார்க்கச் செல்கிறீர்கள். அவன் பெட்டி நிறைய பரிசுகள் வாங்கி வந்து, உங்கள் எல்லோர் முன்னாலும் கொட்டுகிறான். “இதெல்லாம் உங்களுக்குத்தாண்டா வாங்கிட்டு வந்தேன்” என்கிறான். ‘எது கிடைத்தாலும் சரி’ என்று நினைத்தால் அது ஆசை. அதில் உள்ள ஒரு பெரிய பொருள்தான் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் அது பேராசை. அப்படி ஒரு எண்ணம் வரும்போதே.. கற்பனை செய்ய ஆரம்பியுங்கள். ‘அதை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோம்’  என்று ஆரம்பித்து அந்தப் பொருள் அடுத்த ஐந்து வருடத்தில் என்ன ஆகும் என்று கற்பனை செய்ய ஆரம்பியுங்கள். சும்மா விளையாட்டுக்காகவெல்லாம் இல்லாமல், நிஜமாகவே அப்படி கற்பனை செய்தால், அதன் மீதிருக்கும் ஆவல் ‘ச்சே’ என்று காணாமல் போய்விடுமாம். 

 அது ஒரு கீபோர்ட் என்று வைத்துக் கொண்டால், மேற்சொன்ன மாதிரி கற்பனை செய்தபிறகு, “அஞ்சு வருஷம் கழிச்சு பரண்ல கெடக்கும். எடுத்துட்டுப் போனா என்ன.. எடுக்காட்டி என்ன..” என்று தோன்றிவிடுமாம். 

சரி.. பேராசையைக் கட்டுப்படுத்த வேறென்ன செய்யலாம்? ரெண்டே ரெண்டு விஷயங்களை, அடுத்த 6 மாதத்துக்கு கடைபிடியுங்கள்.

1. உங்கள் வீட்டில் உள்ள, நீங்கள் உபயோகப்படுத்தாத எதாக இருந்தாலும் அதை ஒரு பெட்டியில் போடுங்கள். இன்றிலிருந்து 7 நாட்கள். 7ம் நாள் மாலை, வீட்டில் அனைவரும் அமர்ந்து அந்தப் பெட்டியில் என்னென்ன இருக்கிறது என்று பாருங்கள். வேலை செய்யாத சார்ஜரில் ஆரம்பித்து, ‘நல்லாத்தான் இருக்குல்ல’ என்று நீங்கள் நினைக்கும் கேமரா வரை நிறைய இருக்கும். அவற்றைப் பிரித்து தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்து மகிழுங்கள். அடுத்தமுறை எதாவது வாங்கும் முன் இந்தக் காட்சி மனக்கண்ணில் வந்து மறையும். ஒருவாரம் கழித்து, மீண்டும் இதேபோல செய்யுங்கள். 6 மாதத்தில் வீடும் க்ளீனாகிவிடும்.. உங்கள் மனதும்!

2. ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி’ என்று கண்ணதாசன் சொன்னதுதான். யாரும் தாழ்வில்லை உலகில். ஆனால், உங்களைவிட செல்வத்தில் குறைந்தவர்கள் வீட்டுக்கு அன்போடு ஒரு விசிட் அடியுங்கள். மாதம் ஒரு விசிட் என்று வைத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் அபார்ட்மென்ட் வாட்ச்மேனாக இருக்கலாம். எதிர் சாலையில் நீங்கள் தினமும் பார்த்துச் சிரிக்கும் பூ விற்கும் பாட்டியாக இருக்கலாம். அப்படிச் செல்வதால், அன்பைப் பகிர்ந்து கொண்டதுபோலவும் இருக்கும். அவர்கள் வீட்டில் உள்ள பொருட்களைப் பார்த்து ‘நம் வீட்டில் இருப்பதெல்லாம் ரொம்ப ஓவர்தான்’ என்ற எண்ணத்தையும் உங்களுக்குத் தந்து, அதிக ஆசையைத் தடுக்கும். யார் கண்டார்கள்.. உங்களுக்கு மேல் இருக்கும் உங்கள் பாஸ் இதைப் படித்துவிட்டு உங்கள் வீட்டுக்கு வந்தாலும் வரலாம்! Be Ready! 

