வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (16/02/2017)

கடைசி தொடர்பு:12:23 (16/02/2017)

7 வயது சிறுமிக்கு சுந்தர் பிச்சையின் ஆச்சர்யப் பரிசு!

லகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் சுந்தர் பிச்சை. உலகில் பணியாளர்கள் உற்சாகமாக பணிபுரியும் நிறுவனமாக கூகுள்தான் திகழ்கிறது. 'கூகுளில் வேலை கிடைத்துவிடாதா?' என ஏங்காத டெக்கிகளே இல்லை எனலாம். ஆயிரக்கணக்கானோர் அந்நிறுவனத்தில் வேலைக்குச்சேர முயற்சி செய்துகொண்டிருக்க, இங்கிலாந்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி அனுப்பிய அப்ளிகேஷனுக்கு கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை அனுப்பிய பதில் கடிதம்தான் இணையத்தில் தற்போது டாப் 'வைரல்'.

தந்தையுடன் க்ளோயி!

க்ளோயி ப்ரிட்ஜ்வாட்டர் (பேர் தாங்க!) என்ற அந்த சிறுமி எழுதிய கடிதம் இதுதான்.

"என் பெயர் க்ளோயி. நான் பெரியவளானதும் கூகுள்ல வேலை செய்ய விரும்புறேன். எனக்கு சாக்லேட் ஃபேக்டரில வேலை செய்யவும், ஒலிம்பிக்கில் நீச்சல் செய்யவும் கூட விருப்பம். கூகுள்ல வேலை கிடைச்சா பீன் பேக்ல உட்கார்ந்து சறுக்கி விளையாடலாம்ன்னு என் அப்பா சொல்றாரு. எனக்கு கம்ப்யூட்டர் ரொம்ப பிடிக்கும். என்கிட்ட டேப்லட்டும் இருக்கு. நான் அதுல கேம்ஸ் விளையாட்றேன். என் அப்பா தந்த ஒரு கேம்ல ரோபோவ கட்டத்துக்கு மேலயும் கீழயும் நகர்த்தனும். இந்த கேம் விளையாடினா கம்ப்யூட்டர பத்தி அதிகம் தெரிஞ்சுக்கலாம்ன்னு என் அப்பா சொல்றாரு" என்றெல்லாம் அந்தக் கடிதம் போகிறது.

அந்தக் கடிதத்தில் இறுதியாக 'கூகுள்ல வேலை கிடைக்கனும்ன்னா உங்களுக்கு அப்ளிகேசன் அனுப்பனும்னு என் அப்பா சொன்னார். எனக்கு எப்படி அப்ளிகேசன் அனுப்பறதுன்னு தெரியல. ஆனா லெட்டர் எழுதுனா போதும்ன்னு என் அப்பா சொன்னார். என் லெட்டர படிச்சதுக்கு நன்றி. நான் இதைத்தவிர இன்னும் ஒரேயொரு லெட்டர் மட்டும் தான் இதுவரைக்கும் எழுதிருக்கேன். அதுவும் கிறிஸ்துமஸ்க்காக என் அப்பாவுக்கு எழுதியது. Good Bye"

என க்யூட்டாக எழுதி அனுப்பியிருக்கிறாள் க்ளோயி.

ஓய்வே இல்லாமல் உலகைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை, இந்தக் கடிதத்துக்கு பதில் கடிதம் அனுப்பி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். 'டியர் க்ளோயி, உன் கடிதத்துக்கு மிகவும் நன்றி. உனக்கு கம்ப்யூட்டரும் ரோபோவும் பிடிக்கும் என்பதில் மகிழ்ச்சி. தொழில்நுட்பம் குறித்து நீ படிப்பைத் தொடருவாய் என நம்புகிறேன். நீ கடினமாக உழைத்து உன் கனவுகளைப் பின்தொடர்ந்தால், கூகுளில் வேலை கிடைப்பதிலிருந்து ஒலிம்பிக்கில் நீச்சல் செய்வது வரை உனது அனைத்து எண்ணங்களும் நிறைவேறும்.  உன் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு உன் அப்ளிகேஷனைப் பரிசீலிக்கிறேன்' எனக் கடிதம் எழுதி இறுதியில் ஸ்மைலியோடு முடித்திருக்கிறார். பாசிட்டிவ் சிந்தனைகளால் அனைவரிடத்திலும் தன்னம்பிக்கையை விதைக்கும் சுந்தர் பிச்சையின் இந்தக் கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை அனுப்பிய பதில் கடிதம்

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அந்தச் சிறுமியின் தந்தை கூகுளில் வேலை செய்ய மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. 'என் மகள் விளையாட்டாக எழுதிய கடிதத்துக்கு, கூகுளில் இருந்து இப்படியொரு பதில் வரும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை' என சந்தோஷத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார் க்ளோயின் தந்தை.

என்ன பாஸ் நீங்களும் கூகுள்ல வேலைக்குச்சேர சுந்தர் பிச்சைக்கு அப்ளிகேசன் அனுப்பப் போறீங்களா? ஆல் த பெஸ்ட்!

- கருப்பு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்