‘நாங்க சபதம் எடுத்தா நாடு தாங்குமா?’ - இது ‘பெருந்தலை’களின் சபத சீரிஸ்! | A satire article about sasikala's vows at Jayalalithaa memorial

வெளியிடப்பட்ட நேரம்: 10:24 (16/02/2017)

கடைசி தொடர்பு:10:40 (16/02/2017)

‘நாங்க சபதம் எடுத்தா நாடு தாங்குமா?’ - இது ‘பெருந்தலை’களின் சபத சீரிஸ்!

'சின்னம்மா' சசிகலா பெங்களூருக்குப் போய் சரண் அடையறதுக்கு முன்னாடி ஜெயலலிதா சமாதிக்குச் சென்று ஓங்கி அடித்துச் சபதம் ஏற்றுள்ளார். 'சின்னம்மா' என்ன நினைத்து சபதம் எடுத்துக்கிட்டாங்களோ தெரியலை... நம்ம அரசியல் 'பெருந்தலை'களும் சபதம் எடுத்தா, எப்படி இருக்கும்னு யோசிச்சதோட வினை. இந்த சபத சீரிஸ்...

சபதம்

வைகோ :

கிரேக்கப் பேரரசின் வரலாற்றிலும், ஹரப்பா பண்பாட்டின் நாகரிகத்திலும் இதே போன்றதொரு வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது. சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அதைப்போன்ற ஒரு தருணத்தில் ரோமானியர்கள் தங்களைக் காக்க யாருமில்லையா என ஏதென்ஸ் நகரத்தின் சுவர்களில் மோதும் அளவுக்குக் கதறினர். இடிமுழக்கம் போன்ற அந்தத் தம்பிகளின் குரல்கள் கணீரென என் காதில் ஒலித்தபோதே தமிழகத்தின் முதல்வராக நான் தலைமையேற்கச் சபதம் ஏற்றுவிட்டேன். இப்போது கதிர் அருவாளைக் கையில் பிடித்து சீமைக்கருவேல மரங்களைச் சீவிக்கொண்டிருப்பதற்குப் பின்னால் நான் மக்களுக்குக்காக ஏற்றுக்கொண்ட சபதம் இருக்கிறது. தொண்டர் படை துணையிருக்க எதிர்வரும் துன்பங்களைத் துண்டுதுண்டாக்கி நான் நினைத்த சபதத்தை முடிப்பேன்!

டி.ராஜேந்தர் :

'ஒரு தாயின் சபதம்'னு அன்னிக்கே நான் படமே எடுத்தவன். எவன் எங்கே போனாலும் கடைசியா இந்த டி.ஆருகிட்ட வந்துதான் ஆகணும். சபதத்தை உலகம் பூராவும் கொண்டுபோய்ச்சேர்க்க தம்பி சிம்புவை ஒரு பாட்டு பாடச் சொல்றேன். அது உங்களுக்குப்பிடிச்ச `சபத ஆந்தம்... அது ஏமாற்றுக்காரர்களுக்கு எதிரான வதம்... ஊழலுக்கு எதிரான வதம்... ஆட்சியைப் பிடிக்கத் துடிப்பவர்களுக்கு கதம். இது தங்கச்சிகளைக் கொடுமைப்படுத்தும் மாமியார்களுக்கு எதிரான ரதம். அதனால நானும் எடுப்பேன்டா சபதம். ஏ டண்டணக்கா டணக்குணக்கா..!

சீமான் :

இன்னிக்கு வந்து ஆளாளுக்கு சத்தியம்கிறான், சபதம்கிறான்... முப்பாட்டன் முருகன் அன்னிக்கு அவன் அப்பன்கிட்ட கோவிச்சிக்கிட்டு மலையேறினது எதுக்கு... இந்தச் சபதம்தான்கிறேன். இப்போவெல்லாம் பள்ளிக்கூடத்துல பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறான், 'உங்க அம்மா ப்ராமிஸ்... அப்பன் ப்ராமிஸ்'னு. வந்தேறிகதான் சத்தியத்தை இங்கிலீஸ்ல சொல்வான். 'இந்தத் தமிழ் மேல் ஆணை'னு அன்னைக்கே சொன்னான் என் பாட்டன். சபதம் வந்தேறி வார்த்தை. ஆணைனு சொல்லி ஓங்கி அடிங்க ஒறவுகளே... 

சபதம்

கார்த்திக் :

ஹாய் ட்யூட்ஸ்... உன் மேல ப்ராமிஸ்ஸா நான் யாரையும்.. ஸாரி ஸாரி. ஆமா நான் இப்போ என்ன சொல்லணும்? உள்ளாட்சித் தேர்தல்தான் இன்னும் வரலையே... அதுக்குள்ளே என்னை யாரு மேன் எழுப்பினது? காதுக்குப் பக்கத்துல வந்து பீப்பியை ஊதாதேன்னு உனக்கு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன். என்ன நான் சபதம் எடுக்கணுமா..? சரி ஏப்ரல் மாசம் வரையும் கண்ண மூடிக்கிட்டே இருக்கேன்னு சத்தியம் பண்ணிடவா? ஹேய்... என்ன ப்ரோ தூங்குனவனை எழுப்பி வில்லங்கம் பண்றீங்க..? உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும்போது எழுப்புங்கய்யா. இது உங்க மேல சத்தியம். அஸ்குபிஸ்கு..!

சரத்குமார் :

நீங்க எல்லாம் சபதம் எடுக்கும்போது மட்டும் உண்மையைப் பேசுவீங்க. நானெல்லாம் அப்படியே சபதமாவே வாழ்றவன். 'உண்மைத் தமிழனா இருந்தா ஷேர் செய்யவும்'னு ஒருத்தன் ராத்திரி பன்னெண்டு மணிக்கு மெசேஜ் அனுப்புனதுக்கே ரெண்டு நாளா தூங்காம பதினைஞ்சாயிரம் பேருக்கு ஃபார்வர்டு பண்ணுனவன்லே நானு. 'சத்தியம்தான் நான் படித்த புத்தகமம்மா... சமத்துவம்தான் நான் படித்த தத்துவம்மா' னு தலைவர் பாடினதுக்காகத்தான் நம்ம கட்சிக்கே 'சமத்துவ மக்கள் கட்சி'னு பேர் வெச்சேன். அது தெரியுமாலே உங்களுக்கு... நீதிடா நேர்மைடா நியாயம்டா!

ஸ்டாலின் :

சபதம் எடுக்கிறதெல்லாம் இப்போ விளையாட்டு ஆகிப்போச்சு. 'ஜெயா சொன்னதும் பொய்யே பொய்யே...'ன்னு நான் பாட்டுப் பாடினது இதுக்குதான். உடன்பிறப்புகளோடு சேர்ந்து ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னாடியும் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவோம்னு சபதம் எடுப்போம். வழக்கம்போல இப்பவும் உள்ளாட்சியில் நல்லாட்சி அமைப்போம்னு சபதம் எடுப்போம். இந்த முறை கொஞ்சம் வித்தியாசமா 'நான் முதல்வரா பதவி ஏற்பேன்'னு ஒரு சபதம் எடுக்கப் போறேன். நமக்கு நாமே!

 

- விக்கி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்