முடிக்கும் முன் வழக்கம்போல, மிஸ்டர்  K வந்தான். சசிகலாவுக்கும்கூட அட்வைஸ் செய்தவனாயிற்றே...  அவனிடம் இன்றைய டாபிக் குறித்து பகிர்ந்து கொண்டேன்; 

“பேராசை பற்றி ஏதும் குட்டிக்கதை ஏதும் இருக்கா மிஸ்டர் K?"

தீர்ப்பு

சிரித்தான். “தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வந்துவிட்டது அல்லவா? அதுனால தீர்ப்பு சம்பந்தப்பட்ட கதையையே சொல்றேன்” என்று ஆரம்பித்தான்.

ஒரு ஊர்ல ஒரு பெரும் பணக்காரன் இருந்தான். தன்கிட்ட இருக்கற ஏராளமான பணத்தை செலவு பண்ணாம, சேர்த்துகிட்டே இருந்தான். தங்கக்காசுகளா மாத்தி, சின்னச் சின்ன ஜாடில போட்டு அங்கங்க பதுக்கி வெச்சுப்பான். ஒரு தடவை அப்படி அவன் வெச்சிருந்த ஜாடி ஒண்ணு காணாமப் போச்சு. அதுல 50 தங்கக்காசுகள் இருந்தன. 

இவன் அக்கம்பக்கம், வேலையாட்கள்னு எல்லார்கிட்டயும் கேட்டான். கிடைக்கல. 

சிலநாட்கள் கழிச்சு, அந்தப் பணக்காரனுக்கு பக்கத்து தோட்டத்துல இருந்த ஒரு ஏழை விவசாயி வீட்ல இருக்கற பாப்பாவுக்கு ஒரு ஜாடி கெடைச்சது. அத அந்தப் பாப்பா அப்பாகிட்ட காமிச்சப்போ, “ஐயையோ இது அவரோடதாச்சே”ன்னு கொண்டுபோய் உடனே கொடுத்தாரு. 

அந்தப் பணக்காரர் “அப்பாடா”ன்னு மனசளவுல நெனைச்சாலும், அதுல இருக்கற காசுகள் எண்ணிக்கை சரியா இருக்குமானு சந்தேகம். எண்ணினார். 50 இருந்தது. ஆனாலும் எண்ணிட்டு இருக்கும்போதே அவர் மனசுல பேராசை பிடிக்க ஆரம்பிச்சது. எண்ணி முடிச்சதும், “ஐயோ இதுல 75 தங்கக்காசுகள் இருந்தது. ஆனா இப்ப 50தான் இருக்கு. இவன் எடுத்துட்டான்”னு சொல்லி அந்த ஏழை விவசாயியையும், அந்தப் பாப்பாவையும் மன்னர் முன்னாடி நிறுத்தினார். “75 தங்கக்காசு வெச்சிருந்தேன். இப்ப இந்த ஜாடில 50தான் இருக்கு” - இதான் பிராது!

மன்னர் கொஞ்சநேர  விசாரணையிலேயே,  ‘இவன் பேராசைக்காரன்.. பொய் சொல்றான்’னு  கண்டுபிடிச்சுட்டார். உடனே இப்படித் தீர்ப்பு சொன்னாராம்:

”அவர் தொலைச்ச ஜாடில  75 தங்கக்காசுகள் இருந்ததா உறுதியாச் சொல்றார். ஆனா இப்ப கிடைச்சிருக்கற ஜாடில 50தான் இருக்கு. ஆக இது அவர் தொலைச்ச ஜாடி அல்ல. அதுனால அந்த 75 இருக்கற ஜாடி கிடைக்கறவங்க என்கிட்ட வந்து கொடுக்கலாம். 50 தங்கக்காசு தொலைச்சதா யாரும் புகார் தராததால, இந்த 50 தங்கக்காசு இருக்கற ஜாடியை, இந்த விவசாயியின் நேர்மையைப் பாராட்டி அவருக்கே கொடுக்கறேன்”னு சொல்லிக் கொடுத்துட்டாராம்.
 

இதத்தான் ‘உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா’னு எங்க பாட்டி சொல்லுவாங்க!”  

​சொல்லிவிட்டு கெக்கபெக்கவென்று சிரித்தான் மிஸ்டர் K! 

-பரிசல் கிருஷ்ணா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்