வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (16/02/2017)

கடைசி தொடர்பு:16:06 (16/02/2017)

தீபாதான் 'அம்மா'வின் அரசியல் வாரிசாம்... இருக்கு... - இருக்கு... காரணம் இருக்கு!

'ஜெயலலிதாவுக்குப் பக்கத்திலேயே இருந்து பார்த்துப் பார்த்து எல்லா உதவிகளையும் செய்தது நான்தான். எனவே, நான்தான் அவரது ராணுவக் கட்டுப்பாட்டில் வளர்ந்த கட்சியைச் சரியாக வழி நடத்த முடியும்' என 'சின்னம்மா' கண்ணீரும் கம்பலையுமாகப் பேச 'ஆமாம்மா... சின்னம்மாதான்... நான் பார்த்தேன்' என கோரஸ் பாடினார்கள் சின்னம்மா வகையறாக்கள். 'இதெல்லாம் ஒரு தகுதியாம்மா..?' என எக்குத்தப்பு சித்தப்புவாகக் கிளம்பியது எதிர்த் தரப்பும் தீபா ஆதரவாளர்கள் தரப்பும்.

தீபா

'அப்ப நாங்க மட்டும் என்ன சொம்பைகளா...? என இளம் புரட்சித் தலைவி தீபாவும் அதே ரூட்டில் கிளம்பினால் என்ன ஆகும்? தீபாம்மா 'ஜெயலலிதாவுக்கு எந்தெந்த வகையில் உதவி புரிந்து இருக்கிறார் எனத் தெரிந்துகொண்டால் உச்சிமுடி சிலிர்க்க, 'தீபாம்மா'தான் முதல்வரா வரணும்னு நீங்களும் சொல்ல ஆரம்பிச்சிடுவீங்க. 

* முதன்முதலா ஜெயலலிதா அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச் செயலாளராகப் பதவியேற்ற அன்னிக்குக் காலையில மல்லிகைப்பூ இட்லி செஞ்சு சாப்பிடச் சொன்னது 'சின்னம்மா'ன்னா அன்னிக்கு மடியில் உட்கார்ந்துக்கிட்டு அத்தைக்கே ஆசிர்வாதம் பண்ணின அற்புதக் குழந்தைதான் நம்ம 'தீபாம்மா'.

* மாண்புமிகு 'அம்மா' முதன்முதலா முதல்வர் பதவியேற்ற அன்னிக்கு அவரை வாழ்த்தி வழியனுப்பி வெச்சது 'சின்னம்மா'ன்னா, அன்னிக்கு அதிகாலையிலேயே அலாரம் வெச்சு 'அம்மா'வையே எழுப்பிவிட்டது யாரு.. 'இளைய தங்கத் தாரகை'யே தான் பாஸ்!  

* தீபாம்மா' பார்க்கிறதுக்கு அச்சு அசல் அம்மாவோட அடுத்த அப்டேட்டட் ஆண்ட்ராய்டு வெர்ஷன் மாதிரியே இருக்கிறது மட்டும் இல்லாம பேசும்போதும் அம்மா குரலில் மிமிக்ரி செய்ற ஸ்டாண்ட்-அப் காமெடியன் மாதிரியே இருக்கிறது போதாதா? இதுக்கு மேலேயும் என்ன தகுதி வேணும்?

* அம்மாவின் தாரக மந்திரமான 'மக்களால் நான்... மக்களுக்காகவே நான்!' டயலாக்கை அரைகுறையாகக் கேட்டதன் பலன்தான் இப்போ தீபா உருக்கமாகப் பேசும் 'உங்களுக்காகவே நான் இருக்கிறேன்' வசனம் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? ஜெயா = தீபா. Hence proved.

ஓ.பி,எஸ் சந்திப்பு

* 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' ங்கிறதுதான் உலக வழக்கம். அதேபோல ஜெயலலிதாவின் குடும்ப வாரிசுகளில் ஒருவரான தீபக், சசிகலா பக்கம் இருக்கிறதனால 'தீபக் இல்லைனா தீபா'னு அ.தி.மு.க விதிகளை மாற்றின மாதிரி சொலவடையை மாற்றிப் பதவி கொடுக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்...

* குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படணும்னு சொல்வாங்க. 'தீபா நான் தூக்கி வளர்த்த பொண்ணு'னு அரசியல் சாணக்கியர் (!) வைகோவே சொல்லிட்டார். ஏழெட்டு பிறவிகளுக்கு முன்னாலேயே ரோமானியப் பேரரசரா இருந்த வைகோ தூக்கி வளர்த்த தகுதிக்கு மேலேயும் வேற எதுவும் வேணுமா? 

* ஜெயலலிதா கூட்டத்தில் பேசும்போது, ரத்தத்தின் ரத்தங்களை 'இருகரம் கூப்பி வணங்குகிறேன்'னு சொல்வாங்க. தாய் வழி வந்த தங்கமான தீபாவும் இப்போ, 'நானும் ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்தையும் கட்சியையும் காக்கும் இரு கரங்களாகச் செயல்படுவோம்'னு சொல்லியிருக்காங்க. இதுலேர்ந்து என்ன தெரியுது? அம்மாவும் தீபாம்மாவும் ஒண்ணு... அதை அறியாதவன் வாயில மண்ணு!

- விக்கி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்